Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத் தில் உள்ள எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நகரங்களை நோக்கிக் கூட்டம்கூட்டமாகக் குடிபெயர்கின்றனர், ஏன்?
வேளாண் துறையில் குறைந்த வருவாயே நிலவுகிறது என்று பேசுகிறார்கள். குறைந்த வருவாய் அல்ல - குறைத்துத் தரப்படும் கூலிதான் இங்கு உண்மையான பிரச்சினை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வந்த பிறகு, விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் சற்றே உயர்ந்திருக்கிறது. அப்படியும் கிராமங்களை விட்டு நகரங்க ளுக்குக் குடிபெயர்வது நிற்கவில்லை. கிராமங்களில் வேலை இல்லை என்பதற் காக நகரங்களுக்குச் செல்லவில்லை. நகரங்களில் பல வேலைகளுக்குத் தரப்படும் ஊதியத்தைவிட, கிராமப்புற ஊதியங்கள் குறைவு என்பதுதான் காரணம்.
இந்தியாவில் கிராமப்புற வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ‘வேளாண் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை’ நடத்தும் பத்திரிகையில், ஆய்வுக் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. (www.ras.org.in) அதில் உள்ள தகவல்கள் உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
“அந்தந்தப் பகுதியில் அரசே நிர்ணயித் துள்ள வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள ஊதியத்தை எட்ட, ஆண்டு முழுவதும் உள்ள நாள்களுக்கு வேலை செய்வதோடு போதாமல், கூடுதல் நாள்களுக்கும் விவசாயத் தொழிலாளர்கள் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது” என்று அது கூறுகி றது. அதாவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே கிடைக்கும் ஊதியமானது, அவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டுவதற்கே தேவைப்படும் ஊதியத்தையும்விடக் குறைவு!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிராமவாசி ஆண்டுக்கு 309 நாள்கள் வேலை செய்த பிறகு, மேலும் 290 நாள்களுக்கு வேலை செய்தால்தான் ‘அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை’ எட்டும் அளவுக்குச் சம்பாதிக்க முடியும்.
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர் ஆண்டுக்கு 205 - 210 நாள்கள்தான் சராசரியாக வேலை செய்கிறார். அதற்கே அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. விவசாயத் தொழிலாளியோ அதிக நாள்கள் வேலைசெய்து, அவரைவிடக் குறைவாகச் சம்பளம் பெறுகிறார். “குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் - அதிக வேலைக்குக் குறைந்த சம்பளம்” என்பதுதான் நமது தேசிய ஊதியக் கொள்கையோ?
விவசாயத்தையே கைவிடுகிறார்கள்
இளைஞர்கள் நகர்ப்புற வேலைகளுக் காக விவசாயத்தையும் கிராமங்களையும் விட்டு வெளியேறுகிறார்கள். அரசின் கொள்கை வகுப்பவர்களோ “இது ஆக்கபூர்வமான இடப்பெயர்ச்சி” என்று கூறி மகிழ்கிறார்கள். விவசாயத்தை நம்பி அளவுக்கு அதிகமானவர்கள் இருப்பதால், அவர்களில் பலர் வேறு வேலைகளுக்கு இடம்பெயர்வதே நல்லது என்று அவர்கள் விளக்கம் கூறிவருகிறார்கள்.
விவசாயத்தில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால், வேறு வேலை தேடி நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இளைஞர்கள் நகரங்களுக்குச் செல்வதால், பெண்களும் முதியவர்களும்தான் கிராமங்களில் இருக்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு விஷ வளையம்.
கிராமங்களை விட்டு அதிக எண்ணிக்கை யில் மக்கள் வெளியேறுவதால் விவசாய வேலைகளுக்கு ஆள்களே கிடைப்ப தில்லை. எனவே, விதைப்பது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்க ளுக்கு வாடகை கொடுக்க முடியாதவர்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுக்கின்ற னர் அல்லது தரிசாகப் போட்டுவிடுகின்றனர். நிலங்களைத் தரிசாகப் போடுவதாலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும் வேலையில்லாத நிலைமை ஏற்படுகிறது. இதையடுத்து மேலும் பலர், கிராமங்களை விட்டு வெளியேற நேர்கிறது.
இந்த இடப்பெயர்வு அரசின் புள்ளி விவரங்களில் எதிரொலிக்காவிட்டாலும் கிராமங்களைச் சுற்றிப்பார்த்தாலே தெரிந்து விடும். உத்தரகண்ட் மாநிலத்திலும் ஆந்திரத்தின் ராயலசீமைப் பகுதியிலும் இதைக் கண்கூடாகப் பார்க்கலாம். என்னுடைய குக்கிராமத்தில் 40 வயதுக்குக் குறைந்த ஆண் பிள்ளைகளைப் பார்ப்பதே அரிது!
பருவத்தே பயிர் செய்
இந்த மாறுதல்கள் எப்படி விவசாயத்தைப் பாதிக்கின்றன? வேளாண்மை என்பது இயற்கையாக வரும் நான்கு பருவங்களையொட்டி செய்யப்பட வேண்டிய சமுதாய வேலை. தனியொரு மனிதராக யாரும் விவசாயம் செய்துவிட முடியாது. கிராமமே ஒரு சமுதாயமாக இருந்தால்தான் விவசாய வேலைகளை நன்கு செய்ய முடியும். விவசாய வேலையை நினைத்த நேரத்தில் நினைத்தபடியும் செய்துவிட முடியாது. பல நேரங்களில் அதிகம் பேருக்கு வேலை இல்லையென்றாலும், சில நேரங்களில் அதிகம் பேர் ஒரே நேரத்தில் விவசாய வேலைகளைச் செய்தே தீர வேண்டும்.
விவசாயத்தில் விவசாயி தன்னுடைய குடும்பத்தையும் ஈடுபடுத்துவார், சம்பளத்துக்கும் ஆள்களை அமர்த்திக்கொள்வார். உரிய நேரத்தில் ஆள்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த வேலையே பாழ்பட்டு விடும். சில நாள்களுக்கு முன்னால் வேர்க்கடலையை எங்கள் நிலத்திலிருந்து பறித்தோம். ஒரே சமயத்தில் வேர்க்கடலைச் செடிகளைப் பறித்து வீட்டுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும். இருக்கிற ஆள்களை வைத்துக்கொண்டு - இன்றைக்குக் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம் என்று - அறுவடை செய்ய முடியாது. அப்படி நிலத்தில் அரைகுறையாக விட்டுவைத்தால் பன்றிகள், நாய்கள், ஆடுமாடு போன்ற கால்நடைகள், பறவைகள் - ஏன் சமயத்தில் திருடர்கள்கூட - பயிர்களை நாசப்படுத்தி விடுவார்கள், நமக்கு எதுவும் மிஞ்சாது. எனவே, கடலை விளைந்துவிட்டால் ஆள்களை வைத்து உடனே அறுவடையை முடித்தாக வேண்டும்.
கடலையை நிலத்திலிருந்து பறித்தால் மட்டும் போதாது, அதை உடனே மூன்று நாள்கள் முதல் ஒரு வாரம்வரை காய வைக்க வேண்டும். முழுதாக உலர்ந்த பிறகுதான் அதைப் பாதுகாக்க முடியும். ஈரத்தோடு வைத்திருந்தால் கடலை கெட்டுவிடும். மழைக் காலத்தில் ஒருவர் அதற்குக் காவல் இருக்க வேண்டும். வேர்க்கடலையைப் பறித்த பிறகு, கடலைச் செடியை மட்டும் வீட்டுக்கு வெளியே கூம்பாக அடுக்கிவைத்தால், கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு நல்ல தீவனம் கிடைக்கும். சில நாள்கள் தாமதித்தால்கூட இலைகள் உதிர்ந்து கட்டை மட்டுமே மிஞ்சும், அதுவும் அழுகிவிடும். எதற்கும் பயன்படாது.
மழை பெய்து சற்று இடைவெளி விட்டவுடனேயே நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும். உழுவதற்கேற்ற வகையில் நிலம் நெகிழ்ந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். மழை பெய்த உடனேயே நிலத்தைப் பண்படுத்தத் தவறிவிட்டால், மீண்டும் ஒரு மழை பெய்யும்வரை காத்திருக்க வேண்டும். ஆள்கள் கிடைக்காததால் இம்முறை மழை பெய்தும்கூட எங்கள் நிலங்களை உழ முடியாமல் விட்டுவிட்டேன்.
கண்ணுக்குத் தெரியாது, விவசாயிகளின் வேலை
மழை பெய்யும்போது நிலங்களில் வேலை செய்ய முடியாது. அத்தகைய நாள்களில் வீடுகளில் சோம்பேறியாக உட்கார்ந்திருக்க முடியாது. தேங்காய் நாரிலிருந்து கயிறு திரிப்போம். ஊறுகாய்களைக் காய வைப்போம். வேர்க்கடலைகளை உரித்துப் பருப்பு எடுப்போம். எல்லாக் காலத்திலும் கால்நடைகளுக்குத் தீனி போட்டு, தண்ணீர் வைத்துப் பராமரிக்க வேண்டும். மழைக் காலத்தில் அவற்றை வெளியே மேய விட முடியாது என்பதால், வீட்டுக்குள்ளேயே கொட்டடியில் கட்டித் தீனிபோட வேண்டும்.
நம்மைப் போலவே மாடுகளும் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடும். நம்மைவிட அதிகமாகவே தீனி எடுக்கும். அத்துடன் வீடுகளில் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவனிக்க வேண்டும். அவர்களுக்கும் மூன்று வேளை உணவு தர வேண்டும். பிரச்சினை என்னவென்றால், இவையெல்லாம் ‘சொந்த வேலை’யில் அடங்கிவிடும். இதைத் தவிர, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ‘மற்ற வேலைகளும்’ உண்டு. இதை ஆண்கள் செய்தாலும் பெண்கள் செய்தாலும் இதற்கெல்லாம் யாரும் ஊதிய மதிப்புப் போடுவதில்லை.
பெண்களுடைய வேலையையெல்லாம் யாரும் வேலையாகவே மதிப்பதில்லை. விளைந்ததை அறுப்பது, கதிர் அடிப்பது, பதரையும் தானியத்தையும் பிரிப்பது, தலைச்சுமையாக வீட்டுக்குக் கொண்டுவரு வது, உமி நீக்குவது, திரிகையில் அரைப்பது, பத்திரப்படுத்திக் கலத்தில் சேமிப்பது என்பது விவசாயக் குடும்பத்தவரின் வேலையே. அரிசியைச் சோறாக்காமல், கத்திரிக்காயைச் சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டுவிட முடியுமா? அந்த வேலையையும் நாங்கள்தான் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கிறது? இப்படி விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் படும் பாடெல்லாம் யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை.
அரசின் கொள்கைகளை வகுப்போரும், படித்த மாந்தர்களும் “விவசாயிகள் செய்யும் வேலைக்கெல்லாம் என்ன படிப்பு தேவைப் படுகிறது, அது ஒரு பெரிய வேலையா, அதற்கென்ன தனித்திறமை தேவை?” என்றே நினைக்கிறார்கள். உடல் உழைப்பு என்றால் மட்டமானது, படிப்பறிவே மேலானது என்ற பார்ப்பனியக் கண்ணோட்டமும் காலனியாதிக்க நாடுகளின் தலைவர்களின் கண்ணோட்டமும் இன்றைக்கும் ஆட்சியாளர்களிடம் தொடருகிறது.
விஷ வளையம்
கிராமப்புறங்களில் வேளாண் சாராத வேலைவாய்ப்புகளுக்குப் பற்றாக்குறை என்று பேசுகிறார்கள். இதுவும் ஒரு விஷ வளையத்தின் அங்கமே. கிராமங்களில் ஆள்கள் குறைந்துவிட்டால், வேளாண் சாராத துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்துவிடும். மக்கள்தொகை அதிகமாக உள்ள, துடிப்புள்ள சமூகங்களைக் கொண்ட கிராமங்களில் திருமணங்கள், திருவிழாக்கள், சமுதாயக் கூட்டங்கள், கட்டுமான வேலைகள், பழுதுபார்ப்புப் பணிகள், பராமரிப்பு வேலைகள் என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். அத்துடன் பள்ளிக்கூடங்கள், கால்நடை மருந்தகங்கள், ஆரம்பச் சுகாதார மருத்துவமனைகள், போக்குவரத்துச் சேவை, பழுதுபார்க்கும் பட்டறைகள், உலைக்களம், அரிசி ஆலைகள், தச்சுப் பட்டறைகள், மண்பாண்டக் கூடங்கள், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள், பஞ்சர் கடைகள், இஸ்திரி கடைகள், முடிவெட்டும் கடைகள் என்று ஏதாவது இருக்கும்.
கிராமங்களை விட்டு ஆள்கள் போய்க்கொண்டே இருந்தால், இவையும் நசிந்துவிடும். எங்கள் கிராமத்திலே முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஆறு முறை பஸ் வந்து சென்றது. இப்போது ஒருமுறைகூட வருவதே இல்லை. இருந்த ஆறு ஆரம்பப் பள்ளிகளுக்கு மாணவர்களே இல்லை என்று மூடிவிட்டார்கள். கால்நடை மருந்தகமும் கடையைக் கட்டிவிட்டது. முன்பு ஊரில் நான்கு பெட்டிக்கடைகள் இருந்தன. இப்போது இரண்டுதான் இருக்கின்றன. மண்பானை செய்கிறவர், துணி வெளுப்பவர், மூங்கில்கூடை பின்னுகிறவர்களெல்லாம் கிராமத்தைவிட்டே போய்விட்டனர். விவசாயத் தொழிலாளர்களில் இன்னும் மிஞ்சியவர்கள் பக்கத்துக் கிராமங்களில் வேலை இருந்தால் கூட்டமாகப் போய்த் திரும்புகின்றனர். அதுவும் ஒப்பந்த அடிப்படையில் - கூலியை முன்கூட்டியே பேசிக்கொண்டு - வேலை செய்கின்றனர். அவர்கள் அங்கேயே சில நாள்கள் தங்கி வேலையை முடித்துவிட்டு வருகின்றனர். வீட்டில் முதியவர்கள், குழந்தைகள் இரு்பபதால், பெண்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை.
குறைந்த வேலையாள்கள், அதிகக் கூலி என்பதால், விவசாய வேலைக்கு இப்போது டிராக்டர்கள், டில்லர்கள், ஹார்வஸ்டர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், டீசல் ஒன்றும் மலிவாகக் கிடைப்பதில்லையே? இயந்திரங்களைவிட நன்றாக வேலை செய்யக்கூடிய ஆள்கள் இருக்கிறார்கள். ஆனால், வறுமைக்கோட்டைத் தாண்டக்கூடிய சம்பளத்துக்காக ஓராண்டில் 600 நாள்கள் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறதே?
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயரும் விவசாயத் தொழிலாளர் களை, மத்திய அரசின் எந்த அரைகுறை வேலைவாய்ப்புத் திட்டமும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பிற துறைகளில் உள்ள அளவுக்கு விவசாய வருமானமும் உயர்ந்தால்தான் கிராமங்களில் இனி தொழிலாளர்களைப் பார்க்க முடியும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய கமிஷன் இருப்பதைப் போல கிராமப் புற விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஊதியக் கமிஷன் நியமிக்கப்பட வேண்டும். உடனே, அரசியல் கட்சிகள் துள்ளியெழுந்து குதித்து, “எங்களை ஆதரித்தால் உங்கள் கைக்கு மாதாமாதம் பணம் வரும் திட்டத்தை அமல்படுத்துவோம்” என்று கூறக்கூடும். எங்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம். விவசாயத்தை முன்னுரிமைத் துறையாக அறிவித்து, கௌரவமாக நடத்த வேண்டும். பிற துறைகளில் ஊதியத்தை நிர்ணயிப்பதைப் போல விவசாயிகளுக்கும் அவர்களுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு, பலதரப்பட்ட திறமைகளைப் பயன்படுத்தும் லாவகம், அவர்களுடைய அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
பிசினஸ் லைன் (28.11.13), தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT