Published : 07 Nov 2014 09:08 AM
Last Updated : 07 Nov 2014 09:08 AM
ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார் அந்தப் பெண். முகம் நிறையக் கனிவு. அவ்வப்போது எஃப்.எம். ரேடியோக்களில் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறார். அவரது கனிவான பேச்சு, கேட்போரைக் கலங்கச் செய்கிறது. அவரது பழைய ரேடியோ பேச்சின் பதிவு ஒன்றைப் போட்டுக்காட்டினார்.
“என் பேரு சத்யா. என் ஊர் தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி. என் அம்மா பேரு அருள்தாயி. அப்பா பேரு பிச்சை. ஒன்பதாவது படிக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி முதல் முறையா எங்க ஊருக்கு ஒரு சாராயக் கடை வந்துச்சாம். அதுவரைக்கும் குடிப்பழக்கம் இல்லாத எங்கப்பா தினமும் போய்க் குடிக்க ஆரம்பிச்சார். எனக்கு ஓரளவு விவரம் தெரிஞ்ச வயசு அது. அவர் குடிக்கிறது மட்டுமில்லாம, வயல்ல வேலை செஞ்சவங்க, கூட்டாளிகளையும் கூட்டிட்டுப் போய்க் குடிக்க வாங்கிக்கொடுத்தார். இப்படியே வயல், வீடு எல்லாத்தையும் வித்துட்டாரு. ஒருநாள் வீட்டுல ரத்த வாந்தி எடுத்தாரு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனா ஈரக்கொலை வெடிச்சு செத்துட்டாருன்னாங்க டாக்டர்மாருங்க. அப்பா இறந்த துக்கத்துல அம்மாவும் கொஞ்சம் வருஷம் முன்னாடி நோய்வாய்ப்பட்டு இறந்துட்டாங்க. நான் இப்ப அநாதையாக நிக்கேன். இதுக்கெல்லாம் எது காரணம்? குடிதான. அதனால, இனிமே குடிக்க மாட்டோம்னு சத்தியம் எடுத்துக்கோங்க. உங்க பிள்ளைங்களை என்னை மாதிரி அநாதையாக்கிடாதிங்க” முடிக்கிறார் சத்யா.
எஃப்.எம். சேனல் நேரலையிலேயே தொடர்புகொள்ளும் நேயர்கள் அவரிடம் குடிக்க மாட்டோம் என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார்கள்.
சத்யாவிடன் பேச்சுகள் கனமானவை. அவரிடம் “அப்பா மீது கோபம் இல்லையா?” என்று கேட்டேன். “பரவாயில்லை சார், பெத்த அப்பன்தானே. போகட்டும். என்னா, குடிச்சிப்போட்டு வரும்போது எடக்கா பேசினாதான் போட்டுச் சவட்டி எடுக்கும். அதுக்கு, கறி, வெஞ்சனம் எல்லாம் வெச்சிட்டா ஒண்ணும் செய்யாது” என்கிறார்.
“எப்பவும் சிரிச்ச முகமா இருப்பா சார். யாராச்சும் வஞ்சாகூட அதுக்கும் சிரிப்பா” என்கிறார்கள் உடன் படிக்கும் மாணவிகள்.
குடிநோய் சார்ந்த மனநல மருத்துவம் குறிப்பிடும் ‘அனுசரித்துப்போகும் குழந்தை’ சத்யா. எப்படி அவர் இப்படி மாறியிருப்பார்? குடிநோயாளியின் ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறது குழந்தை. கேள்வி கேட்டால் அடி விழுகிறது. பணிந்துபோனால் சரியாகிவிடுகிறது. இதை உள்வாங்கும் குழந்தையின் ஆழ்மனம் அதற்கு அப்படியே பழகிவிடுகிறது. இப்படியாக மாறும் குழந்தைகள் பொதுவாகவே, எங்கும் அனுசரித்துப்போய்விடுவார்கள். இதன் பெயர் அனுசரித்துப்போவது அல்ல. அறிவு வளர்ச்சியின் தேக்கம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
ராஜாவின் அப்பா கடும் முரடர். வீட்டுக்குள் நுழையும்போதே ரகளை. குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வரும்போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். ஆனால், சிறுவனான ராஜாவிடம் அந்தக் கவலையெல்லாம் எதுவும் இல்லை. அப்பாவைப் பற்றி அவனிடம் கேட்டால் “அப்பா செத்துட்டாரு தெரியுமா? இப்பல்லாம் அடியே விழுறது இல்லை” என்று குட்டிக்கரணம் அடிக்கிறான். அதிபுத்திசாலியான இவன் கோமாளிக் குழந்தையாக்கப்பட்டவன். எப்படி? வீட்டில் பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன்பே சூழலைச் சரிசெய்வது. குட்டிக்கரணம் அடிப்பது, குடித்துவிட்டு வரும் அப்பாவின் தலைமீது ஏறி அமர்ந்து கொஞ்சுவது என்று சூழலைச் சுமுகமாக்கத் துடிக்கும் குழந்தை இவன்.
தமிழ்ச்செல்விக்குக் கோபம் மிகவும் அதிகம். முரட்டுக் குழந்தை அவள். பாவம், தனது தாய் இறந்துவிட்டார் என்பதை அறியாமல் இருநாட்களாகத் தாயின் மார்பைச் சப்பிக்கொண்டிருந்தவள். நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று கருதப்படும் இவளை போலீஸார்தான் மீட்டு, பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். குடிநோயாளியின் முரட்டுத்தனத்தை, அடாவடியைப் பார்த்து அதை அப்படியே பிரதிபலிக்க முயலும் குழந்தை இவள். தமிழ்ச்செல்வியை அப்படி ஆகாமல் பார்த்துக்கொள்வார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இப்படி வளரும் குழந்தைகள்தான் எதற்கும் அடங்காமல் சுற்றுபவர்களாக உருவெடுக்கிறார்கள்.
ஆல்கஹாலிக் அனானிமஸ், அல் - அனான் எல்லாம் பார்த்தோம். குழந்தைகளுக்கு? இருக்கிறது, அல்லட்டீன் (Alateen). அல் - அனானின் ஒரு பகுதியாக இயங்குகிறது குழந்தைகளுக்கான இந்த அமைப்பு. ஆல்கஹாலிக் அனானிமஸ்போல பிரபலமாகவில்லை என்றாலும் உலகம் முழுவதும் இவர்களுக்கான மன மீட்புக் கூட்டங்களும் நடக்கின்றன. “கணவனைப் பிடிக்கவில்லை எனில், மனைவி விவாகரத்து கேட்கிறார். மனைவியைப் பிடிக்கவில்லை எனில், கணவன் விவாகரத்து கோருகிறார். ஆனால், குடிநோயாளியாக இருக்கும் தந்தை/தாயைப் பிடிக்கவில்லை எனில், குழந்தைகள் அப்படிக் கேட்க முடியுமா? இவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு” என்கிறார் அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர். ஆனால், ஆல்கஹாலிக் அனானிமஸ்போல அல்-அனான் மற்றும் அல்லட்டீன் அமைப்புகள் இன்னமும் உள்கட்டமைப்பு வசதிகளை இங்கு பெற முடியவில்லை.
“சுமார் 30 பெண்கள் அமர்ந்து கலந்தாலோசிக்கக்கூட இடம்தர மறுக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளின் சமுதாய நலக்கூடத்தை வாரம் சில மணி நேரம் கொடுத்தால்கூடப் போதும்” என்று ஆதங்கப்படுகிறார் பெண் உறுப்பினர் ஒருவர். தமிழகத்தில் குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்டிருப்பது குடும்ப நோயாளிகளான அவர்களின் மனைவிகளும் குழந்தைகளும்தான். அவர்களை மீட்கவாவது இதுபோன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை என்றாலும், எண் 17, பால்ஃபோர் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்கிற முகவரியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை குழந்தைகளுக்கான கூட்டங்கள் நடக்கின்றன. தொடர்புக்கு: 044 26441941.
பின்குறிப்பு: குழந்தைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT