Published : 16 Sep 2016 10:59 AM
Last Updated : 16 Sep 2016 10:59 AM
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் யார் என்பதில் மூன்று மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தலைவராகியிருக்கிறார் திருநாவுக்கரசர். அவரது நியமனம் ஆச்சரியம் தராமலிருக்கலாம். ஆனால், அவரது அரசியல் வாழ்க்கை ஆச்சரியங்களால் ஆனது. காங்கிரஸ் பூத்துக்குலுங்கிய புதுக்கோட்டையில், காங்கிரஸ் குடும்பத்தில் இருந்தே, எம்ஜிஆர் ரசிகராகப் புறப்பட்ட இளைஞர் திருநாவுக்கரசு. அவரது தந்தை காங்கிரஸ்காரர்; பஞ்சாயத்துத் தலைவரும்கூட.
எம்ஜிஆரின் அரசியல் கண்டுபிடிப்பு என்று திருநாவுக்கரசைச் சொல்வார்கள்.
1977-ல் இவரை அறந்தாங்கியில் களமிறக்கினார் எம்ஜிஆர். சுற்றியுள்ள தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் வெற்றி பெற, அறந்தாங்கியில் தனி ஒருவராக வென்றார் திருநாவுக்கரசு. சட்டம் படித்த 27 வயதே ஆன இளைஞரான அவரை, துணை சபாநாயகராக்கினார் எம்ஜிஆர்!
1980-ல் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி மலர்ந்தபோது, தொழில், கைத்தறி மற்றும் வணிக வரித் துறை அமைச்சரானார் திருநாவுக்கரசு. திமுகவில் இருந்து வெளியேறி தனி இயக்கம் கண்ட எம்ஜிஆர், கருணாநிதியுடன் ஒரு நிகழ்ச்சியில் முதன்முறையாகப் பங்கேற்றது திருநாவுக்கரசின் திருமணத்தில்தான்.
திருநாவுக்கரசின் வளர்ச்சி
எம்ஜிஆர் மறைந்த பிறகும், திருநாவுக்கரசின் வளர்ச்சி நின்றுவிடவில்லை.
1977-ல் இருந்து 1996 வரையில் தொடர்ந்து அறந்தாங்கி சட்டப் பேரவையில் வெற்றியைக் குவித்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக, ஜானகி அணி, ஜெ. அணி என்று பிரிந்தபோது, ஜெயலலிதா பக்கம் நின்றவர் இவர். பிறகு, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நால்வரணியாகச் செயல்பட்டவர், ‘அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம்’ என்றொரு கட்சியை ஆரம்பித்தார்.
அடுத்த ஆச்சரியம், திமுகவுடன் சேர்ந்து களம் கண்ட அந்தத் தேர்தலில் திமுகவே ஒரு தொகுதியில்தான் வென்றது. இந்த அபுதமுகவோ இரண்டு இடங்களில் வென்றது. எம்ஜிஆர் ஆதரவாளர்கள் எல்லாம் தன் பின்னால் அணிவகுப்பார்கள் என்ற எண்ணம் ஈடேறாததால், 1996-ல் மீண்டும் அதிமுகவிலேயே சேர்ந்தார். ஜெயலலிதா துளியும் மதிக்காததால், ‘எம்ஜிஆர் அதிமுக’ என்று மீண்டும் ஒரு புதுக் கட்சியைத் தொடங்கி வெளியேறினார் திருநாவுக்கரசு.
தேசிய அரசியலிலும் திருநாவுக்கரசுக்கு ஒரு பிடிப்பு இருந்தது. 1980-ல் திமுக காங்கிரஸ் கூட்டணி யின் மக்களவைத் தேர்தல் வெற்றி, எம்ஜிஆர் ஆட்சியைக் கவிழ்த்தது. அடுத்த மக்களவைத் தேர்தலில் மூப்பனாரைக் கொண்டு, காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிமுகவைக் கொண்டுசென்றவர் திருநாவுக்கரசு. 1998 மக்களவைத் தேர்தலில், பழைய நட்பைப் பயன்படுத்தி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்.
அது கதைக்கு ஆவாது என்பதை உணர்ந்து, அடுத்த தேர்தலிலேயே பாஜகவுடன் கூட்டு வைத்தார். ஒரு தொகுதியில் வென்றார். கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு, பிரதிபலனாக வாஜ்பாய் அரசில் மத்திய இணையமைச்சர் ஆனார். திருநாவுக்கரசு ‘திருநாவுக்கரசர்’ ஆனது இந்தக் காலகட்டத்தில்தான்.
பின் காங்கிரஸ் வந்தார். காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராக்கப்பட்டார். ராகுல் காந்தியுடனான செல்வாக்கு காரணமாக, மிகக் கடினமான சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவராகியிருக்கிறார் திருநாவுக்கரசர்.
இன்னொரு சாதனை
பொதுவாக, பல கட்சிகள் மாறியவர்கள், படிப்படியாகச் செல்வாக்கிழந்துபோவது வரலாறு. திருநாவுக்கரசர் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகி இருப்பதற்கு அவரது தனித்திறனும், க்ளீன் இமேஜும் உதவியிருக்கிறது என்று கொள்ள லாம். கருணாநிதிக்கும் அவருக்குமான நீண்டகால நட்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஈவிகேஎஸ்.இளங்கோவனின் அதிரடி அரசியல் எல்லை தாண்டியதால், அமைதியான இவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கொள்ளலாம். இப்போதைய மாவட்டத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பதால், இவருக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்றொரு கருத்து இருக்கிறது. தனது அரசியல் அனுபவத்தால் இதனை எதிர்கொள்வார் திருநாவுக்கரசர் என்றும் எதிர்பார்க்கலாம்.
சமீபகாலமாக திராவிட இயக்கப் பாரம்பரியத் தில் இருந்து வந்தவர்களே, காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகிவருகிறார்கள். திராவிடக் கட்சி பாணியிலான அரசியலும் இங்கே விரும்பப்படுகிறது. ப.சிதம்பரத்தின் மகனேகூட ‘திராவிட பாணி’ பேச்சாளர்தான். இதனை தற்செயலான உத்தியாகக் கருத முடியவில்லை. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் எடுபடாமல் போனதற்கு திராவிடக் கட்சிகளின் செயல்பாடு மட்டுமே காரணமல்ல. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில், அண்டை மாநிலங்களில் எடுப்பது போன்ற துணிச்சலான முடிவை தமிழகத்தைச் சேர்ந்த தேசியக் கட்சிகள் எடுப்பதேயில்லை. வழவழ கொழகொழ செயல்பாட்டை விட்டொழித்து, மாநில உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திருநாவுக்கரசர் செயல்படுவது கட்சிக்கும், அவருக்கும் நல்லது. ஈவிகேஎஸ். இளங்கோவனின் சறுக்கலுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே காரணமாக இருந்தன. எனவே, குறுகிய அவகாசமே இருக்கிறது என்றாலும், உள்ளாட்சித் தேர்தலில் சின்ன எழுச்சியையாவது காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தமும் திருநாவுக்கரசருக்கு இருக்கிறது.
புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் செல்வாக்குபெற்ற தலைவராகத் தொடர்ந்தாலும், மாநிலம் தழுவிய அளவில் பெரிய சக்தியாக அவர் வளர்ந்ததில்லை. அந்த விஷயத்தில் வாய்ப்பு கிடைக்காத அரசியல்வாதி என்றே அவரைச் சொல்லலாம். இம்முறை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தப்போகிறார் திருநாவுக்கரசர் என்பதே கேள்வி.
- த.நீதிராஜன்,
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT