Published : 08 Oct 2013 10:22 AM
Last Updated : 08 Oct 2013 10:22 AM
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் ஆபத்தான இரு போக்குகள் காணப்படுகின்றன. ஒன்று, சாதிய அரசியல். இன்னொன்று, மதவாத அரசியல். மருத்துவர் ராமதாஸும் தமிழருவி மணியனும் இந்தப் போக்குகளை முன்னெடுத்துச் செல்பவர்களாக அமைந்திருக்கின்றனர். பெரிய சோகம் என்னவென்றால், இருவருமே ஒரு சமயத்தில் தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திடக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் தற்காலிகமாகவேனும் ஏற்படுத்திய வரலாறு உடையவர்கள்.
“தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளுடன் மட்டுமல்ல; திராவிடக் கட்சிகள் எதனுடனும் இனி கூட்டணி அமைக்கப்போவதில்லை” என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமதாஸ் அறிவித்தார். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுக்கும் மாற்று தேவை என்ற கருத்து தமிழ்நாட்டில் சிறிது காலமாகப் பலம் பெற்றுவந்தபோதும் அதற்கு வடிவம் தரக் கூடிய செல்வாக்குள்ள அரசியல் சக்தியோ தலைவரோ உருவாகவே இல்லை. விஜயகாந்த் இதே முழக்கத்துடன் வந்தபோது 10% வரை வாக்குகளைப் பெற முடிந்தது. ஆனால், அவரது அரசியல் வழிமுறைகள், அடுத்து அ.இ.அ.தி.மு.க-வுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி போன்ற நடவடிக்கைகள் அந்த 10% வாக்காளர் நம்பிக்கையைக்கூடச் சிதைத்துவிட்டன. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுக்குத் தாங்கள் மாற்று என்று ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்த ராமதாஸ், வைகோ ஆகியோரின் நம்பகத்தன்மையும், மாறி மாறி அந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தபோது தகர்ந்ததிலிருந்து விஜயகாந்த் கற்றுக்கொள்ளவே இல்லை.
ராமதாஸ் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விக்கு, சாதியக் கூட்டணி என்ற பதில் கிடைத்துவிட்டது. சென்ற வாரம் ராமதாஸ் அமைத்திருக்கும் சாதியக் கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானங்களில் பல அரசியல் சார்ந்தவை. சாதிக்கு அரசியலில் எப்போதும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால், அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியல்ல. சாதி அடிப்படையில் மட்டுமாக தமிழர்களை அரசியல் களத்திலும் செயல்படவைக்கும் முயற்சிகளுக்கு இதுவரை தமிழர்களின் ஆதரவு இல்லை என்பதே ஆறுதலான விஷயம். தனி வாழ்க்கையில், திருமணம் முதலான சடங்குகளில் சாதியைப் பின்பற்றும் தீவிரத்தை, தமிழர்கள் எப்போதும் அரசியலில் சாதி அடிப்படைக்குக் கொடுத்ததில்லை. சாதி அடிப்படையில் மட்டுமே வன்னியர்கள் வாக்களித்திருந்தார்கள் என்றால், ராமதாஸின் கட்சி எப்போதோ பிரதான எதிர்க்கட்சியாகவே வந்திருக்க முடியும். ஆனால், வன்னியர்கள் வெவ்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களாகவே அரசியலில் இருந்துவந்துள்ளனர். இந்த உண்மை எல்லா சாதிகளுக்கும் பொருந்தும்.
ஆனால், சாதிச் சங்கங்கள் பகிரங்கமாகச் சாதியை முன்னிறுத்தித் தேர்தல் களத்தில் தலித் மக்களுக்கு எதிராக ராமதாஸ் தலைமையில் இறங்குவது என்பது வெற்றி பெற முடியாத உத்தியானாலும், அடிமட்டத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் வன்முறையையும் பாதிப்பு களையும் உருவாக்கக் கூடியது. இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். சாதிச் சங்கங்கள் கூட்டமைப்பாகத் தங்களைத் தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்ய வரும்போது, அதற்கு ஆணையம் அனுமதி மறுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாம் வலு சேர்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம், காந்தியவாதி என்று தன்னை அறிவித்துக்கொண்டு, காந்தி பெயரில் இயக்கம் நடத்திவரும் முன்னாள் காங்கிரஸ்காரரும் இந்நாள் பேச்சாளருமான தமிழருவி மணியன், தமிழகத்தில் வைகோ முதல்வராக வேண்டுமென்றால், டெல்லியில் மோடி பிரதமராக வேண்டும் என்ற விசித்திரக் கருத்தை தமிழ்நாடு முழுவதும் வைகோவின் ம.தி.மு.க. மேடைகளிலும் ஊடகங்களிலும் முழங்கிவருகிறார். நாஞ்சில் சம்பத்துக்குப் பிறகு மணியன்தான் ரகசியமாக ம.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டாரோ என்ற ஐயம் ஏற்படும் அளவு அவர் முழக்கம் இருக்கிறது.
ராமதாஸைப் போலவே வைகோவும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுக்கும் தானே மாற்று என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் மக்களிடம் விதைத்து, பின்னர் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து அதிருப்தியைச் சம்பாதித்து, இப்போது அதை மாற்ற தமிழகம் முழுக்க நடையாய் நடந்து நடந்து கால் வலிக்கக் கஷ்டப்படுபவர் வைகோ. ம.தி.மு.க-வை அரசியல் மாற்றுச் சக்தியாக முன்னிறுத்திப் பிரசாரம் செய்ய தமிழருவி மணியனுக்கு எல்லா உரிமையும் உண்டு. மணியனுக்குத் தமிழகத்தில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது அவருடைய மது எதிர்ப்புப் பிரச்சாரம். அந்தக் கொள்கையை வைகோ ஏற்றுக்கொண்டிருக்கிறார். முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான ஈழத் தமிழர் விஷயத்திலும் வைகோவும் மணியனும் ஒரே கருத்துடையவர்கள். ஆனால், மணியன் ஏன் நரேந்திர மோடியைப் பிரதமராக்க வைகோவின் துணையையும் வைகோவை முதல்வராக்க மோடியின் ஆதரவையும் தேடுகிறார் என்பதுதான் தெரியவில்லை. இது ஆபத்தான விஷயம். மணியனின் இயக்கத்தின் பெயரில் இருக்கும் காந்திக்கும், மோடிக்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா என்று சிரமப்பட்டு ஆராய்ந்தால், ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. காந்தியும் மோடியும் குஜராத்திகள் என்பதுதான். இது மணியனும் கருணாநிதியும் தமிழர்கள் என்பது போன்ற ஒற்றுமைதான்.
மோடியையும் பா.ஜ.க-வையும் மணியன் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் சொத்தையானவை. மோடியால் நேர்மையான நல்லாட்சியை, வளர்ச்சியைத் தர முடியும் என்கிறார் மணியன். குஜராத்தில் மோடி சாதித்ததாகச் சொல்லப்படும் வளர்ச்சி ஒரு புனைவு என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. பா.ஜ.க. ஆட்சி நடத்திய மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு நிகரான ஊழல்கள் நடந்திருப்பது வரலாறு. முஸ்லிம்கள் படுகொலையில் மோடியின் பங்களிப்பு இன்னமும் அவரை நிரபராதி என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவிலேயே இருக்கிறது. மணியன் சொல்லும் இன்னொரு காரணம், ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தமிழருக்கு எதிராக ராஜபக்ஷவுக்குச் சாதகமாக நடந்துகொண்டதால், அதை அகற்ற பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும் என்பதாகும். பா.ஜ.க-வின் ஈழத் தமிழர் கொள்கை காங்கிரஸின் கொள்கையிலிருந்து துளியும் மாறுபட்டதல்ல. தனி ஈழம் அமைவதை மணியனும் வைகோவும் விரும்பலாம். ஆனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே அதற்கு எதிரானவைதான்.
ராமதாஸும் வைகோவும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உறவால் அழிந்தார்கள் என்றால், அதற்கு நேர் மாறாக, அப்படிப்பட்ட உறவால் லாபமடைந்த ஒரே கட்சி பா.ஜ.க-தான். வாஜ்பாயியைத் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாகப் பரப்பியவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இப்போது அவர்கள் இருவரும் தங்களைச் சுமக்க முன்வராத நிலையில் அடுத்த திராவிடக் கட்சித் தலைவரான வைகோவை பா.ஜ.க. பயன்படுத்த உதவும் முகவராக மணியன் அமைந்திருக்கிறார். “பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல” என்று முரசொலி மாறன் தொடங்கிவைத்த பிரமாண்டமான தவறின் நீட்சியை இன்று மணியன் உயிர்ப்பிக்கிறார். அத்வானி தமிழகம் வந்தபோதுகூட எந்த இஸ்லாமிய நிறுவனமும் கட்டாயமாக மூடப்பட்டதில்லை.
ஆனால், மோடி திருச்சிக்கு வந்தபோது இஸ்லாமியர்களின் கல்லூரிக்குக் கட்டாய விடுமுறை தரப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்தால், எப்படிப்பட்ட கெடுபிடிகளை ஏற்றுக்கொண்டு சிறுபான்மையினர் நடக்க வேண்டும் என்பதற்கு இது ஓர் அடையாளம்.
காலம் கடந்துவிடவில்லை. இப்போதும்கூட ராமதாஸும் தமிழருவி மணியனும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்!
- ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT