Published : 03 Apr 2014 10:33 AM
Last Updated : 03 Apr 2014 10:33 AM
நம் நாட்டைக் காப்பாற்றப்போவது யார் என்ற ஜனநாயகப் போராட்டம் அடுத்த சில நாட்களில் - நம்முடைய பெரும்பாலான ஆண் அரசியல்வாதிகளுக்கிடையே - தீவிரமடைந்துவிடும். நம்முடைய மக்களில் ‘பாதிப் பேர்’ (அதாவது பெண்கள்) - எதிரிகளாலோ பயங்கரவாதிகளாலோ அல்லாமல் நம்முடைய மக்களாலேயே - ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நம் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்களில் ஒருவர்கூடக் கேள்வி எழுப்பப்போவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு என்பது அதன் மக்கள்தொகையில் 48% ஆக இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதான்.
பெண் குழந்தைகளை அவர்கள் கருவாக வயிற்றில் உருவான நேரத்திலேயே அழிப்பதிலிருந்து அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் தொடங்குகின்றன. ‘பெண்’ என்ற ஒரே காரணத்துக்காகவே இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் கருக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அழிக்கப் படுகின்றன என்று ‘பாலின சமத்துவம், வளர்ச்சி’ என்ற தலைப்பிலான அறிக்கையில் உலக வங்கி தெரிவிக்கிறது.
‘தேசியக் குடும்பநல மக்கள்தொகைக் கணக்கெடுப்பு’ தரும் தகவல்கள் அச்சமூட்டுகின்றன. பிரசவத்துக்குப் பிறகு இறக்கும் குழந்தைகளில் 1,000-க்கு 21 பெண் களாக இருக்கும்போது 15 மட்டுமே ஆண்களாக இருக்கிறது. ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளின் இறப்பு விகிதம்: ஆண் குழந்தைகள் 1,000-க்கு 14, பெண் குழந்தைகள் 23.
பெண்ணின் மதிப்பு இவ்வளவுதானா?
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் 27 மாநிலங் களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் கணிசமாகக் குறைந்துள்ளது. போனால் போகட்டும் என்று விட்டு வைக்கப்படும் பெண் குழந்தைகளில் கோடிக் கணக்கான வர்கள் அவர்களுடைய அண்ணன், தம்பிகளைவிடக் குறைவாகவே உணவையும் கல்வியையும் பெறுகின்றனர். ஆண் பிள்ளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக, பெண் பிள்ளையைச் சுமாரான பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றனர் அல்லது படிப்பைவிட்டு நிறுத்துகின்றனர்.
ஆண் பிள்ளைகளுக்குத்தான் முதலிலும் உயர் வாகவும் எல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வீடுகளில் வளர்த்து, ஆண் குழந்தைகளிடம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்துவிடுகிறோம். பெண் என்பவள் அடங்கி நடக்க வேண்டும், தியாகம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பழக்கு கிறோம். வீடுகளில் பெண் குழந்தைகளை தாய், தந்தையரும் இதர உறவினரும் எத்தனை முறை அடிக்கிறார்கள், எதற்கெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள் என்று நாம் எந்த கணக்கெடுப்பும் நடத்துவதில்லை.
அப்படி நடத்தினால், பெண் குழந்தை அடிபடாத நாளோ சந்தர்ப்பமோ இல்லை என்ற புள்ளிவிவரமே கிடைக்கும். பெண்ணை போகப் பொருளாக மட்டு மல்ல, அடிமையாகவும் வேலை செய்வதற்கான இயந்திரமாகவும் கேலிப்பொருளாகவும்கூடப் பார்க்கும் குடும்பத்தினர், இதில் தவறு இருப்பதாக என்றுமே நினைப்பதில்லை.
பாலியல் அத்துமீறல்
‘மகளிர் நலன், குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச் சகம்’, குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதுகுறித்து தேசிய அளவில் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் திரட்டி அறிக்கையாக 2007-ல் அளித்தது. அமைச்சகம் பேட்டி கண்ட பெண் குழந்தைகளில் 53%, ஒரு முறையோ ஒன்றுக்கும் மேற்பட்ட முறையோ பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான அத்துமீறல்களைச் செய்வது குழந்தை களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்து வீட்டார், குடும்ப நண்பர்கள் போன்றவர்களே.
சின்னஞ்சிறுமிகளிடம் நடத்தப்படும் இந்த சில்மிஷங்கள் அவர்கள் பெரியவர்களான பிறகும் தொடர்வதையே ‘தேசியக் குற்றங்கள் பதிவேட்டு அறிக்கை’ உறுதி செய்கிறது. 2012-ல் நாடு முழுக்க 24,923 பாலியல் வல்லுறவுப் புகார்கள் பதிவாயின. இவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 98% பேரைப் பாதிக்கப்பட்ட பெண்களால் எளிதில் கூற முடிகிறது. பெண்ணைப் பற்றி சிறு வயதில் பையன்கள் மனதில் உருவேற்றப்படும் பிம்பமே பிற்காலத்தில் இந்தக் கொடுமைகளுக்குக் காரணமாகிறது.
16 வயது
இன்னமும் பெரும்பாலான இளம் பெண்களின் திருமண வயது 16 ஆகவே இருக்கிறது. பிறந்த வீட்டிலும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்டு, வாழ்க்கை அனுபவமே பெற்றிராத நிலையில், கணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கும் அடிமை யாக்கப்படுவது தொடர்கிறது. அத்துடன் மிக இளம் வயதிலேயே கருவுற்று ஊட்டச்சத்துக் குறைவுடன் பிரசவத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பெண்கள், அதிலும் ஏழைப் பெண்கள் மகப்பேறு காலத்தில் பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும்போது, போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததுடன் வீட்டிலும் வெளியிலும் கடுமையாக வேலைவாங்கப்படுகிறார். பிரசவத்துக்கு ஓரிரு வாரங்கள் முன்னால் வரையிலும்கூட உழைக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.
2001-ம் ஆண்டில் பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் விகிதம் லட்சத்துக்கு 301 ஆக இருந்தது. இந்த ஆண்டு இந்த விகிதம் லட்சத்துக்கு 200 என்று குறைந்திருக்கிறது. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. பிரசவத்தின்போது சுமார் 54,000 பெண்கள் இறந்துவிடுகிறார்கள்.
திறந்தவெளியே கழிப்பிடம்
உலகிலேயே திறந்தவெளியைக் கழிப்பிடமாக அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். கழிப்பிடத்துக்குச் செல்லும் வழியில் இளம் பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதும் இங்கு வழக்கமாக இருக்கிறது. பெருநகரங்களில் குடிசைவாழ் பெண்களுக்கு இது மாபெரும் பிரச்சினை. பள்ளிக்கூடங்களில் கழிப்பறை இல்லாததாலேயே, வயதுவந்த பெண்கள் தங்களுடைய படிப்பைத் தொடராமல் கைவிடுகின்றனர்.
சமுதாயத்தின் எண்ணம்
ஆண்கள் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும், அவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆண்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றெல்லாம் பெண்களுக்கு இளம் வயதிலேயே போதிக்கப்படுகிறது. திருமணமான பெண்களில் 40% பேர் கணவனால் அடிக்கப்படுகின்றனர்.
கணவனிடம் சொல்லாமல் வெளியில் போனாலோ, அவருடன் வாக்குவாதம் செய்தாலோ, தாம்பத்திய உறவுக்கு அழைக்கும்போது செல்ல மறுத்தாலோ, சமையல் சரியாக இல்லாவிட்டாலோ, வேற்று ஆடவரோடு பேசினாலோ, மாமனார் - மாமியாரை மரியாதையாக நடத்தாவிட்டாலோ கணவன்மார்கள் அடிப்பதாகவும், அது சரிதான் என்றும் அடிபடும் பெண்களில் 54% ஒப்புக்கொள்கின்றனர். இதுதான் சமுதாயத்தின் எண்ணமாகவும் இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
பாலியல் தொழிலுக்காக இளம் பெண்கள் கடத்தப் படுவது, வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் ஈடுபடுத்துவது, சிறுமிகளைப் பிச்சை எடுக்கவும் பாலியல் தொழிலுக்கும் பழக்கப்படுத்துவது, கடனுக்கு ஈடாக வீட்டு வேலை செய்ய அனுப்புவது, வேற்று மாநிலம் அல்லது நாட்டவருக்கு விற்பது என்ற அவலங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இளம் வயதுப் பெண்களைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துகொடுப்பது, விரும்பிய பையனுடன் பழகுவதற்காகக் அடித்து நொறுக்குவது அல்லது குடும்ப கௌரவத்துக்காகக் கொலை செய்வது, வரதட்சிணை கொண்டுவரவில்லை என்பதற்காகக் கொடுமைப்படுத்துவது, பெண் குழந்தையைத் திட்டுவது, கருத்தடை சிகிச்சைகளைப் பெண்களுக்கு மட்டுமே திணிப்பது என்று கொடுமைகளுக்குப் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகிறது.
நலிவுற்ற பிரிவினரும் ஏழைகளும்தான் அதிகக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். படித்தவர்கள், பணக்காரர்கள்கூடத் தங்களுடைய குடும்பத்துப் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை, பெண் என்பதால் அவர்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற மனோநிலையில்தான் அணுகுகின்றனர். பெண்களுடைய நிலை மாற வேண்டும் என்றால், அவர்களுக்குக் கல்வி புகட்டப்பட வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் அவர்களுடைய பிரதிநிதித்துவம் அதிகமாக வேண்டும், அதிகாரம் உள்ள பதவிகளுக்குப் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT