Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM
சமீபத்தில் ஒரு மாணவனை பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். மறுநாள் அவனுக்கு பிளஸ் 2 தேர்வு.
அந்தப் பையன் என்னிடம், ‘‘டாக்டர், என்னமோ தெரியல. படபடப்பா இருக்கு. இதயம் வேகமா துடிக்குது. கை கால் நடுங்குது. மூச்சு முட்டுது. மயக்கமா இருக்கு. வயித்தைப் புரட்டுது. சாப்பிட முடியல..’’ என்று ஏகப்பட்ட உபாதைப் பட்டியலை வாசித்தான். கடும் சோர்வில் இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கண்ணைச் சுற்றி கருவளையம் வேறு!
என்னவென்று விரிவாக விசாரித்ததில் உண்மை விளங்கியது. மாணவன் தேர்வுக்காக கடந்த சில நாட்களாகவே இரவு பகல் பாராமல் படித்திருக்கிறான். தூக்கம் வரக்கூடாது; உற்சாகமாகப் படிக்க வேண்டும் என்று அவனது தந்தை அரை மணிக்கொருதரம் அக்கறையாக மாணவனுக்கு டீ போட்டுக் கொடுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 40 டம்ளர் டீ குடித்திருக்கிறான் மாணவன். அதன் விளைவுதான் மேற்கண்ட உபாதைகள்.
அந்த மாணவன் மட்டுமல்ல.. பலருக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்க உதவும் காஃபின், சாந்தைன், தியோஃபிலின் போன்ற ரசாயனப் பொருட்கள் தேயிலையில் இருப்பது உண்மைதான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்தானே.
தேயிலை ரசாயனப் பொருட்களின் மிதமிஞ்சிய தூண்டுதலால் மூளை களைப்படைந்து விடுகிறது. அது நரம்புகளைப் பாதிப்பதால் கை நடுக்கம் ஏற்பட்டு தேர்வையே எழுத முடியாமல் போய்விடுவதும் உண்டு.
சரி, என்ன செய்யலாம்? காஸ் நிறைந்த குளிர்பானம் குடிக்கலாமா? அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுவது போன்றதாகும். அவற்றில் உள்ள காஃபின் அளவு, தேநீர், காபியைவிட மிகமிக அதிகம்.
பழச்சாறு, காய்கறி சூப், புரதச் சத்து நிறைந்த மாவுக் கஞ்சி, கடலை உருண்டை, சாலட் என்று எவ்வளவோ அருமையான உணவு வகைகள் இருக்கின்றன. வாழைப்பழமும் நல்லதுதான். இவற்றைக்கூட அதிகம் சாப்பிடாமல் மிதமாக சாப்பிடுவது நல்லது.
ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து படிப்பது சலிப்புத் தன்மையை ஏற்படுத்தி, மூளையை களைப்படையச் செய்யும். இதனால், மறதி ஏற்படும்.
மேலும் கை, கால்களை குறிப்பிட்ட கோணத்தில் நீண்ட நேரம் மடக்கி அமர்ந்து எழுதுவதும் படிப்பதும் நல்லதல்ல. எனவே, மணிக்கொரு முறை சில நிமிடங்கள் சிறு நடைப்பயிற்சி, இசை கேட்பது போன்ற ஆரோக்கியமான வழிகளில் புத்துணர்ச்சி பெறலாம்.
தேர்வுக்காக அதிகம் டீ, காபி அருந்துவது ஓட்டப் பந்தயத்துக்காக ஊக்க மருந்து பயன்படுத்துவதைப் போன்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT