Last Updated : 25 Sep, 2013 09:27 AM

 

Published : 25 Sep 2013 09:27 AM
Last Updated : 25 Sep 2013 09:27 AM

பிஞ்சிலே பழுப்பது ஏன்?

இளம் குற்றவாளிகள் மீது நம் சமூக கவனம் இப்போதுதான் திரும்பியிருக்கிறது. பாலியல் குற்றத்தில் சிறுவர் எனப்படும் விடலைப் பருவக் குற்றவாளி சம்பந்தப்பட்ட தில்லி நிகழ்ச்சி அதன் கோரத் தன்மையால் நம்மை உலுக்கும் வரை நாம் இளங்குற்றவாளிகள் பற்றியும் கவலைப்படவில்லை. இப்போதும் கொலை, கொள்ளை போன்ற இதர குற்றங்களிலே அவர்கள் பங்கைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பாலியல் குற்றம்தான் பிஞ்சிலேயே பழுத்துவிட்டவர்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

விரைவாக தீவிர அக்கறை செலுத்த வேண்டிய விஷயம் இவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனென்றால், இந்திய அரசின் குற்றப் பதிவு ஆவணத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன. மிக விரிவான இந்த ஆவணங்களிலிருந்து சில துளிகளை மட்டும் பார்க்கலாம்.

பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்காக விடலைகள் மீது பதிந்த வழக்குகளின் எண்ணிக்கை 2001-ல் 399. 2011-ல் 543. பெண் கடத்தல் குற்றம் 2001-ல் 79. 2011-ல் 391. கொலைக் குற்ற வழக்குகள்: 2001-ல் 531; 2011-ல் 679. வழிப்பறி 164 ஆக இருந்தது 551 ஆக ஆயிற்று. வீடு புகுந்து திருடும் குற்ற வழக்குகள் 2001-ல் 3,196. 2011-ல் 4,930. பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விடலைகளின் பங்கு இந்த 10 ஆண்டுகளில் 55 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

சட்டப்படி, 18 வயது வரை சிறார் என்று வகைப்படுத்தப்பட்ட குழந்தை விடலைப் பருவத்தினரான இந்தக் குற்றவாளிகள் யார்? இந்தச் சிறுவர், சிறுமியர் யார்? சிறுமியரா? ஆம். சிறுமியரும்தான். மொத்த இளங்குற்றவாளிகளில் சிறுமியர் எண்ணிக்கை ஆறு சதவீதம்.

இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து வரு கிறார்கள்? பாலியல் வன்முறை, கொலைக் குற்ற வழக்குகள் போடப்பட்டிருக்கும் விடலைகளில் சுமார் 64 சதவீதம்

பேர் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். சுமார் 35 சதவீதம்

பேர் 12 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், 2011 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி அந்த வருடம் பிடிபட்ட 33 ஆயிரத்து 887 பேரில் 93.2 சதவீதம்

புதுக் குற்றவாளிகள். இதற்கு முன்னரும் குற்றம் செய்து மறுபடியும் செய்து மாட்டியவர்கள் 6.8 சதவீதம்தான். இந்தப் புள்ளிவிவரத்துக்குப் பின்புலமாக இரு காரணங்களைச் சொல்லலாம். இரண்டு வருடங்களுக்கு முந்தைய 16 முதல் 18 வயதிலான பழைய குற்றவாளிகளில் சிலர் இப்போதும் குற்றங்களில் ஈடுபடக் கூடும். ஆனால், இப்போது வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அவர்கள் இதில் இடம் பெறவில்லை. எப்படிப் பார்த்தாலும் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகக் குற்றவாளிகள் உரு வாவது நிச்சயம் கணிசமாக அதிகரிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் அநாதை கள் அல்ல. 2011-ல் குற்றவாளிகளான 33 ஆயிரத்து 887 பேரில் 27 ஆயிரத்து 577 பேர் பெற்றோருடனும் 4,386 பேர் பாதுகாவலர்களுடனும் குடும்பங்களில் வாழ்பவர்கள். வீடற்றோர் 1,924 பேர் மட்டும்தான். பொருளாதார நிலைமையை எடுத்துக்கொண்டால், ஆண்டு வருவாய் 25 ஆயிரம் வரை இருப்போர் இதில் சுமார் பாதிப் பேர்தான் - 19,230. ரூ. 50 ஆயிரம் வருவாய் உள்ளோர் 90,589. ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்போர் 3,892. இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் 1,212.. மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் 398. அதற்கும் மேல் வருவாய் இருப்போர் 96. அதாவது, மாத வருவாய் சுமார் 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருப்போர் இவர்கள்.

எனவே, இந்தக் குற்றங்களைச் செய்யும் சிறுவர்களை வறுமையினால் செய்கிறவர்கள் என்றோ, குடும்பம், வீடு வாசல் இல்லாததால் செய்பவர்கள் என்றோ ஒரு வகை மாதிரியில் அடைக்கவே முடியாது. நம் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளிலிருந்தும் இந்தக் இளங்குற்றவாளிகள் உருவாகிவருகிறார்கள்.

ஏன் இப்படி 2001-ல் இருந்ததைவிடப் பல மடங்கு அதிகமாக இளங்குற்றவாளிகள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகியிருக்கி றார்கள் என்பது பற்றி விரிவான, ஆழமான சமூகப் பொருளாதார ஆய்வுகள் தேவைப்படு கின்றன. தாராளமயப் பொருளாதாரக் கொள்கை எல்லாரையும் மனிதர்களாக வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதற்குப் பதிலாக, ‘தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி…’ சந்தைக்கு வரும் பண்டங்களையெல்லாம் நுகர்வோராகவும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதை வாழ்க்கை லட்சியமாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்பதை முதல் பார்வையிலேயே உணரலாம்.

இளம் மனங்களைப் பக்குவமான திசையில் பயணிக்கவைக்கும் பொறுப்பும் வேலையும் எப்போதும் குடும்பம், கல்வி நிலையங்கள், ஊடகங்கள் என்ற மூன்று கட்டங்களில் இருக்கிறது. நம் சிறுவர்கள் குடும்பங்களுடன் இருந்தாலும், குடும்பங்கள் அவர்களைக் கைவிட்டுவிட்டன என்றே சொல்ல வேண்டும். வறுமையில் இருக்கும் குடும்பங்கள் பல சிறுவர்களைக் கவனிக்கவே முடியாமல் புறக்கணிக்கின்றன. பணக்காரக் குடும்பங்கள் செல்லம் கொஞ்சிக் கெடுத்து மனவளர்ச்சியில்லாத உடல் வளர்ச்சி மட்டுமே மிகுந்த குழந்தைகளை உருவாக்குகின்றன. நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தை அடுத்த வசதியான படிநிலைக்குக் கொண்டுபோகப்போகும் ஏணிகளாகவே குழந்தைகளைப் பார்த்து அவர்களுக்குப் பணம் என்ற ஒற்றைக் கனவை மட்டும் வலிந்து ஊட்டி அதற்குரிய வழிமுறையாக மதிப்பெண்கள் வழியே டாலர் சம்பாதிக்கும் இயந்திரங்கள் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. பல குடும்பங்களில் குழந்தைகளுக்கான முன்மாதிரிகளே இல்லை என்பதைவிட, தவறான முன்மாதிரிகள் இருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களுக்கு வந்தால், அது சொல்லும் தரமன்று. விதிவிலக்கான சில ஆசிரியர்களைக் கண்டால் வேண்டு மானால் கும்பிடத் தோன்றலாமே ஒழிய, பெருவாரியானவர்களைக் கண்டால் உமிழவே தோன்றுகிறது. சிறுவர் மதித்து வியந்து ஆராதித்துப் பின்பற்றும் முன்மாதிரிகள் ஆசிரியர்கள் 70-களுக்குப் பிறகு ‘எண்டேஞ்சர்ட்ஸ்பீஷீஸ்’ஆகிவிட்டார்கள். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இதுதான் நிலைமை.

ஊடகங்களிலும் இதேபோல விதி விலக்கான ஒரு சில இதழ்கள், ஒலி/ஒளி பரப்புகள் தவிர, பெருவாரியானவை நுகர்வுக் கலாசாரத்தின் முகவர்களாகவே செயல்படுகின்றன. விடலை மனங்களைப் பாதிப்பதில் சினிமாவும் ஊடகங்களும் மதுவும் இன்று முக்கியப் பங்கு வகிக்கின்றன. எட்டாம் வகுப்பிலிருந்தே மது முதல் போதை மருந்துகள் வரை பயன்படுத்துவது சகஜமாகிவருகிறது. தில்லி கொடூரத்தில் குற்றவாளிகள் எல்லாரும் குடித்திருந்தார்கள் என்பது முக்கியமான அம்சம். குடிக்காமல் இருந்திருந்தால் குற்றத்தின் கொடூரமேனும் குறைவாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக வாழவே இயலாத இந்தச் சமூக அமைப்பில், பாலியல் வறட்சியும் ஏக்கமும் பிரமாண்டமானதாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் பாலியல் வேட்கையை ஒவ்வொரு நொடியும் தூண்டும் வேலையை சினிமாவும் அதன் முகவர்களான தொலைக்காட்சி அலைவரிசைகளும் 24 / 7 நேரம் செய்தவண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் வளரும் நம் சிறுவர்களில் சுமார் 35 ஆயிரம் பேர்தான் இளங்குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியம்தான். பிடிபடாத இளங்குற்றவாளிகளின் எண்ணிக்கை நாம் அறிய முடியாதது. வாய்ப்பு கிடைக்காததால் நல்ல பையன்களாகவும் நல்ல பெண்களாகவும் இருப்போர் எண்ணிக்கையை அளவிட முடியாது.

பிஞ்சிலே பழுப்பதும் வெம்புவதும் மாற வேண்டுமானால், குடும்பம் மாற வேண்டும். கல்வி நிலையம் மாற வேண்டும். ஊடகங்கள் மாற வேண்டும். இல்லையேல் எதுவும் மாறாது!

ஞாநி, மூத்த பத்திரிகையாளர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x