Published : 03 Jun 2017 09:31 AM
Last Updated : 03 Jun 2017 09:31 AM
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கிய மானவர்களில் ஒருவரான ஷோபா சக்தி தன்னுடைய ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பின் சமர்ப்பணம் பகுதியில் குறிப்பிடும் வார்த்தைகள் இவை: “என் கிராமத்துத் திருவிழாக்களின்போது உயரிய பனைமரங்களில் கட்டப் பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து குணசேகரனாகவும், மனோகரனாகவும், செங்குட்டுனாகவும் எனக்குத் தமிழ் ஏடு தொடங்கி வைத்த கலைஞர். மு.கருணாநிதிக்கு!”
இது மிகை அல்ல. ஒரு காலகட்டத்தின், சில தலைமுறைகளின் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையோடு பொருந்தக்கூடிய வார்த்தைகள் இவை. தமிழ் மொழியைப் பேசுவதில், எழுதுவதில் பெருமிதம் கொள்ளக்கூடிய எவருக்கும் இன்றும் கருணாநிதியின் பேச்சும் எழுத்தும் பிரிக்க முடியாத ஒரு பந்தம். அரசியல் தமிழ் என்று தமிழைப் பகுத்து அதில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டால் தமிழ் அரசிய லுக்கு எவ்வளவு பெரிய கொடையை கருணாநிதி வழங்கியிருக்கிறார் என்று அறியலாம். கருணாநிதி தன்னுடைய சட்ட மன்ற உரையிலும், மேடைப் பேச்சிலும், உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்திலும் அரசியலைப் பேசவில்லை.
மாறாக அரசியலைப் பாடமாக நடத்தினார். இன்றும் “திமுககாரன்கிட்ட பேச முடியாது. சட்டம் பேசுவானுவோ” என்று பேசுவார்கள். இப்படிப் பேசுவதற்கான தகுதியை இன்றுவரை தக்கவைத்திருப்பவர் கருணாநிதிதான். ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது” என்று அவர்தான் சொன்னார். அது இப்போது எதிர்க் கட்சிக்காரர்களும் பயன்படுத்துகிற வாக்கியமாக இருக்கிறது. ‘ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?’ என்று அவர் கேட்ட ஒரு கேள்வி இந்தியாவையே அதிரவைத்தது. “யாப்பின்றி போனாலும் போகட்டும், நம் நாடு, மொழி, மனம், உணர்வெல்லாம் காப்பின்றிப் போகக் கூடாதெனும் கொள்கை” என்று சொன்னார்.
இதைவிட எப்படிக் கொள்கையின் முக்கியத்துவத்தை ஒரு கட்சித் தொண்டருக்கு எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முடியும்? ‘முரசொலி’யில் கட்சியின் கடைமட்டத் தொண்டர்களுடன் உரையாட அவர் தேர்ந்தெடுத்த வடிவமான ‘நானே கேள்வி நானே பதில்’ என்பது போன்ற ஒரு உத்தியையே எடுத்துக்கொள்வோம். சாமானியர்களிடம் அரசியலை எடுத்துச் செல்வதற்கான மிக எளிய இந்த உத்தி எவ்வளவு வெற்றிகரமானது, நுட்பமானது!
ஒரு திமுககாரரிடம் கருணாநிதியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், “கலைஞரின் தமிழ்” என்று சொல்வார். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கே ட்டாலும் பெரும்பாலும் இதே பதிலைத் தான் சொல்வார்கள். கருணாநிதியின் தமிழ் யாருக்குத்தான் பிடிக்காது! மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிற எழுத்தாளனாக அவரைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன்: தன்னுடைய சட்டசபை உரையாக இருந்தாலும், மேடைப் பேச்சு, இலக்கியப் படைப்பு, சினிமா வசனம், உடன் பிறப்புக்கு எழுதிய கடிதம், அறிக்கைகள் என்று எதுவாக இருந்தாலும், தான் பேசுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எழுதுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு புதிய சொல்லை, ஒரு புதிய வாக்கியத்தை ஒரு சொல்லை அவர் எவ்வளவு நுட்பமாக, ஆயுதமாகக் கைக் கொள்கிறார் என்பதற்கான உதாரணம், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’ என்ற வாக்கியத்தில் இருக்கிறது.
கருணாநிதியின் பொதுக்கூட்ட உரைகளைத் தொடர்ந்து கேட்டவர்களுக்குத் தெரியும், அந்த உரையின் நீண்ட முன்னுரை கிட்டத்தட்ட இந்த ஒரு வாக்கியத்துக்கான முன்னோட்டம்தான். இதற்காகத்தான் கூட்டம் காத்திருக்கிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர்போலவே அதற்காக நீண்ட பீடிகையை அவர் போடுவார்.
கூட்டத்தின் ஆவல் உச்சம் தொடும் நேரத்தில் அதை உடைப்பார், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” உடைத்துக்கொண்ட பெருவெள்ளம்போல உற்சாகமும் ஆர்ப்பரிப்பும் கூட்டத்தில் பொங்கும். உடன்பிறப்பு - இந்த ஒரு சொல்தான் கருணாநிதி காலத்தின் திமுக. தமிழ் இந்த ஒரு சொல்தான் அவருடைய மகத்தான அரசியல் ஆயுதம்!
இமையம், எழுத்தாளர், ‘கோவேறுக் கழுதைகள்’, ‘செடல்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT