Last Updated : 26 Nov, 2013 12:00 AM

 

Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

நண்பனின் நண்பன், எனக்கு எதிரியே!

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரானின் பேராண்மையைத் தின்று தீர்த்துவிட்டது என்று ஒரு பக்கம் சொல்லுகிறார்கள். இன்னொரு பக்கம் இது ஒரு சரித்திர சாதனையல்ல; மாபெரும் சரித்திரப் பிழை என்று சொல்லுகிறார்கள்.

என்னமோ அணு ஆயுத உற்பத்தித் தடை நெருக்கடி, பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் என்று மாசக்கணக்காக பேப்பரில் அடிபடுகிறதே அதற்கொரு முடிவு கிடைத்துவிட்டது போலிருக்கிறது என்றுதான் நேற்றைய செய்திகளும் நினைக்க வைத்திருக்கும்.

உண்மையில் இப்போது நிகழ்ந்திருக்கும் ஒப்பந்தம் ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் பேசித் தீர்க்க என்னென்னவோ இருக்கிறது. இதற்குள் ஈரான் அடிபணிந்து விட்டதாகவும், வல்லரசுகள் அதன் வாலை ஒட்ட நறுக்கிவிட்டதாகவும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டதுதான் காமெடியாக இருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மானியப் பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் உட்கார்ந்து பேசினார்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை. மின்சார உற்பத்திக்கு மட்டும்தான் எங்கள் உலைகள் பயன்படுகின்றன. ஆதிமுதல் நாங்கள் சொல்லுவது இதுதான். இப்போதும் இதையே தான் சொல்கிறோம். இதனை எப்படி நிரூபிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

வெளிநாட்டு மேஸ்திரிகளை ஈரான் உள்ளே விடாது. இப்போதைய இடைக்கால ஒப்பந்தப்படி மாதந்தோறும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவையும் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவையும் சில பொதுவான நாட்டாமைகள் ஒப்பிட்டுப் பார்க்க இயலும். மின் உற்பத்தி தவிர வேறு எதற்கும் யுரேனியப் பயன்பாடு இராது. ஆறு மாத காலம் இந்த ஏற்பாடு செல்லுபடியாகும். ஈரானின் நேர்மை அல்லது இன்மை அதற்குள் தெரிந்துவிடும் என்பது மேற்கத்தியக் கணக்கு.

இதுவே சறுக்கல் அல்லவா என்றால் இல்லை. உண்மையிலேயே தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முனைப்பில் இல்லை என்று ஈரான் சொல்லுவதுதான் சரியென்றால் இந்த இடைக்கால ஏற்பாட்டின்படி ஈரானுக்கு உடனடியாகச் சுமார் ஏழு பில்லியன் டாலர் (சுமார் ரூ.43 ஆயிரத்து 810 கோடி) வரைக்கும் லாபம் சித்திக்கும். அதன்மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளுள் சிலவற்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உடனடியாக விலக்கிக்கொள்ளும். ஈரானின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு கணிசமாக உயரும்.

ஆறு மாதங்களுக்குள் பேச்சு வார்த்தை இன்னும் சுமூகமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருமானால் ஈரான் மேலும் சிலபல சௌகர்யங்களை அனுபவிக்க ஆரம்பிக்கும். ரொம்ப முக்கியம், மத்தியக் கிழக்கின் சர்வ வல்லமை பொருந்திய தேசமாகப் பார்க்கப்படும். யுத்த களேபர நெருக்கடிகள் இல்லாமல், உற்பத்தி செய்யும் பெட்ரோலை சௌக்கியமாக விற்று சம்பாதித்துச் செழிக்க இயலும்.

எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சாதகமான தொடக்கம்தான். ஆனால் இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற தேசங்களுக்கு இது அடிவயிற்றைக் கலக்குமென்பதில் சந்தேகமில்லை. ஈரான் மத்தியக் கிழக்கின் வல்லரசாவது இந்த தேசங்களுக்குப் பெரும் கலவர மூட்டும் சங்கதி. ஏனெனில், அமெரிக்காவின் அடிப்பொடிகளாகக் காலம் காலமாக இருந்து வரும் இந்தத் தேசங்களுக்கு, ஈரான் உடனான அமெரிக்காவின் புதிய நல்லுறவு நிச்சயமாக வெறுப்பைத் தரும்.

இஸ்ரேலைக் குறித்து விளக்கத் தேவையில்லை. ஆனால், சவூதி அரேபியாவுக்கு என்ன பிரச்னை என்றால் அது சன்னி முஸ்லிம்கள் நிறைந்த நாடு. ஈரானோ ஷியாக்களின் ராஜ்ஜியம். மத்தியக் கிழக்கில் ஷியாக்களைத் தலையெடுக்க விடக்கூடாது என்பது சவூதி உள்ளிட்ட பிற சன்னி முஸ்லிம் தேசங்களின் அறிவிக்கப்படாத வாழ்நாள் செயல்திட்டம்.

நிற்க. அயாதுல்லா கொமேனியின் புரட்சிக்குப் பிறகு உலக நாடுகளால் அச்சத்துடன் மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த ஈரான் இன்றைக்கு அமெரிக்கா உள்பட யாருடனும் உட்கார்ந்து பேசத் தயார் என்கிறது. உள்நாட்டு வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அத்தேசம் அளிக்கும் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இது ஒரு மகத்தான மன மாறுதல். ஆக்கபூர்வமானதும்கூட.

எப்போதும் குடுமிப்பிடி சண்டைகளால் நிரந்தரமாக அவதிப் பட்டுக்கொண்டிருக்கும் இதர எண்ணெய் தேசங்கள், ஈரானிடம் படிக்கவேண்டிய மிக முக்கியப் பாடம் இங்கே தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x