Published : 01 Jul 2016 10:25 AM
Last Updated : 01 Jul 2016 10:25 AM
ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது?
உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்ததை ஒட்டி ஆங்கில ஊடகங்களில் ‘பிரெக்ஸிட்’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், எக்ஸிட் (பிரிட்டன் வெளியேற்றம்) என்னும் சொற்களின் இணைப்பே பிரெக்ஸிட். இத்தகைய புதிய பிரயோகங்கள் தமிழில் உருவாகின்றனவா? பிரெக்ஸிட்டைத் தமிழில் சொல்ல யாராவது முயன்றிருக்கிறார்களா? அப்படி யாரேனும் உருவாக்கினால் அதை ஊடகங்களும் பொதுமக்களும் பயன்படுத்த முனைகிறார்களா? அதைப் பற்றி விவாதிக்கிறார்களா?
தமிழ் அண்மைக் காலத்தில் பல சவால்களைச் சந்தித்துள்ளது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green House Effect) என்பதைப் பசுமை இல்ல விளைவுகள், பச்சில்ல விளைவுகள், பசுங்குடில் விளைவுகள் எனப் பலவாறாகச் சொல்லிவந்தோம். இன்று பசுங்குடில் விளைவு என்னும் சொல் பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இணைய தளம், உரலி, நிரலி, தேடுபொறி, தரவிறக்கம், தரவேற்றம் ஆகிய சொற்களும் பலவித மாற்றங்களுக்குப் பிறகு நிலைபெற்றுள்ளன. ஆனால், இன்னும் தமிழுக்கு வர வேண்டிய சொற்கள் பல உள்ளன. போக வேண்டிய தூரம் அதிகம்!
புதிய துறைகள் சார்ந்த புதிய சொற்கள் ஒருபுறம் இருக்கட்டும். பழைய சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. கோயில் என எழுதுவது சரியா, கோவில் என எழுதுவது சரியா என்று ஒரு காலத்தில் விவாதிக்கப்பட்டது. தடயமா, தடையமா, பழமையா பழைமையா, சுவரிலா, சுவற்றிலா என்றெல்லாம் கேள்விகள் எழுந்ததுண்டு. மிதிவண்டி என்று தமிழில் சொல்லலாமா அல்லது சைக்கிள் என்பதையே தமிழாக்கிக்கொள்ளலாமா என்ற விவாதமும் நடந்ததுண்டு. டிவி - தொலைக்காட்சி, ரேடியோ - வானொலி, எஃப்.எம். - பண்பலை என ஒரு பொருளுக்கு இருமொழிச் சொற்களும் இயல்பாகப் புழங்கிவருவது குறித்த பெருமிதங்களும் புகார்களும் தமிழர்கள் மத்தியில் உள்ளன. மவுஸ், க்ளிக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், செல்ஃபி, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போன்ற சொற்களைப் பற்றிய விவாதமும் நடந்துவருகிறது. இவற்றுக்கிடையில், அபாயகரமானதொரு போக்கு ஒன்றும் தென்படுகிறது. ள, ல, ழ, ண, ன ஆகிய எழுத்துக்களுக்கான வித்தியாசம்கூடத் தெரியாத ஒரு தலைமுறை உருவாவது!
நவீன வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தமிழைத் தயார்ப்படுத்துவதோடு, தமிழின் அடிப்படைத் தன்மைகளைத் தமிழர்களுக்கு நினைவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. இந்த இரு விதமான பணிகளையும் வாசகர்களோடு சேர்ந்து மேற்கொள்வதுதான் இந்தப் பத்தியின் நோக்கம். இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தமிழின் சவால்கள், பாய்ச்சல்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை அலசுவோம். அறிவுபூர்வமான, புலமை சார்ந்த விவாதங்களை விட்டுவிட்டு, நடைமுறை சார்ந்து தமிழை அணுகுவோம்.
(பேசுவோம்..)
- தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT