Last Updated : 14 Nov, 2014 08:55 AM

 

Published : 14 Nov 2014 08:55 AM
Last Updated : 14 Nov 2014 08:55 AM

இந்து மதச் சீர்திருத்தச் சட்டங்கள் - நேருவின் பங்கு என்ன?

அம்பேத்கரின் கனவை நனவாக்கி, இந்து மதத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் நேரு.

இந்திய சுதந்திரத்தின் முதல் ஆண்டுகளைப் பற்றிப் பேசுபவர்கள், நமது ஜனநாயகம் திரௌபதி போல முழுப் பெண்ணாகத் தீயிலிருந்து தோன்றவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். கர்ணனைப் போல பாதுகாப்புக் கவசமும் அதற்கு இல்லை. மேற்கத்திய ஜனநாயகங்கள் முழு உரு எடுக்க இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் எடுத்தன என்றால், காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட முதல் நாடான பாரதம் அதற்குத் தேவையான ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தானாகவே, உடனடியாக, மிகச் சில ஆண்டுகளில் உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஒரு புறத்தில் வலதுசாரிகள் நாட்டின் பொருளாதார, சமூகக் கட்டமைப்புகளில் அதிக மாறுதல்கள் செய்யப் பட்டால், இருப்பவற்றையே இழந்துவிடுவோம் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தால், மறுபுறத்தில் இடதுசாரிகள் புரட்சிகரமான மாற்றங்களே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் என்ற கொள்கையைத்தான் அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

அம்பேத்கரும் நேருவும்

நமது தவப்பயனாக, அன்று பொறுப்பில் இருந்தவர் களுக்கு, நாட்டை சீராக, ஜனநாயக, சமூக மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வதற்குக் குறைந்தபட்சத் தேவைகள் என்ன என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இருந்தது.

குறைந்தபட்சத் தேவைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது, இந்து மதச் சீர்திருத்தச் சட்டம். நமது முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல், சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற வர்கள் இதற்கு எதிராக இருந்தார்கள். ஆனால், சாவர்க்கர், உண்மையாகவே நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்யுமானால் - தேர்தல் தேவைகளுக்கு அல்ல - இந்தச் சட்டம் வர வேண்டும் என்ற நிலையை எடுத்தார்.

இரு தலைவர்கள் இந்துச் சீர்திருத்தச் சட்டம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இவர்களில் முன்னால் நின்றவர் அம்பேத்கர். அவருக்குப் பின்னால் நின்றவர் நேரு. இருவரும் மத அடிப்படையற்ற பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதையே விரும்பினாலும், சிறுபான்மையினர் அதை எதிர்த்ததால், வற்புறுத்த விரும்பவில்லை.

இந்துச் சீர்திருத்தச் சட்டத்தின் முதல் வரைவு, சட்ட வல்லுநரான பெனகல் நரசிங்க ராவ் தலைமையில் எழுதப்பட்ட அறிக்கையில் இருந்தது. இந்த அறிக் கையை 1947-ம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபையில் அறிமுகம் செய்த அம்பேத்கர், சட்டத்தின் ஏழு முக்கியப் பகுதிகளைப் பற்றியும் அவற்றில் பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்கள்குறித்தும் பேசினார். சொத் துரிமை, வாரிசுகள் யார் என்பதை நிர்ணயிப்பது, இறந்தவர்களைச் சார்ந்திருப்பவர்களைப் பேணுதல், திருமணம், விவாகரத்து, தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, என்ற ஆறு பகுதிகளில் மாற்றங்கள் பரிந் துரை செய்யப்பட்டிருந்தன. இந்த மாற்றங்கள் வலது சாரியினர் பலருக்கும் பிடிக்கவில்லை. அவர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பிரசாத்.

ராஜேந்திர பிரசாத்தும் நேருவும்

அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண் டிருந்த சட்டம், அம்பேத்கரின் விடாமுயற்சியால் செப்டம்பர் 1951-ம் ஆண்டு அப்போதிருந்த (பொதுத் தேர்தல்களுக்கு முந்தைய) நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. இந்தத் தருணத்தில்தான் ராஜேந்திர பிரசாத், நேருவுக்கு ‘பரமரகசியமான’ கடிதம் ஒன்றை எழுதினார். கடிதம், நேருவுக்கு மாலை மூன்று மணிக்குப் போய்ச்சேர்ந்தது. ஆனால், பத்திரிகையாளருக்கு ஒரு மணிக்கே கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பது தெரிந்துவிட்டது. அந்தக் கடிதத்தில் பிரசாத், சட்டம் அவரது ஒப்புதலுக்கு வருமானால், அதை ஆராய்ந்து எனது மனசாட்சிக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லத் தயங்க மாட்டேன் என்று எழுதினார்.

அவருடைய கருத்தை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் விரும்பினார். நேரு எழுதிய பதிலில், குடியரசுத் தலைவர் அவ்வாறு செய்வது குடியரசுத் தலைவர் ஒருபுறம் - அரசும் நாடாளுமன்றமும் மறுபுறம் என்ற நிலையைக் கொண்டுவந்துவிடும். அதனால், அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார். பிரசாத் விட்டுக்கொடுக்கவில்லை. கடைசியில் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்றத்துக்கு மக்களின் அங்கீகாரம் இல்லை. தேர்தல் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை இல்லை அது என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

எதிர்ப்பு

நாடாளுமன்றத்திலேயே சட்டத்துக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் அதை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். எனவே, சட்டம் நிறைவேற்றப்படாமலேயே குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. இதற்காகவே நான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்த அம்பேத்கருக்கு இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்தது. நேரு தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்தார். எனவே, பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். நேரு சட்டம் வராவிட்டால் தானும் பதவியிலிருந்து விலகுவதாக முன்னால் பயமுறுத்தியிருந்தாலும், காங்கிரஸ் கட்சியை அவரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்தச் சட்டம் நிறைவேறவில்லை என்பதற்காகத் தேர்தல் நடக்கவிருக்கும் தறுவாயில், கட்சியைப் பகைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. அவர் தேர்தலை எதிர்நோக்கியிருந்தார்.

மீண்டும் வந்தது!

1951 - 52 தேர்தலில் சட்ட மறுப்புவாதிகள் நேருவுக்கு எதிராகக் காவியுடை அணிந்திருந்த பிரபுதத் பிரம்மச்சாரி என்பவரை நிறுத்தினார்கள். அவருக்கு ஜனசங்கம், இந்து மகாசபா, ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்துக் கட்சிகள் ஆதரவளித்தன. பிரம்மச்சாரிக்கு ஆதரவாக ஐம்பதாயிரத்துக்கும் மேல் ஓட்டுக்கள் விழுந்தன என்ற செய்தி சட்டத்துக்குக் கணிசமான எதிர்ப்பு, குறிப்பாக வட இந்தியாவில் இருந்தது, என்பதைத் தெளிவாக்குகிறது. முதல் நாடாளுமன்றம் தொடங்கியதும், நேரு சட்டத்தைப் பல பகுதிகளாக ஆக்கி, திரும்பவும் கொண்டுவந்தார். 1952- 57 நாடாளுமன்றத்தில் நான்கு சட்டங்கள் - இந்து திருமணச் சட்டம், சொத்துரிமைச் சட்டம், தத்தெடுத்தல் சட்டம், முதிரா வயதினர் பராமரிப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்டவை - நிறைவேற்றப்பட்டன. அம்பேத் கர் மாநில அவை உறுப்பினராக இருந்தாலும், விவாதங் களில் அவர் பங்கேற்கவில்லை.

அம்பேத்கர் மறைந்தபோது நேரு சொன்னார், “இந்து சமுதாயத்தின் அடக்குமுறைக் கூறுகளுக்கு எதிராக எழுந்த புரட்சிக்கு அடையாளமாக அவர் அறியப் படுவார். அவர் இந்துச் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர எடுத்துக்கொண்ட கடினமான முயற்சிகளுக் காகவும் நினைவில் நிற்பார்.”

சட்டங்கள் தந்ததென்ன?

நண்பர் ராமச்சந்திர குஹா தனது கட்டுரை ஒன்றில் கூறுகிறார்:

“முதல் முறையாக, 1) கணவரை இழந்தவருக்கும் மகளுக்கும் சொத்தில் பங்கு கிடைத்தது. 2) பெண் ணுக்கு, கணவன் கொடுமை செய்கிறான், சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்ற காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் உரிமை கிடைத்தது. 3) மனைவி இருக்கும்போது மறுமணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. 4) வெவ்வேறு சாதியைச் சேர்ந்த வர்கள் திருமணம் செய்துகொள்ள வழி வகுக்கப் பட்டது. 5) மற்ற சாதியில் பிறந்த குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள வழி பிறந்தது.

இந்தச் சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நேரு தெளிவாக இருந்தார்.

முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிடுகிறார்: இந்தச் சட்டங்களின் முக்கியத்துவம் அது கொண்டுவரும் மாற்றங்களினால் மட்டுமல்ல, இந்து சமுதாயத்தை அது விழுந்திருந்த குழியிலிருந்து விடுவித்து, அதற்குப் புதியதொரு இயக்கத்தை அந்த மாற்றங்கள் கொடுக்கின்றன. விழுந்த குழியிலிருந்து எழுந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களில் சிலர், எழுப்பி விட்டவரை எதிரியாகப் பார்ப்பது விந்தையிலும் விந்தை!

- பி.ஏ. கிருஷ்ணன்

‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x