Published : 22 Jun 2017 09:44 AM
Last Updated : 22 Jun 2017 09:44 AM
விவசாயிகளுக்குப் பேருதவி செய்யும் செயலியைக் கண்டுபிடித்து, சர்வதேசப் பரிசை வென்றிருக்கிறார்கள் ஐ.ஐ.டி., ரூர்கி மாணவர்கள். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே வேதி உரங்களைப் போட்டு விவசாயம் செய்ய இந்தச் செயலி உதவும். ‘எரிக்ஸன் இன்னொவேஷன்’எனும் பெயரில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 25,000 யூரோ (சுமார் ரூ.17 லட்சம்) பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. செல்பேசித் தொழில்நுட்பப் பன்னாட்டு கம்பெனி எரிக்ஸன் இந்த சர்வதேசப் போட்டியை நடத்தியது. சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தியில் உச்சம் அடைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்தி, புதுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தப் போட்டியின் நோக்கம்.
சர்வேதேச அளவில் 75 நாடுகளைச் சார்ந்த 900-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்ற சர்வதேசத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டியில் பங்கெடுத்து ‘ஸ்நாப்’என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் செயலி முதல் இடம்பிடித்தது.
ரசாயன உரம் பயிருக்குத் தேவையா… இல்லை, போதுமான போஷாக்குடன் பயிர் உள்ளதா என்பது எளிதில் இனம் காணுவது கடினம் என்பதால், தேவைக்கு அதிகமாக வேதி உரம் இடுவது வழக்கம் பயிருக்குப் போதிய சத்து இருக்கிறது என்று கருதி உரம் இடாமல் இருந்தால், ஒருவேளை நஷ்டம் ஏற்படலாம். தேவைக்கு அதிகமாகக் கூடுதல் உரம் போட்டால் மண் வளம் பழுதுபடுவதுடன் சூழல் சிக்கல்களும் எழுகின்றன. இருதலைக் கொள்ளி நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு இந்தச் செயலி உதவும் என்கிறார் ஐ.ஐ.டி., ரூர்கி இயக்குநர் பேராசிரியர் அஜித் சதுர்வேதி.
ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான நிறமாலை கொண்டுள்ளது. தாவரத்தின் இலையில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கும்போது, அந்த ஒளியில் இந்தத் தனிமங்களின் ரேகை இருக்கும். மொபைல் கேமராவைக் கொண்டு படமெடுத்து, கணினி துணைகொண்டு ஒளியியல் ஆய்வுசெய்து, அந்தத் தாவரத்தில் போதுமான என்.பி.கே. (நைட்ரஜன், பொட்டாஷியம் பாஸ்பரஸ்) இருக்கிறதா என அறிய முடியும். குறைவாக இருந்தால் உரம் இடலாம். போதிய அளவு இருந்தால் தைரியமாக உரம் இடாமல் இருக்கலாம். எனவே, வேதி உரத்தின் பயன்பாடு குறையும். இதன் தொடர்ச்சியாக விவசாயியின் இடுபொருள் செலவு குறைவதோடு சூழல் சீர்கேடும் மட்டுப்படும்.
ஸ்வீடன் நாட்டு ஸ்டாக்ஹோம் நகரத்தில் நோபல் அரங்கத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது சிறப்புச் செய்தி.
- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி.
தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT