Published : 29 May 2017 09:10 AM
Last Updated : 29 May 2017 09:10 AM
ஆறு அடிக்கும் மேல் உயரம். தலையில் கட்டியிருக்கும் ‘டர்பன்’ இன்னும் சில அங்குலங்கள் உயரமாகக் காட்டும். பஞ்சாபில் ரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்த காலிஸ்தான் கிளர்ச்சிக்கு முடிவுகட்டியதில் முக்கியக் காரணியாக இருந்தவர். உறுதியானவர், துணிச்சலானவர். அதேசமயம், சர்ச்சை களுக்கும் குறைவில்லாதவர், கன்வர் பால் சிங் கில் எனும் கே.பி.எஸ். கில். அடிவயிற்றில் வீக்கம் காரணமாக அவதி யுற்றுவந்த கில், தனது 82-வது வயதில் டெல்லி தனியார் மருத்துவமனையில் மே 26-ல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
வழக்கமாக ஒரு தலைவரோ உயரதி காரியோ மறைந்தால், எந்தக் கருத்து வேறுபாடு, விமர்சனம் இருந் தாலும் சம்பிரதாயத்துக்கேனும் இரங்கல் தெரிவிக்கப்படும். ஆனால், “பிறக்கிறவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும்” என்று கில் மரணம் குறித்து, பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோன்மணி அகாலித தளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்திருக்கிறார். காலிஸ்தான் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று பொதுவில் அறியப்பட்டாலும், அதன் தொடர்பில் ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்களின் மரணத்துக்கும் காரணமானவர் கில் எனும் வெறுப்பு இன்னும் பல சீக்கியர்களிடம் மறைய வில்லை. அதன் வெளிப்பாடுதான் பிரகாஷ் சிங் பாதலின் வார்த்தைகள்.
குதிரைக் கொம்பன்
1958-ல் அசாமில் இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கியவர் கில். அங்கு மாணவர் இயக்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினார். குதிரை மீது அமர்ந்தபடி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் கடுமையான அதிகாரியாகவே அறியப்பட்டார். கர்கேஷ்வர் தாலுக்தார் எனும் மாணவர் தலைவர் மரணத்துக்குக் காரணமானவர் என்று அவர் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அசாம், மேகாலயா என்று வட கிழக்கு மாநிலங்களிலேயே பணிபுரிந்தவர், 1980-களில்தான் தனது சொந்த மாநிலமான பஞ்சாபுக்குப் பணிபுரிய அழைக்கப்பட்டார். அப்போது பஞ்சாபே பற்றியெறிந்துகொண்டிருந்தது. 1980-ல் சீக்கியர்களுக்கென்று தனி நாடு கோரி ஜக்ஜீத் சிங் சவுஹான் தொடங்கிய காலிஸ்தான் இயக்கம் சீக்கிய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்தன. பஞ்சாபில் சிறுபான்மையினராக இருந்த இந்துக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல்கள் நடந்தன. இந்தச் சூழலில் தனது வித்தியாசமான வியூகங்களால் கவனம் ஈர்த்தார் கில். கரும்பு வயல்களில் மறைந்திருந்த தீவிரவாதிகளை எதிர் கொள்ள, ட்ராக்டரில் விசேஷ ஆயுதங் களைப் பொருத்தி வயல்களுக்குள் ஓட்டச் செய்தார். பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்தன. இவை தொடர்பாகக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஆபரேஷன் பிளாக் தண்டர்
அதேசமயம், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் அவர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ நடவடிக்கை அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தந்தது. 1984 ஜூனில் அமிர்தசரஸின் பொற்கோயிலில் மறைந்திருந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே உள்ளிட்ட தீவிர வாதிகள் மீது இந்திய ராணுவம், பஞ்சாப் போலீஸ் இணைந்து நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து சில மாதங்களில் சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்ட சம்பவம், டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் என்று மறக்க முடியாத ரத்த வரலாறு நீண்டது.
1988-ல் பொற்கோயிலிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந் தவர்களை வெளியேற்றும் ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ நடவடிக்கையை, டிஜிபியாக இருந்த கில் மிகுந்த கவனத்துடன் கையாண்டார். பொற்கோயிலின் மின் விநியோகத்தையும், குடிநீர் விநியோகத்தையும் அதிரடியாக நிறுத்தி அவர்களுக்கு உளவியல் அழுத்தத்தைக் கொடுத்தார். வேறு வழியின்றி அங்கிருந்தவர்கள் வெளியேறத் தொடங்கினர். சுமார், 200 பேர் சரணடைந்தனர். 41 பேர் கொல்லப் பட்டனர். 1984 நடவடிக்கையை ஒப்பிட இது மிகக் குறைவான எண்ணிக்கை. இந்த நடவடிக்கையை தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் கில் ஒத்துழைப்பு கொடுத்தார்.
வித்தியாசமான வியூகங்கள்
காலிஸ்தான் இயக்கம் உருவான பின்னணி குறித்து அவருக்குத் தெளிவான புரிதல் இருந்தது. 1950, 60-களில் இந்தித் திணிப்பு முயற்சிகள் நடந்தபோது மொழி அடிப்படையில் சீக்கியர்கள் ஒன்றிணையத் தொடங்கியது, 1980-களில் காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டபோது சீக்கிய ஜாட் இனத்தினர் அதற்குப் பெருமளவில் பங்கெடுத்தது என்று பல விஷயங்களை அறிந்திருந்தார்.
சீக்கிய ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரான கில், ஜாட் இளைஞர்கள் கொண்ட காவல் படையை உருவாக்கி, காலிஸ்தான் கிளர்ச்சியை எதிர்கொண்டார் என்று அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார்கள். 1992 தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களையடுத்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நடைமுறைக்குச் சரிவராத யோசனையை முன்வைத்தார். எனினும், அவரது அந்த வியூகம் கைகொடுத்தது. ஒரு வேட்பாளர் கூட உயிரிழக்கவில்லை. 1995-ல் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது பஞ்சாபில் பயங்கரவாத நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்துவிட்டன.
பரபரப்பான சூழலிலும் நிதானத்தைக் கைவிடாதவர் கில். அநாவசியமாகக் கூச்சலிடாதவர். சிம்லாவின் எட்மண்ட் பள்ளியில் பயின்றவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றவர். ஆபரேஷன் பிளாக் தண்டரின்போது சர்வதேச ஊடகவியலாளர்களிடம் கம்பீரமாக உரையாற்றி கவனம் ஈர்த்தவர். அந்த நடவடிக்கையின்போது, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் உறங்காமல் இருந்தார் என்று அவருடன் பணிபுரிந்த அதிகாரிகள் ஆச்சரியத்துடன் சொல்கிறார்கள்.
கில்லுக்கு அபாரமான தன்னம்பிக்கை உண்டு. இந்திய ஹாக்கி சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது, “இந்தத் தேர்தலில் வெல்வீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்தத் தேர்தல் சம்பிரதாயத்துக்காக நடப்பதுதான். நான்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர்” என்று அதிரடியாகச் சொன்னவர் கில். அந்தப் பொறுப்பில், ஆரம்பத்தில் இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித் தந்தார். எனினும் போலீஸ் பணியின் தொடர்ச்சியாகவே இந்தப் பதவியையும் கையாண்டார் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உண்டு.
பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று 1996-ல் வழக்குத் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. ‘பஞ்சாப்: தி எனிமீஸ் வித்தின்’ எனும் தனது புத்தகத்தில் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார் கில். அதற்கும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இப்படி சர்ச்சைகள் சூழ வாழ்ந்து வந்த சிங்கம் தனது கர்ஜனையை முடித்துக்கொண்டது.
-வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT