Published : 29 Jul 2016 10:27 AM
Last Updated : 29 Jul 2016 10:27 AM
புதுக்கவிதை முயற்சிகளை க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்றவர்கள் 1950-களி லிருந்து முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். 60-களின் இறுதியில் ஞானக்கூத்தன் கவிதை எழுத வருகிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஞானக்கூத்தனின் கவிதைகள் சி.சு.செல்லப்பாவை ஈர்க்கவில்லை. அந்த நேரத்தில் ஞானக்கூத்தனின் அசலான குரலையும் அசலான போக்கையும் இனம்கண்டவர் சி. மணி. அவர் நடத்திய ‘நடை’ சிற்றிதழில்தான் ஞானக்கூத்தனின் கவிதைகள் முதலில் வெளியாயின.
ஞானக்கூத்தனுக்குச் சரியான களத்தையும் பாதையையும் அமைத்துக் கொடுத்ததில் ‘நடை’, ‘கசடதபற’ இதழ்களுக்கும் சி.மணிக்கும் முக்கியப் பங்கு உண்டு. ‘கசடதபற’ என்ற பெயரையே, அதாவது ‘கசடதபற - ஒரு வல்லின மாத இதழ்’ என்ற பெயரை வைத்ததே ஞானக்கூத்தன்தான். 1970-களின் தொடக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி, நான், சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், ஐராவதம் (சாமிநாதன்) எல்லோரும் தினமும் சந்தித்துப் பேசும்போது ஒரு இலக்கிய இதழைத் தொடங்கலாம் என்ற பேச்சு வந்தது. ‘கசடதபற’ என்ற இயக்கம், அந்த இதழ் என்று எல்லாமே ஞானக்கூத்தனின் அறையில்தான் நடைபெற்றன. திருவல்லிக்கேணியில் 14, தோப்பு வெங்கடாசலம் தெருவில்தான் ஞானக்கூத்தன் இருந்தார்.
ரொம்பவும் அழகான அறை அவருடையது. அந்த மேன்சனின் மொட்டை மாடியின் கோடியில் ஒரு அறை. அந்த அறையில் தெற்கு பார்த்த வாசல், கிழக்கு பார்த்த ஜன்னல், நன்றாகக் காற்று வரும். அதுதான் ஞானக்கூத்தனின் அறை. அங்கேதான் தினமும் சந்திப்பதை நாங்கள் ஒரு சடங்காகவே வைத்திருந்தோம். ஒரு ஆண்டில் நாங்கள் சந்திக்காத நாட்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அசலான குரல்
அறுபதுகள், எழுபதுகளில் புதுக் கவிதை எழுதிக்கொண்டிருந்த கவிஞர் களின் உணர்ச் சிகளை அடையா ளப்படுத்தும் ‘ஐகானிக்’ வரிகளைப் பெரும்பாலும் ஞானக்கூத்தன்தான் எழுதினார். ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு/ ஆனால்/ பிறர்மேல் அதை விட மாட்டேன்’ போன்ற கவிதைகள் அந்தக் காலத்தில் பெரிய எதிர்ப்புக் குரல். கவிதை என்றால் யாப்பு சார்ந்ததாகத்தான் அப்போதும் இருந்தது. பொதுமக்களிடையே புதுக்கவிதை என்பது இன்னும் தன்னை நிறுவிக்கொள்ளாத காலம் அது. அந்த நேரத்தில் ஞானக்கூத்தன் குரல் மிகவும் அசலானது, நுட்பமானது. ரொம்பவும் நுணுக்கமான சில அவதானங்களைச் சொல்வதில் மிகவும் தேர்ந்தவர் அவர்.
அப்போதைய எங்கள் நட்பு வட்டத்தின் இலக்கியவாதிகளுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஒரு கல்லூரிப் படிப்பு கொடுக்காத கல்வியைக் கொடுத்தவர் ஞானக்கூத்தன்தான். பழந்தமிழ் இலக்கியங்களின் செறிவு, முக்கியத்துவம் போன்றவற்றை அவர்தான் எங்களுக்கு உணர்த்தினார். கம்பராமாயணத்தைப் பற்றி போகிற போக்கில் நிறைய விஷயங்களைச் சொல்வார். ‘அட, இவ்வளவு நாட்களாக இந்த விஷயங்களையெல்லாம் நமக்கு யாரும் சொல்லவில்லையே’ என்ற பிரமிப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. எல்லாம் அவருடனான மாலை சந்திப்புகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள். ஒருவகையில் அந்த அனுபவங்களெல்லாம் எனக்கு முதலீடு மாதிரியும், சொத்து மாதிரியும் என்றுகூட சொல்லலாம்.
அன்று வேறு கிழமை
அவருடைய முதல் தொகுப்பான ‘அன்று வேறு கிழமை’க்கு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. 1973 வாக்கில் அவருக்குத் திருமணப் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று நண்பர்கள் யோசித்தபோது, ‘அவருக்கு ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டுவரலாம்’ என்று நான் யோசனை கூறினேன். அந்தப் புத்தகத்தின் வடிவம், வடிவமைப்பு குறித்த யோசனைகளையும் நான் கூறினேன். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிப்புகளுள் ஒன்றாக அது உருவானது. சதுரமாக, பெரிய அளவில், கனமான தாளில் அச்சிடப்பட்டது அது. அந்தப் புத்தக உருவாக்கத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் ‘கசடதபற’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. பக்க அமைப்பு கே.எம்.ஆதிமூலம். பாஸ்கரன், சிதம்பர கிருஷ்ணன், வரதராஜன், தட்சிணாமூர்த்தி, பி. கிருஷ்ணமுர்த்தி என்று பலருடைய ஓவியங்களைத் தாங்கி வெளிவந்தது அந்தத் தொகுப்பு. அட்டைப் படம் ஆதிமூலத்துடையது. அழகான லித்தோகிராஃப். ‘அன்று வேறு கிழமை’ தொகுப்பின் வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலகத்தில் நடந்தது. முன்னணி ஓவியர்கள் கைப்பட வரைந்து உருவாக்கிய சுவரொட்டிகளை அந்த அரங்கில் காட்சிக்கு வைத்து அந்தப் புத்தகத்தை வெளியிட்டோம். ‘இலக்கியச் சங்கம்’ சார்பாக வெளியிடப்பட்ட அந்தத் தொகுப்பு தமிழ்ப் பதிப்புத் துறையைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய பாய்ச்சல். 1973, ஆகஸ்ட் மாதம் நடந்தது அது.
மரபும் புதுமையும்
சி. மணி போலவே ஞானக்கூத்தனுக்கும் மரபுக் கவிதையில் நல்ல ஞானம் இருந்ததால்தான் சரியான தொனியும் சொற்தேர்வும் சொல்வளமும் அவருக்குச் சாத்தியமானது என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் கவிதைகளில் புறந்தள்ளப்பட்ட பேச்சு வழக்கையும் தன் கவிதைகளில் அவர் திறமையாகப் பயன்படுத்தினார். மரபுக் கவிதைகளிலுமே இந்த நெகிழ்வுத்தன்மை இருந்தது என்பதை சி. மணி தனது ‘யாப்பும் கவிதையும்’ புத்தகத்தில் நிறுவியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக, சி. மணியும் ஞானக்கூத்தனும் கிட்டத்தட்ட ஒரே இலக்கியப் போக்கைச் சேர்ந்தவர்கள் என்று கூறலாம். மரபறிவைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய ஒரு போக்கை உருவாக்கியது என்ற வகையில் அது ஒரு பெரிய வளர்ச்சி. ‘ஞாயிறு தோறும் தலைமறைவாகும்/ வேலை என்னும் ஒரு பூதம்/ திங்கள் விடிந்தால் காதைத் திருகி/ இழுத்துக் கொண்டு போகிறது’ என்ற வரிகளைச் சொல்லிப் பாருங்கள்… அதிலும் அழகான ஒரு சந்தம் இருக்கிறது. ஆனால், பாடுபொருளோ நவீன மானது.
ஞானக்கூத்தனால் உத்வேகம் பெற்ற ஒரு இளைய தலைமுறையும் இருக்கிறது. முக்கியமாக ஆத்மாநாமைச் சொல்ல வேண்டும். ஞானக்கூத்தனின் ஊக்குவிப்பின்பேரில் பாலகுமாரன் ஆரம்ப காலத்தில் சில நல்ல கவிதைகளை எழுதினார். ஆர். ராஜகோபாலன், ஆனந்த் என்று இன்னும் நிறைய பேர். இவை எல்லாமே ஞானக்கூத்தனின் தாக்கம்.
புதுக்கவிதைக்குக் காத்திரத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் ஞானக்கூத்தன் ஒருங்கே அளித்தார் என்பது மிகையான கூற்று அல்ல. தமிழ்க் கவிதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த செழுமையான ஒரு காலத்தின் அடையாளம் ஞானக்கூத்தன்.
-எஸ். ராமகிருஷ்ணன், பதிப்பாளர், விரிவாக்கப்பட்ட ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் ஆசிரியர், தொடர்புக்கு: rams.crea@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment