Published : 12 Nov 2014 10:01 AM
Last Updated : 12 Nov 2014 10:01 AM
அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர்தான் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன். 10.11.2014 மாலை, டெல்லியிலுள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் தனது 56-ம் வயதில் காலமான செய்தி பேரதிர்ச்சியாய் என் செவிகளை வந்தடைந்தது.
ஏறத்தாழ 30 ஆண்டு கால நண்பரொருவரின் மறைவு என்பதைக் காட்டிலும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமொன்றில் பிறந்து, நவீன சிந்தனையாளர்களில் ஒருவராக, கிராம்ஷியின் மொழியில் கூறுவதானால் ஓர் அங்கக அறிவாளியாக (organic intellectual) வளர்ச்சியடைந்து, தமிழகத்தின் சமகால அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்த மனிதர் மறைந்துவிட்டார் என்னும் துக்கமே என் போன்றோரிடம் மேலோங்கி நிற்கிறது.
கல்வியும் ஆய்வும்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிறந்து, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்த தனக்கு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேரும் வரை ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடிந்ததில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் புலமை பெற்ற அவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (எம்.ஐ.டி.எஸ்.) மார்க்ஸியப் பொருளாதார அறிஞர் சி.டி. குரியனின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலுள்ள நில உடைமை உறவுகளைப் பற்றிய மிகச் சிறப்பான ஆய்வைச் செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யில் 1980-களிலிருந்தே தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். கொல்கத்தாவில் உள்ள சமூகவியல் ஆராய்ச்சி மையத்தில் ஓராண்டு காலம் அவர் பணியாற்றினார். கொல்கத்தாவில் இருந்த காலத்திலும் அதன் பிறகும் ‘கீழ்நிலை மாந்தர்’ கண்ணோட்டத்திலிருந்து வரலாறு எழுதப்படும் போக்குக்கான (சபால்டெர்ன் ஸ்டடீஸ்) உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
‘சவுத் இன்டியன் ஸ்டடீஸ்’ என்னும் ஆய்வேட்டை நிறுவி, கேரள அறிஞர் கே.டி. ராம்மோகன் போன்றோரின் துணையுடன் அதனை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டுவந்தார்.
எம்.ஜி.ஆரும் கருப்புக் கண்ணாடியும்
மீண்டும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கே வந்து சேர்ந்து, இணை பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தான், பார்ப்பனரல்லாதார் இயக்கம்பற்றிப் பொதுவாகவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்பற்றிக் குறிப்பாகவும் அக்கறை செலுத்தத் தொடங்கினார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்த அவரது அக்கறைகள், பண்பாட்டு ஆய்வுத் துறைக்கும் விரிவடைந்தன.
எம்.ஜி.ஆர். என்னும் நிகழ்வுப் போக்குபற்றி அவர் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யில் எழுதிய கட்டுரை பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, ‘தி இமேஜ் ட்ராப்: எம்.ஜி. ராமச்சந்திரன் இன் ஃபில்ம்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ்’(The Image Trap: M.G. Ramachandran in Films and Politics) என்னும் முழு நூலாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் செல்வாக்கு வளர்ந்த விதத்தை விளக்குவதற்கு, ‘மேலாண்மை’ பற்றிய கிராம்ஷியக் கருத்தாக்கத்தை இந்த ஆய்வு நாலில் பயன்படுத்தினார்.
மற்றவர்களின் கண்களைப் பார்க்கும், ஆனால், தங்கள் கண்களை மற்றவர்கள் பார்க்க முடியாமல் செய்யும் கருப்புக் கண்ணாடிகளைத் தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதன் ‘ரகசிய’த்தை அவரால் சிறப்பாக விளக்க முடியாவிட்டாலும், திரைப்பட ஆய்வா ளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் பலரது கவனத்தை மிகவும் ஈர்த்தது அந்த நூல். தந்தை பெரியாரையும் அவரது சுயமரியாதை இயக்கத்தையும் ஆங்கிலம் பேசும் உலகுக்கு எடுத்துச்சென்றவர்களில் ஒருவர்
எம்.எஸ்.எஸ். பாண்டியன். ‘பிராமின்/நான்-பிராமின்’(Brahmin/Non-Brahmin) என்னும் அவரது ஆங்கில நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தல் என்னும் பெயரால் பிற்போக்கு வேளாளத் தமிழ் அடையாளத்தை நிறுத்த முயன்றவர்களிடமிருந்து, சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டிருந்த பெரியாரையும் அவரது மரபையும் உயர்த்திப் பிடித்துவந்தார் அவர். ஆதிக்க சாதியினருக்கு மட்டுமின்றி ‘சாதி-எதிர்ப்பாளர்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் சிலருக்கும்கூடப் பெரியார் ஏன் தொடர்ந்து ‘உறுத்தலாகவே’ இருக்கிறார் என்பதை விளக்க வும் விளங்கிக்கொள்ளவும் அவர் முயன்றார்.
கருத்து மேலாண்மைக்கு எதிரானவர்
தமிழகத்தில் தலித்துகள் மீது பிற்பட்ட சாதியினர் நடத்தும் தாக்குதல்களைப் பற்றிய புதிய பார்வையொன்றை அண்மையில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’க்கு எழுதிய கட்டுரைகளில் முன்வைத்தார். இவற்றிலும் அவர் ‘மேலாண்மை’பற்றிய கிராம்ஷியக் கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆதிக்க சாதியினர் ‘கருத்து ரீதியாக’ மேலாண்மை செலுத்த முடியாதபோது, பலவந்தத்தை, வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், இது அவர்களின் மேலாதிக்கம் சரிந்து விழுந்து கொண்டிருப்பதற்கான அடையாளமே என்றும் வாதிட்டார்.
ஹவாய், கொலம்பியா, மின்னஸொட்டா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுகள் மையத்தின் பேராசிரியராகப் பணியேற்றார். சமகால வரலாற்றைக் கற்பிப்பதிலும் தம்மிடம் நேரடியாகப் பயிலாத மாணவர்களுக்கு - குறிப்பாக தலித் மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் - உதவி செய்வதிலும் மிகச் சிறப்பான ஆசிரியர் எனப் பெயரெடுத்த அவர், அந்தப் பல்கலைக்கழகத்தின் கல்விமான்கள் பெரும்பாலோரிடமிருந்து அந்நியப்பட்டிருந்தார்.
தமது கருத்துகளை - அவை சரியானவையோ தவறானவையோ - வெளிப்படையாகச் சொல்வதே அவரது பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது என்றாலும், ‘அரசியல்ரீதியாக சரியான கருத்துகளை’ சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ளும் ‘சாமர்த்தியத்’தை அவர் அறவே வெறுத்தார்.
அதிமுக, திமுக…
அதிமுகவைத் தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்துவந்த அவர், திமுக மீது சிறிது காலம் கூடுதலான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆயினும், ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது திமுக செயலற்று நின்றதை அவரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் இல்லை என்றாலும், ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினையில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் அக்கறை காட்டும்படி செய்தார். அதன் பொருட்டு, இந்தியில் சில வெளியீடுகளைக் கொண்டுவர உதவினார். அண்மையில் காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளின் பொருட்டு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து பொருட்களைத் திரட்டி அனுப்பி வைத்தார்.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உலகத்தில் காணப்படும் சில பலவீனங்கள் அவரையும் தொற்றிக்கொண்டதால், தனது உடல்நிலையைப் பற்றிச் சிறிதும் அக்கறையற்றவராய் மரணத்தை வரவழைத்துக்கொண்டார். பேரிழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, தமிழக, இந்திய, தென்னாசியச் சிந்தனை உலகம் அனைத்துக்கும்தான்.
- எஸ்.வி. ராஜதுரை,
மார்க்ஸிய - பெரியாரியச் சிந்தனையாளர்,
சமூக - அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: sagumano@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT