Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM
சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பார்த்தவாறு ஆளும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இன்னமும் சொல்லப் போனால், தக்கவைத்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் (ஏப்ரல் 2011) பெற்ற வாக்கு வித்தியா சத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகவே வென்றுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியாக மாறிய பிறகு, நடைபெற்ற 9 சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் ஏற்காட்டில் அந்தக் கட்சி ஆறு முறையும் அந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் ஒரு முறையும் (1984-ல்) வென்றுள்ளன. தி.மு.க. இரண்டு முறை - 1996, 2006 - வென்றுள்ளது. ஆனால், அந்தக் கட்சி பெருத்த வாக்குவித்தியாசத்தில் வென்ற தாகக் கூற முடியாது. அதிகபட்ச மாக அந்தக் கட்சி பெற்ற வித்தியாசம் 9,394 வாக்குகள். (அ.இ.அ.தி.மு.க. நான்கு இடங்களே பெற்ற, 1990-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில்தான் அந்த வாக்கு வித்தியாசத்தை தி.மு.க. அடைந்தது.) சுருக்கமாகச் சொல்லப்போனால், ஏற்காடு அ.இ.அ.தி.மு.க-வின் கோட்டையாகவே இருந்துவந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் இந்த வெற்றியையும் பார்க்க வேண்டும்.
இதைத்தவிர, தமிழகத்தில் இடைத்தேர்தல்களைப் பொருத்தவரையில் ஒரு பாரம்பரியம் உள்ளது. அதன்படி, எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சியே இடைத் தேர்தலில் வெற்றிபெறும். கடந்த 33 ஆண்டுகளில் அதாவது, 1980-லிருந்து, ஏற்காடு உள்பட, 47 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
ஆளும்கட்சியோ அதனுடைய ஆதரவு பெற்ற கட்சியோ 38 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது சுமார் ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு. மே 2004-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற மங்களூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெ. கணேசன் வெற்றிபெற்றார்.
ஒவ்வொரு இடைத்தேர்தலும் வெவ்வேறுவிதமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் ஆளுங்கட்சிக்கும் தி.மு.க-வுக்கும் இடையேயான - கிட்டத்தட்ட இருமுனைப் போட்டி மாதிரி அமைந்துவிட்டது. தி.மு.க. மற்ற கட்சிகளின் ஆதரவை - பாரதிய ஜனதா கட்சி உள்பட - பெற முயற்சி செய்தது. அதில் வெற்றிபெறவில்லை.
தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தங்களது நிலைப்பாட்டை இறுதிவரை கூறவேயில்லை. பிரச்சாரம் முடிகின்ற தறுவாயில் தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணித்த பாட்டாளி மக்கள் கட்சியும் பிரதான இரு கட்சிகளையுமே வெவ்வேறு விஷயங்களில் விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டது ஒரு விதத்தில் இந்தத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்க ஏதுவாக மாறிவிட்டது.
அ.இ.அ.தி.மு.க. இவ்வெற்றியைத் தனது ஆட்சியின் திட்டங்களுக்கு, குறிப்பாக சமூகநலத் திட்டங்களுக்கு, மக்கள் ஆதரவின் வெளிப்பாடாகக் காண்கிறது. முதல்வர் ஜெயலலிதா அவரது அரசின் நல திட்டங்களுக்குக் கிடைத்த மக்களின் அங்கீகாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்ரீதியாகக் கூறவேண்டு மென்றால், இந்த்த் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு எதிராக மற்ற கட்சிகள் இணைந்து பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தி.மு.க-வினர் உள்பட பலர் நினைத்தனர். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதற்கு எந்தவொரு பிரச்சினையும் மக்களிடையே எழவில்லை.
மே 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் இந்த முறை பல விஷயங்களில் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்வது அரசுக்கு எதிரான எண்ணம் உருவாகும் வாய்ப்பை மிகவும் குறைத்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையைத் தவிர, அரசின் மீது பெரிய விமர்சனம் எழவேயில்லை.
இந்த இடைத்தேர்தலின் முடிவு நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வாறான அரசியல் கூட்டணியை நிர்ணயிக்கும் என்று கூற முடியாது. ஆனால், மற்றொரு விஷயத்தை அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக விவாதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இடைத் தேர்தல்களே தேவையா என்பதுதான் அது.
ஏற்காடு போன்ற தொகுதிகளில் குறிப்பிட்ட கட்சி பலமுறை வென்றுவிட்ட பிறகு அங்கு காலியிடம் ஏற்பட்டால், அதுவும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்று மூன்று வருடங்கள் வரை, எந்தக் கட்சி பொதுத் தேர்தலில் வென்றதோ அந்தக் கட்சியே தன்னுடைய உறுப்பினரைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு செய்வது செலவைக் குறைப்பதுடன் அரசு நிர்வாகத்தின் நேரம், கவனம் மற்ற மக்கள் பிரச்சினைகளில் செலுத்தவும் உதவியாக இருக்கும்.
கட்சிகள் இந்த ஆலோசனையை மேம்படுத்தி, செழுமைப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT