Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்கள் என்று பேர் பெற்ற தாலிபன்கள் ஒரு பெண் தற்கொலைப் போராளியைத் தங்கள் காரியத்துக்கு அனுப்பிவைப்பார்களா? அதுவும் பத்து வயதேயான ஒரு சிறுமியை?
ஆப்கானிஸ்தானை இன்று பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் பிசாசு இந்த விவகாரம்தான்.
மூணு நாளைக்கு முன்னால் Spozhmai என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு சிறுமியை ஆப்கானின் தெற்கு ஹெல்மாந்த் மாகாணத்தில் கைது செய்தார்கள். ஒரு செக் போஸ்டு பக்கமாக நடந்து வந்த அந்தச் சிறுமி அப்போது ஒரு மனித வெடிகுண்டாக இருந்தாள். போலீஸ்காரர்களைப் பார்த்து பயந்து, வந்த காரியத்தை நிறைவேற்றாமல் பெப்பெப்பே என்று விழித்து மாட்டிக்கொண்டாள். பரிசோதித்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி. கவனமாக குண்டு கைங்கர்ய வஸ்துகளைக் கழட்டி வைத்துவிட்டு அந்தப் பாலருந்தும் குழந்தையை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார்கள்.
விசாரித்ததில் அந்தச் சிறுமியின் மூத்த சகோதரன், பிராந்தியத்தில் ஒரு தாலிபன் கமாண்டராக இருப்பவன் என்றும் அவன்தான் வற்புறுத்தி, தன் தங்கையை மனித வெடிகுண்டாக அனுப்பி செக்போஸ்டைத் தகர்க்கச் சொன்னதாகவும் மேற்படி பாப்பா சொன்னது.
விவகாரம் அதிபர் ஹமீத் கர்சாய் வரைக்கும் போய்விட்டது. அந்தச் சிறுமி சொன்ன முகவரிக்கு ஆள் அனுப்பிப் பார்த்ததில் ஹமீது சாஹிப் என்னும் அவளது சகோதரன் வீட்டில் இல்லை. விஷயமறிந்து அவன் தலைமறைவாகிவிட்டான். விவகாரம் சூடு பிடிக்க, செத்தாலும் நாங்கள் பெண்களை, அதுவும் குழந்தைகளை எங்கள் காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை; இது வெறும் கட்டுக்கதை; எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாலிபன்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இங்கேதான் சிக்கல் உதிக்கிறது. அந்தப் பத்து வயதுச் சிறுமியோ, உத்தரவிட்டது தாலிபன்கள்தான் என்கிறது. இல்லவே இல்லை என்று தாலிபன்கள் சொல்கிறார்கள். இரண்டில் எது உண்மை?
தாலிபன்களைப் பொறுத்தவரை ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தை, அது மனித வெடிகுண்டுத் தாக்குதலாகவே இருந்தாலும்கூட - மறைத்ததாகச் சரித்திரமில்லை. பொதுவில் பெண்களுக்கும் தாலிபன்களுக்குமான நல்லுறவு குறித்து உலகறியும். அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்களா என்பதே இப்போதைய பெருங்கவலை மற்றும் ஒரே சந்தேகம்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு கண்ணராவிக் காரியங்கள் குறித்துச் சில தினங்கள் முன்னர் இங்கு எழுதியிருந்தேன். இதுவும் அதன் தொடர்ச்சியாயிருக்குமோ என்கிற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு சம்பவம் இதே மாதிரி நடக்குமானால் உறுதியாகிவிடும். அப்படியொன்று நடக்கவே நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை உடனே செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் கர்சாய்.
மேற்படி சிறுமி இப்போது போலீஸ் பாதுகாப்பில்தான் இருக்கிறாள். தன்னால் இனிமேல் வீட்டுக்குப் போகமுடியாது; அண்ணங்காரன் கொன்றுவிடுவான், எனவே எனக்கு அதிபரே ஒரு வீடு பார்த்து வாழவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறாள். பத்து வயசுக் குழந்தை இத்தனை பேசுமா, இதெல்லாம் கேட்குமா, இதற்குப் பின்னாலும் ஏதேனும் முன்னேற் பாடுகள் இருக்குமா - எத்தனையெத்தனை சந்தேகங்கள், குழப்பங்கள்!
ஆப்கன் அழிந்துகொண்டிருக்கிறது. ஹமீத் கர்சாய் அதற்கு சாட்சியாக இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT