Published : 13 Nov 2013 12:00 AM
Last Updated : 13 Nov 2013 12:00 AM
இது என்ன தென்காசியில் நடந்த பிரச்னையா, வரிந்துகட்டிக்கொண்டு உடனே கவனிப்பதற்கு? பெங்காஸிதானே? மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்களோ என்னமோ. சிரியா, பாலஸ்தீன் பிரச்னைகளின் தீவிரத்தில் லிபியாவில் நடைபெற்ற ஒரு கந்தரகோலம் அந்தரத்தில் காணாமல் போய்விட்டது.
நாட்டு மக்களுக்கு ஒரு சேதி ஞாபகமிருக்கும். ஒரு மாசம் முன்னால் லிபியப் பிரதமர் அலி ஜெய்தன் யாரோ தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒரே நாளில் விடுவிக்கப்பட்ட விவகாரத்தை இந்தப் பத்தியில்கூட எழுதியிருந்தேன். ஒரே நாளில் அப்படி என்னதான் நடந்திருக்கும், கடத்திப்போன புண்ணியாத்மாக்கள் எதனால் எவ்வித சேதாரமும் இன்றித் திருப்பிக் கொண்டுவந்து விட்டார்கள் என்று யாரும் கேட்கவில்லை. பிரதமர் பத்திரமாக இருக்கிறாரா? தீர்ந்தது விஷயம்.
ஆனால் அதையும், இன்றைக்கு கிழக்கு லிபியா தனியாவர்த்தனம் செய்யத் தொடங்கியிருப்பதையும் ஏனோ யாரும் முடிச்சிட்டுப் பார்க்கவில்லை. பிரதமரைக் கடத்தியது கிழக்கு லிபியப் புரட்சியாளர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை; ஆனால் என்ன பேரத்தின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டிருப்பார் என்பது வெறும் யூகமாகவே இருந்து வந்தது.
இப்போது அதன்மீது மெலிதாக வெளிச்சம் விழத் தொடங்கியிருக்கிறது.
Cyrenaica (இதையெல்லாம் தமிழில் ஏன் படுத்தவேண்டும்?) என்று அழைக்கப்படும் கிழக்கு லிபியா வெகு காலமாகவே தனியாகப் பிரிந்து செல்லப் போராடிக்கொண்டிருந்த பிரதேசம். 2012ம் வருஷம் என்னமோ ஒரு ஒப்பந்தம் போட்டு முக்காலே மூணு வீசம் சுயாட்சி அதிகாரமெல்லாம் கொடுத்து கொஞ்சம் சமாதானப்படுத்தி வைத்தார்கள். ஆனால் அதெல்லாம் எத்தனை நாளைக்கு?
கிழக்கு லிபியாவின் எண்ணெய்க் கிணறுகள் மொத்த லிபியாவின் உற்பத்தியில் சரிபாதிக்கும் மேலே சப்ளை செய்யக்கூடியவை. ஆனால் எண்ணெயின் பலன் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்று பிராந்தியவாசிகள் புலம்பி வந்தார்கள். புரட்சி, போராட்டம் எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படை. என்ன வித்தியாசமென்றால் இதுகாறும் இவர்கள் போராடுவார்கள், அவர்கள் எதிர்ப்பார்கள் என்றிருந்த நிலைமை தடாலடியாக மாறி, கிழக்கு லிபியா இப்போது தன்னை முழு சுயாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக அறிவித்துக்கொண்டு விட்டது.
பர்க்கா (Barqa)வில் கோலாகலமான திருவிழா, ஆரவாரமான கொண்டாட்டங்கள், ஏராளமான மக்கள் வெள்ளம், இருபது அமைச்சர்கள் பதவியேற்பு என்று அமர்க்களப்படுத்திவிட்டார்கள். இன்னாரையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று கடத்தலுக்கு முதல் நாள் வரை ஹோட்டல் ரூமில் உட்கார்ந்துகொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த உத்தமோத்தமர் அலி ஜெய்தன் இப்போது வாயே திறக்கவில்லை.
எங்கே தாம் வாய் திறக்காததும் ஒரு விவகாரமாகிவிடுமோ என்று அஞ்சி அன்னிய சக்திகளை முறியடிப்போம் என்று ஒரு லிகிதம் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டார்.
அன்னிய சக்தி என்றால்? வெளிநாட்டு சக்திகள் என்று மட்டுமே இங்கே பொருள் கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு பிரதமரின் எதிர்பார்ப்பு. லிபியாவின் அத்தனை பிரச்னைகளுக்கும் அதுதான் காரணம். உள்நாட்டில் தீராத குழப்பத்தை உற்பத்தி பண்ணிக்கொண்டே இருக்கும் புல்லர்களைப் பூண்டோடு ஒழித்தாக வேண்டியிருக்கிறது. இது விஷயத்தில் மகா ஜனங்கள் அரசுடன் கைகோக்க வேண்டும். எந்தெந்தத் தீவிரவாதக் குழுக்களையெல்லாம் அன்னிய சக்திகள் போஷிக்கிறதோ அவர்களையெல்லாம் சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் சுட்டுத் தள்ளிவிடுகிறோம். அதற்கப்புறம் லிபியா அமைதிப் பூங்காவாகிவிடும்.
பத்தாது? யதேஷ்டம்.
லிபிய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் உயர் அதிகாரிகள், பல ஆதிவாசிக் குழுத்தலைவர்கள், பிறவிப் புரட்சியாளர்கள் என்று கலந்து கட்டி இன்றைக்கு ஆட்சியமைத்திருக்கும் இந்தக் கிழக்கு லிபியப் புதிய தேசத்தின் பிரதம மந்திரியாக அப்த் ரப்போ அல் பராஸி என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார். இவர் ஒரு முன்னாள் விமானப்படை வீரர். பதவியேற்பு முடிந்த கையோடு எண்ணெய்க் கிணறுகளைச் சுற்றி ஆள் போட்டாகிவிட்டது. திரிபோலியிலிருந்து ஒரு கொசு கூட உள்ளே வந்துவிடக்கூடாது என்பது தெளிவான உத்தரவு.
கிழக்கு லிபியாவின் எண்ணெய் வளமெல்லாம் கிழக்கு லிபிய வளர்ச்சிக்கே இனி உதவும் என்று புதிய பிரதமராகப்பட்டவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது அப்படியே நடக்குமென்றால், அடுத்த வருஷம் இதே தேதியில் அப்பிராந்தியம் பாதி துபாயாகியிருக்க வேண்டும்.
பார்க்கத்தானே போகிறோம்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT