Published : 01 Jan 2016 09:31 AM
Last Updated : 01 Jan 2016 09:31 AM
*
கூவம், அடையாறு மற்றும் பக்கிக்ஹாம் கால்வாய் ஆகியவற்றை சீரமைப்பது தமிழக ஆட்சியாளர்களின் அரை நூற்றாண்டு கனவு. எதை மறந்தாலும் ஓயாமல் இந்த நீர்நிலைகளைப் பற்றி அல்லும் பகலும் யோசித்துக்கொண்டே இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது பக்கிம்ஹாம் கால்வாயை ஆழப்படுத்தி படகு போக்குவரத்து விட விரும்பினார். இதற்கு எனத் தனிக்குழுவே அமைத்தார் அவர். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது. அதன் பின்பு பல முயற்சிகள். பல திட்டங்கள். பல அறிக்கைகள். ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம்பெற்றன கூவம், அடையாறு, பக்கிம்ஹாம் உறுதிமொழிகள். பின்பு தமிழக அரசு பக்கிம்ஹாம் கால்வாய் மூலம் தமிழகத்தையும் ஆந்திரத்தையும் இணைக்க ஆசைப்பட்டது. 2007-ல் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கால்வாயை ஆய்வு செய்துவிட்டு, மேற்கு வங்கம் வரை இணைக்கலாம் என்று ஆச்சர்யமூட்டினார்கள். புதுவை - சென்னை - காக்கிநாடா - பத்ராசலம் - ராஜமுந்திரி - மகாநதி - ஒடிஷா வழியாக மேற்கு வங்கம் வரை நீட்டிக்க திட்டம் தீட்டப்பட்டது. ‘ரைட்ஸ்’ என்கிற நிறுவனம் ரூ.542 கோடியில் திட்ட அறிக்கையைத் தயார் செய்துகொடுத்தது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 18.07 மில்லியன் டன் சரக்குகளைக் கால்வாய்கள் வழியாகக் கையாளலாம்.
இதேபோல்தான் கூவம் திட்டமும். 1963-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ‘கூவம் மணக்கும்’ என்கிற கமகமக்கும் வாக்குறுதியை தி.மு.க. முன்வைத்தது. அடுத்து வந்த அ.தி.மு.க-வும் அதையே வழிமொழிந்தது. முன்வைத்தலும் வழிமொழிதலும் குறையின்றிக் தொடர்ந்தன. 2009-ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு கூவத்தை சீரமைப்பதற்காக சிங்கப்பூர் சென்றது. அங்கு உள்ள கல்லாங் ஆறு, சிங்கப்பூர் ஆறு ஆகியவற்றை சிங்கப்பூர் அரசு எப்படி சீரமைத்தது என்பதை ஆராய்ந்தது. சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. சுமார் ரூ. 468 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க அரசும் கூவத்தைக் கைவிடவில்லை. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ’ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம்’ ரூ.604 கோடியில் நடைபெறும் என்று 2014-15 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்கின்றன நமது ஆட்சியாளர்களின் நெடுங்கனவுத் திட்டங்கள். அவர்கள் கனவு காணட்டும். சற்று நாம் லண்டன் வரை சென்று திரும்புவோம்.
1950-களில் கூவத்தைவிட மோசமாக இருந்தது தேம்ஸ் நதி. நகரத்தின் சாக்கடைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் நதியில் கலந்தன. குப்பைகள் கொட்டப்பட்டன. துர்நாற்றத்துடன் கரிய நிறத்தில் கலங்கி ஓடியது தேம்ஸ். நதியின் உயிரினங்கள் அத்தனையும் அழிந்துவிட்டன. ஒருகட்டத்தில் உயிரியல்ரீதியாக தேம்ஸ் இறந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. தேம்ஸ் நதியில் கால் வைத்தால்கூட நோய்த் தொற்றுகள் ஏற்படும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேசமயம் தேம்ஸ் நதி குறித்து பெரும் கவலைகொண்டது பிரிட்டிஷ் அரசு. ஏனெனில், ஒரு காலத்தில் ஆங்கிலேய பாரம்பரிய கிரீடத்தில் மிளிரும் ரத்தினம் என்று போற்றப்பட்டது தேம்ஸ் நதி. அது ராஜ குடும்பத்தின் கவுரவமாகவும் கருதப்பட்டது. தொடர்ந்து பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அமைப்பு ‘லண்டன் நதிகள் செயல்திட்டம்’ ஒன்றை வகுத்தது. தேம்ஸ் நதி சீரமைப்பு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. தேம்ஸ் நதியை சீரமைப்பது குறித்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏராளமானத் தன்னார்வ அமைப்புகள் ஒன்றுதிரண்டன. கிராமங்கள்தோறும் விவசாயிகள் திரண்டார்கள். மக்கள் குழுக்கள் உருவாகின. அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நதியை சீரமைக்க வேண்டும் என்றால் முதல் வேலையாக நதியில் கலக்கும் கழிவு நீரை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நகரில் 13 மில்லியன் கழிவு நீர் வாடிக்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கிழக்கு லண்டனை தலைமையகமாகக் கொண்டு நகரெங்கும் 348 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. நகரின் குறுக்கும் நெடுக்கிலும் 67,000 கி.மீ அளவுக்குக் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 31 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்குக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டது. நதியின் கரைகளில் வரிசையாக அலைவழி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கத்திலும் சிறிய அளவில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு சுரங்கங்கள் வழியாக தண்ணீர் விடப்பட்டது. இவை தவிர, ஆக்சிஜனை செலுத்தும் ஓடங்கள் (Oxygenation barges) மூலம் நாள் ஒன்றுக்கு 30 டன் ஆக்ஸிஜன் நதிக்குள் செலுத்தப்பட்டது. நதியில் தேங்கியிருந்த குப்பைகளை சேகரிக்க ஸ்கிம்மர் படகுகள் பயன்படுத்தப்பட்டன. குறுக்குக் கால்வாய்கள் வெட்டப்பட்டு, நதியின் குறுக்கே 33 பாலங்கள் கட்டப்பட்டன.
அடுத்ததாக, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. நதியில் தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கலப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கு என்றே பிரத்தியேக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, கழிவுநீரை சுத்திகரித்து பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். ஆற்றின் கரைகளில் இருந்த பழைய கான்கிரீட் தடுப்புகள் அகற்றப்பட்டன. மண் தடுப்புகள், மரச் சட்டத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் இயற்கையான நாணல் படுகைகள் உருவாயின. ஆற்றுப் படுகையில் வண்டலை தக்க வைக்க பிற ஆறுகளில் சேகரிக்கப்பட்ட கூழாங்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் உருவான பாசிகள் உயிரினங்களுக்கு உணவாகின. கிளை நதிகள், கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டன. ஆற்றில் இருபுறமும் ஒரு கி.மீ வரை ஆற்றின் சொத்தாக அறிவிக்கப்பட்டது. கரை நெடுகப் பாரம்பரிய ஆற்றுவாரி மரங்கள் நடப்பட்டன. அரசாங்கம் மட்டுமின்றி, தன்னார்வ அமைப்புகள் கரையோர சிறு நகரங்கள்தோறும், கிராமங்கள்தோறும் இதேபோன்ற பணிகளை மேற்கொண்டன.
படிப்படியாக நதியின் நீர் தூய்மையானது. பல்லுயிர்கள் பெருகின. நதியின் பாரம்பரிய மீன்களான சால்மன், ஒட்டர் மற்றும் வணிகரீதியில் லாபம் தரும் ஸோல், பாஸ் உட்பட 125 வகையான மீன்கள் நதியில் பெருகின. மீன்பிடித் தொழில் மேம்படுத்தப்பட்டது. 1990-2008 ஆண்டுகளுக்கு இடையே இந்தப் பணிகள் மிக வேகமாக நடந்தன. பராமரிப்பு இன்றளவும் தொடர்கிறது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக லண்டன் நதிகள் செயல் திட்டம் தீட்டப்பட்டு, புதியதாக 58 நதிகளை மீட்க பணிகள் நடைபெற்றுவருகின்றன.
நீர்நிலைகள் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய பரிசு ‘தீஸ்’ (Theiss River prize). நதி மேலாண்மை மற்றும் மறு சீரமைப்புப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அளிக்கப்படும் பரிசு இது. 2009-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நதிகள் கலந்துகொண்டன. போட்டி கடுமையாக இருந்தது. இறுதி சுற்றுவரை சீனாவின் மஞ்சள் ஆறு, ஜப்பானின் ஸ்மானிக் ஆறு, ஆஸ்திரேலியாவின் ஹட்டாஹ் ஏரி ஆகியவை தேம்ஸ் நதியுடன் போட்டியிட்டன. இறுதியில் தேம்ஸ் நதியே வென்றது. பரிசுத் தொகையான 3.5 லட்சம் டாலர்கள் தேம்ஸ் நதி மறு சீரமைப்பு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையை வளரும் நாடுகளின் நதிகள் சீரமைப்புக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று தேம்ஸ் நதியைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. குடிநீராக மாறியிருக்கிறது தேம்ஸ் தண்ணீர். படகுப் போக்குவரத்து நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தேம்ஸ் நதிக்கரையில் புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.
“தேம்ஸ் நதி எங்கள் தேசத்தின் மதிப்பு மிகுந்த சொத்து. அவள் எங்கள் அழகு ராணி. அவளை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம்” என்று பரிசளிப்பு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்.
கூவத்தை பற்றி நமது ஆட்சியாளர்கள் பெருமையாகச் சொல்லி, எப்போது கண்கலங்குவார்கள்?
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT