Published : 24 Sep 2013 09:35 AM
Last Updated : 24 Sep 2013 09:35 AM
ராபர்ட் ஓவன் இவான்ஸின் தலை எப்போதும் அண்ணாந்தபடிதான் இருக்கும்போல. இவரைப் பற்றி சில வருடங்களுக்கு பில் பிரைசனின் ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங்’ (A Short History of Nearly Everything) புத்தகத்தில் படித்தேன். அடிப்படையில் இவான்ஸ் ஒரு பாதிரியார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் பெருநட்சத்திர வெடிப்பை (supernova) தேடி நடத்தும் வேட்டைதான்.
அது என்ன பெருநட்சத்திர வெடிப்பு? சூரியனைவிட பல மடங்கு பெரிய நட்சத்திரம் தன் ஆயுளின் முடிவில் மிகமிகப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறி அணைந்துபோவதுதான் பெருநட்சத்திர வெடிப்பு. இந்த நிகழ்வு நமது சூரிய குடும்பத்துக்கு அருகில் நடக்கும் விஷயம் அல்ல. இவ்வளவு பிரமாண்டமாக வெடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் நமக்கு அருகில் இல்லை; அப்படி நிகழ்ந்தால், நாம் ‘சூரியக் குடும்பத்தோடு கைலாசம்’தான். ஆனால் கற்பனையே செய்துபார்க்க முடியாத தூரத்தில் எவ்வளவோ பெரிய நட்சத்திரங்கள் அடிக்கடி வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி வெடிக்கும்போது பிரபஞ்ச வெளியில் அவை வாண வேடிக்கை நிகழ்த்துகின்றன. அப்படிப்பட்ட பெருநட்சத்திர வெடிப்புகளை (தொலைநோக்கியில்) வேடிக்கைப் பார்ப்பதுதான் இவான்ஸின் வாழ்க்கை. 42 முறை பெருநட்சத்திர வெடிப்பைப் பார்த்த சாதனை இவருக்கே சொந்தம்.
உண்மையில், இவான்ஸிடம் இருப்பது, முதுகில் தூக்கிச் செல்லக் கூடிய அளவிலான தொலைநோக்கிதான். அந்தத் தொலைநோக்கியைத் தூக்கிக்கொண்டு தன் வீட்டுப் பரணுக்குச் செல்வார். அங்கே தட்டுமுட்டுச் சாமான்களுக்கிடையே ஓர் ஆள் மட்டும் உட்கார்ந்து பார்க்கக்கூடிய இடம் இருக்கும். அந்த இடத்திலிருந்து பார்க்கக் கிடைக்கும் வானமோ மிகச் சிறிய அளவுதான். இவான்ஸோ இவ்வளவு சிறிய வானத்திலும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களைக் காணத் தன்னால் முடியும் என்கிறார். அந்த சிறிய வானத்தில்தான் பெருநட்சத்திர வெடிப்பு வேட்டையில் அவர் சாதனை புரிந்திருக்கிறார். நாம் நமது தெருவையும் நமது ஊரையும் ஊரிலுள்ள மனிதர்களையும் நன்கு அடையாளம் வைத்திருப்பதுபோல் இவான்ஸ் அண்டவெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் நட்சத்திரங்களையும் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார். வானில் போகாமலே அவருக்கு வான் தடம் அவ்வளவு அத்துப்படி.
இந்த 42 நட்சத்திரங்களை இவான்ஸ் வெறும் 42 நாட்களில் பார்த்துவிடவில்லை. கிட்டத்தட்ட 55 வருடங்களின் பெரும்பான்மையான இரவுகளில் நடத்திய வேட்டையின் பலன் இது. அப்படியென்றால் எவ்வளவு நேரம் வானத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்திருப்பார் இவான்ஸ். பெருநட்சத்திர வெடிப்பின் காட்சி என்பது அவருக்கு உறுதியளிக்கப்பட்ட ஒன்றல்ல. மிகக் குறைந்த கால அளவில் அடுத்தடுத்து சில பெருநட்சத்திர வெடிப்புகளைப் பார்க்க நேரிட்ட அனுபவத்தைப் போலவே மாதக் கணக்கில் வானத்தைத் துழாவியும் பெருநட்சத்திர வெடிப்பு இவான்ஸின் கண்ணில் படாமல் போன அனுபவமும் நிறைய உண்டு.
இப்போதுதான் தானியங்கி-தொழில்நுட்பக் கருவிகளை வைத்து வானில் ஏற்படும் சிறு அசைவையும் படம்பிடிக்கும் வசதி வந்துவிட்டதே என்று கேட்கலாம், 'லட்சக் கணக்கான வருடங்கள் அண்டவெளி வழியாகப் பயணித்து பூமியை வந்துசேரும் ஒளியை அந்தத் துல்லியமான தருணத்தில் வானின் சரியான இடத்தில் யாரோ ஒருவர் பார்க்கிறார்கள் என்பதே ஏதோ ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரமாண்டமான நிகழ்வை யாராவது ஒருவர் பார்ப்பதே பொருத்தமானது' என்கிறார் இவான்ஸ். மேலும் பெருநட்சத்திர வெடிப்பைக் கண்ணால் பார்ப்பதில் உள்ள ‘ரொமான்ஸ்’ சாதனங்களை வைத்துப் பதிவுசெய்வதில் இல்லை என்கிறார் இவான்ஸ்.
நம்மை நோக்கி எவ்வளவோ ஒளி வந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன (அதாவது அணைந்துபோன) நட்சத்திரத்தை அது இப்போது இருப்பதாக எண்ணிக்கொண்டு நாம் ‘எவ்வளவு அழகாக அந்த நட்சத்திரம் மினுக்குகிறது பார்’ என்று சொல்கிறோம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் இவான்ஸைப் பொறுத்தவரை ஒளிக்கு அர்த்தமே வேறு; அது ஒரு நட்சத்திரத்தின் மரணம் - ஒரு பெரும் வாழ்க்கையின் முடிவு!
ஆசை - தொடர்புக்கு: asaidp@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT