Published : 18 Aug 2015 10:39 AM
Last Updated : 18 Aug 2015 10:39 AM
தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் விவசாயம், குடிநீர் தேவை களுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தொழிற்சாலைகளுக் கும் குறைந்த விலையில் தண்ணீர் வழங் கப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சி னைகள் தொடர்கதையாக நீள்கின்றன.
தாமிரபரணியில் இருந்து தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள். தாமிரபரணி தண் ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண் டம் அணை வடகால் மூலம் வழங்கு வதற்காக 1970-ம் ஆண்டு ரூ.4.70 கோடியில் 20 எம்.ஜி.டி. திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கனஅடி தண்ணீர், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் இருந்து தூத்துக்குடி பகுதியில் 8 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தொழிற்சாலைகளுக்கு செல்லும் தண்ணீர்
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முன்கார் சாகுபடியும், பிசான சாகுபடிக்கும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பு விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி மேற்கண்ட திட்டம் 23 எம்.ஜி.டி. திட்டமாக விரிவு செய்யப்பட்டு அணை தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தாமிரபரணி நதி நீர் உரிமை, பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்புக்கே சொந்தம். இங்கி ருந்து தண்ணீர் எடுக்க பொதுப்பணித் துறையுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆனால், அந்தத் திட்டத்துக்கு எந்தவித ஒப்பந்தமும் செய்யாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து வருகிறது என்கிறார்கள் விவசாயி கள். 1,000 லிட்டரை 50 பைசா வீதம் விலைக்கு வாங்கும் குடிநீர் வடிகால் வாரியம், அதனை சுத்திகரித்து தொழிற் சாலைகளுக்கு 1,000 லிட்டருக்கு ரூ. 15 வீதம் விற்பனை செய்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் காலன் லிட்டர் வீதம் ஆண்டுக்கு 3,31,85,800 கனமீட்டர் என ஆண்டுக்கு ரூ.1,65,92,300-க்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் பொதுப்பணித் துறைக்கு சுமார் ரூ. 83 கோடி வரை தமிழ்நாடு குடிநீர் வாரியம் பாக்கி செலுத்த வேண்டியிருக்கிறது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கி 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.49 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் அரசுக்கு ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள்.
தொழிற்சாலைகள் தரப்பில் பேசிய வர்கள், “இந்தப் பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கிவிட்டது. நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. எனவே விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற் படும்” என்கிறார்கள்.
தண்ணீர் உறிஞ்சும் ஆலைகள்
மேற்கண்ட தொழிற்சாலைகளை தவிர கங்கைகொண்டான் சிப்காட் வளா கத்தில் இரு குளிர்பான ஆலைகளும் தாமிரபரணியில் இருந்து பெருமளவு தண் ணீரை உறிஞ்சுகின்றன. சிப்காட் தொழிற் சாலைகளுக்காக சீவலப்பேரி அருகேயிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த வளாகத்தின் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி தொழில் தொடங்க அனுமதி இல்லை என்று சொல்லப்படும் நிலையில், 2004-ம் ஆண்டு முதல் அங்கு ஒரு குளிர்பான நிறுவனத்துக்கு 1,000 லிட்டர் தண்ணீர் ரூ. 40 என தினமும் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னொரு குளிர் பான ஆலைக்கும் அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 7.5 லட்சம் லிட்டர் தண் ணீர் உறிஞ்சப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுதொடர் பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ள நுகர்வோர் குழுக்களின் கூட்ட மைப்பு மாநில தலைவரான டி.ஏ. பிரபாகர், “இங்கு ஏழை மக்கள் குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்று, குளிர்பானம் தயாரிக்கிறார்கள். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குளிர்பான நிறுவனம், புதியதாக இன்னொரு திட்டத்துக்கு அனுமதி கோரியிருக்கிறது. மற்றொரு பன்னாட்டு நிறுவனமும் புதிதாக தனது கிளையை கங்கைகொண்டான் சிப்காட்டில் தொடங்க உள்ளது. ஏற்கெனவே கங்கை கொண்டானில் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை அந்த நிறு வனம் பெற்று வருகிறது. தவிர, தொழிற் சாலையின் ரசாயனக் கழிவுகளால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
90 வயதிலும் ஆற்றைக் காக்க போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை பாதுகாக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதி நீர்ப் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ்.நயினார் குலசேகரன். தாமிரபரணி தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு விநியோகிப்பதை எதிர்த்தும், ஆற்றை காக்கவும் 10-க்கும் மேற்பட்டமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருக்கும் இவருக்கு வயது 90.
“23 எம்.ஜி.டி. திட்டத்தால் தூத்துக்குடியின் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு ஒரு போகத்துக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் தாமிரபரணி ஆற்றிலும், பிரதான கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் வற்றி வருகிறது. இதுதொடர்ந்தால் கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
(தவழ்வாள் தாமிரபரணி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT