Last Updated : 02 Jan, 2014 12:00 AM

 

Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

ராமாயணம்தான் எத்தனை ராமாயணம்!

புகழ்பெற்ற வைணவத் தலமான திருக்குறுங்குடி ஊர் (திருநெல்வேலி மாவட்டம்) அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில், தோல்பாவைக்கூத்து நடத்தப்போவதாகக் கலைமாமணி பரமசிவ ராவ் சொன்னார். அந்த ஊரில் முதியவர்கள் சிலரின் வேண்டுகோளால், மயில் ராவணன் கதை, மச்சவல்லபன் கதை இரண்டையும் மூன்று நாட்களும், அசுவமேதயாகக் கதையை மூன்று நாட்களும் ஆக ஆறு நாட்கள் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிந்தேன். அசுவமேதயாகக் கதையில் சில காட்சிகளை சுப்பையா ராவே நடத்தப்போகிறார் என்று பரமசிவ ராவ் தனியாகவும் சொல்லியனுப்பினார். அதனால், கட்டாயம் அந்தக் கிராமத்துக்குப் போகத் தீர்மானித்தேன்.

பரமசிவ ராவ், சுப்பையா ராவ்

தென் தமிழகப் பகுதிகளில் தோல் பாவைக்கூத்துக் கலைஞர்களில் ஜாம்ப வானாக இருந்த கோபால ராவின் மக்கள் சுப்பையா ராவும் பரமசிவ ராவும் என்பதே அவர்களின் சிறப்பு. சுப்பையா ராவுக்கு அப்போது வயது 70 ஆகிவிட்டது. என்றாலும் குரல் தளரவில்லை; நினைவு மங்கவில்லை; உன்னதமான கலைஞன்.

கூத்தரங்கினுள் நான் சென்றபோது, கொஞ்சம் வயதான பார்வையாளர்கள் இருந்தார்கள். வெண் திரையில் உச்சிக் குடும்பனும் உளுவத்தலையனும் அசை யாமல் நின்றுகொண்டிருந்தார்கள். (திரை வெறுமனே இருக்கக் கூடாது என்பது நியதி) நிகழ்ச்சி ஆரம்பமாகவில்லை. மேலும், பார்வையாளர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் பரமசிவ ராவ். சுப்பையா ராவ் பாடிக்கொண்டிருந்தார்.

கைகொண்ட கைத்தானே – இராவணன்

கைலயங்கரி தன்னைத் தானே

மைநாக மலையொத்த

வாலின் பல்லைக் கடித்து

கைகொண் டசைத்தானே...

என்ற அவரது பாடலுக்கு கோமதிபாய் மிருதங்கம் அடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாடல் அனந்தர் இயற்றிய உத்தர ராமாயணத்தின் பாடல். கல்யாணி ராகத்தில் சாபு தாளத்தில் அமைந்த பாடல் அது.

கூத்து நிகழ்ச்சியில் சில சமயம் சுப்பையா ராவும் பாத்திரங்களுக்காகக் குரல் கொடுத்தார். தமிழகத் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் ஒருவரே பாவையை ஆட்டி உரையாடும் வழக்கத்துக்கு மாறாக இருந்தது அது. பரமசிவ ராவ் கூத்து நிகழ்ச்சியில் ஒரே பனுவலை திரும்பத் திரும்பக் கூற மாட்டார். கதை நிகழ்த்துதலில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பனுவல் என்ற கொள்கையை எல்லா கலைஞர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. கலைமாமணி சரஸ்வதியின் வில்லிசை நிகழ்ச்சியில் பனுவலை மாற்று வது சாதாரணமாக நடக்கும்.

சீதை மேல் சந்தேகமா?

ராவண வதை முடிந்த பிறகு, ராமன் அயோத்தி அரசனாக இருந்தான். அப்போது ஒரு நள்ளிரவில் மாறுவேடம் பூண்டு அவன் வலம்வந்தபோது, ஒரு தொழிலாளி சீதையைக் குறைகூறுவதைக் கேட்டான். (இங்கு சலவைத் தொழிலாளியே சீதையைக் குறைகூறினான் என்ற மரபை பரமசிவ ராவ் மாற்றினார்.) ராமன், வேடத்தைக் கலைத்துவிட்டு அந்தத் தொழிலாளியிடம் நேரடியாகப் பேசினான். ராவணனின் ராஜ்யத்தில் ஓராண்டு இருந்த சீதையை எப்படி நம்ப முடியும் என்பது தொழிலாளியின் வாதம். பொதுமக்களும் இப்படியே பேசுகிறார்கள் என்பதையும் அறிந்த ராமன், சீதையைக் காட்டுக்கு அனுப்ப யத்தனமானான். அரண்மனைப் பெண்களுக்கு இந்தச் செய்தி தெரிந்து, காரசாரமாக விவாதம் நடக்கிறது. இந்தக் காட்சியை பரமசிவ ராவ் அவருக்கே உரிய பாணியில் நடத்தினார். அன்று நான் கேட்ட அந்த உரையாடலை அதற்குப் பின் நான் கேட்கவும் இல்லை.

ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பப் போகிறான் என்னும் செய்தியை அறிந்த மூத்த தேவியர் மூவரும் ராமனிடம் பேசுகிறார்கள். அவன் பிடிவாதமாக இருப்பதைப் பார்த்து பதில் கூறாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். அப்போது லட்சுமணனின் மனைவி ஊர்மிளா, பரதனின் மனைவி மாண்டவி, சத்துருக்கனின் மனைவி சுரிதகீர்த்தி ஆகிய மூன்று பேரும் ராமனிடம் வருகிறார்கள். ராமனைப் பார்த்து ஊர்மிளா, “ராமா… சீதையைக் காட்டுக்கு அனுப்பு முன் எங்களைக் கொன்றுவிடு, சீதையின் பாவத்துடன் எங்கள் பாவமும் உன்னைச் சேரட்டும். ஆராய்ந்து பார்க்காமல் முடிவுசெய்யும் அரசனும் முலைப்பால் கொடுக்காத தாயும் பெற்றவனைப் பட்டினிபோடும் தனயனும் வாழும் நாட்டில் இருப்பது நரகத்துக்குச் சமம்” என்றாள்.

ராமன் இதைக் கேட்டு கோபாவேச மானான் (இந்தச் சமயத்தில் ராமனது பாவை வேகமாக அசைகிறது.) தோல்பாவைக்கூத்து ராமாயணக் காட்சிகளில் எப்போதும் நிதானமாகப் பேசும் ஒரே பாத்திரம் ராமன்தான். இந்தக் காட்சியில் மட்டும் ஆடிக்கொண்டே பேசினான். அவனது ஆணவத்தை உடல்மொழியில் காட்டப் பெரிதும் முயற்சிசெய்தார் பரமசிவ ராவ். ராமன் “ஊர்மிளா, யாரிடம் பேசுகிறாய் நீ; ஆண்களுக்குக் கட்டுப்படாத பெண்களும் படைத்தலைவனின் ஆணையை மதிக்காத வீரர்களும் மேய்ப்பவனை விட்டுச் செல்லும் ஆடுகளும் அழிந்துபோகும்; ஜாக்கிரதை, என் பேச்சு மாறாது, இது ராமராஜ்யம்” என்றான்.

ராமனை மலைக்க வைத்த சுரிதகீர்த்தி

ஊர்மிளையின் வாயை ராமன் எளிதாக அடக்கிவிட்டான். அவள் மிரண்டுபோய் நின்றாள். (இப்போது ஊர்மிளா பாவை மெல்ல அசைந்து திரையின் வலது கோடிக்குச் சென்றது.) இந்தச் சமயத்தில் திரையின் வலதுபுறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெண் பொம்மை ராமன் முன்னே வந்தது. “ராமா, சத்துருக்கனின் மனைவி சுரிதகீர்த்தியான எனக்குப் பதில் சொல்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள் அவள். “ராமராஜ்யம் என்பது ஆண்களுக்கா பெண்களுக்கா? ராமா, தசரதனின் சத்தியத்தைக் காப்பாற்ற சீதையை ஒருமுறை காட்டுக்கு அனுப்பி னாய். இப்போது உன் பெயரைக் காப்பாற்ற அனுப்புகிறாய். பெண்கள் என்ன இளைத்தவர்களா? உங்கள் குலம் பங்கப் படாமல் இருக்க பெண் பலியாடாவதா? ராமா, இது உன் பெயருக்குத்தான் களங்கம் கற்பிக்கும்” என்றாள்.

ராமன் வாயடைத்து நின்றான். சுரிதகீர்த்தி அவனுக்கு அஞ்சுவதாக இல்லை. அப்போது மௌனம் நிலவியது. சுருதிப்பெட்டி மெல்ல ஒலித்தது. இந்த நேரத்தில் சத்துருக்கனன் திரையின் இடது பக்கத்திலிருந்து வேகமாக வந்து “சுருதி வா இங்கே” என அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போகிறான்.

அக்கினிப் பிரவேசம்

அசுவமேதக் காட்சி அடுத்த நாளும் தொடர்ந்தது. பார்வையாளர்களில் பெண்களே அதிகம் இருந்தனர். கதை இறுதி; சீதையை மறுபடியும் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொல்லுகிறான் ராமன். அப்போது சீதை ராமனின் முன்னே வந்து நிற்கிறாள். “இலங்கையில் நீ வானர வீரர்களுக்காக அக்கினியில் குளித்தாய். இப்போது அயோத்தி மக்களுக்காகத் தீக்குளிப்பாய்” என்கிறான். இதைக் கேட்ட வால்மீகி முனிவர் ராமனிடம் பேச வருகிறார். சீதை அவரைக் கையமர்த்திவிட்டு “ராமா, சொந்த நலனுக்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுப் பவன்; தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுப்பவன்; மனைவியின் கற்பை அக்கினிதான் முடிவு செய்யும் என்று கூறும் புருஷன் இவர்கள் வாழும் நாட்டில் நியாயம் கிடைக்காது” என்று கம்பீரமாகச் சொல்லுகிறாள். அப்போது பூமி பிளக்கிறது. சீதை அதில் ஐக்கியமாகிறாள்.

அன்று கூத்து முடிந்த பின்பு பரமசிவ ராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது சுப்பையா முக்கியமான தகவல்கள் சொன்னார். “திருநெல்வேலி மாவட்ட எல்லைக் கிராமங்களில் முப்பதுகளில் காங்கிரஸையும் காந்தியையும் அறிமுகப் படுத்தியதே எங்க அப்பா கோபால ராவ்தான். அப்பா, காலதேச வர்த்தமானத்துக்கேற்ப கதைய மாத்துவார். அவருக்குப் பெரிய ஆளு பழக்கம் உண்டு” என்றார்.

அவர் இன்னும் ஒரு தகவல் சொன்னார், “ராமன் கானகம் சென்றபோது பரதன் அயோத்தியில் ஆட்சி செய்தானே அப்போது 14 வருஷமும் அயோத்தி நிர்வாகம் சீரழிஞ்சுபோச்சு. மக்களெல்லாம் வரிகொடுக்காமல் பரதனை ஏமாற்றினார்கள். நாட்டிலே கோயில்களிலேகூட பூசையில்லை. ராவண வதை முடிந்த பின், ராமன் அயோத்தி வந்த பின்புதான் எல்லாம் சரியாயிற்று. வரி கொடுக்காத சம்சாரிகளை எல்லாம் நாட்டை விட்டே துரத்தினான். அவர்கள் நாடோடிகளாகப் போனார்கள். இப்படி ஒரு கதையை எங்க அப்பா கூறுவார். இதை அவர் நடத்தியிருக்கார்” என்றார்.

இது நடந்து ஒரு வருஷம் கழித்து, கலைமாமணி சரஸ்வதியின் வீட்டில் நான் கண்டெடுத்த அசலன்-குசலன் கதை ஏட்டில் சுப்பையா சொன்ன கதை நிகழ்ச்சி இருந்ததைப் பார்த்தேன்.

ராமாயணம்தான் எத்தனை ராமாயணம்!

அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர் - தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x