Last Updated : 24 Apr, 2017 09:13 AM

 

Published : 24 Apr 2017 09:13 AM
Last Updated : 24 Apr 2017 09:13 AM

மோடியின் காலத்தை உணர்தல்

நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்கள்தொகை பாஜகவின் ஆளுகைக்குக் கீழ் வந்திருக்கிறது. தாராளவாதிகள் என்ற வட்டத்துக்குள் யாரையெல்லாம் அடைக்க முடியுமோ அவர்களுடைய அரசியல் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் செல்லரித்தபடி இருக்கிறது. இது பாஜகவுக்கு வெளியில் மட்டும் அல்ல; பாஜகவுக்குள்ளும் நடக்கிறது.

வாராணசியிலிருந்து புறப்பட்ட பாடலிபுத்திரா எக்ஸ்பிரஸ் சென்னையை நெருங்க இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. குளிர்சாதன வசதியையும் தாண்டி வெயிலின் சூடு ரயிலுக்குள் தகித்தது. பெட்டிபடுக்கையைச் சரிசெய்தபடி தயாரானேன். இந்திய மக்களின் மனதை அறிய, பயணங்கள், குறிப்பாக ரயில் பயணங்களைப் போல ஒரு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முந்தைய பயணங்களைப் போல இது நெடுநாளைய பயணம் இல்லை என்றாலும், இன்றைய இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கும் திசைகளைத் தொட முடிந்த வகையில் என்னளவில் இதுவும் ஒரு முக்கியமான பயணம். எதிரே உட்கார்ந்திருந்த கன்னடக் குடும்பத்துக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அவர்கள் பெங்களூரு செல்கிறார்கள். “கர்நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கன்னடியர்களின் நிலமாக இருக்கும் என்று தெரியவில்லை; ரொம்ப சீக்கிரம் சிதறடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்” என்று முன்னதாகப் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார் அந்தக் குடும்பத்தின் பெரியவர். ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். யாரும் உள்ளுக்குள் பேசிக்கொள்ள முற்படுவது இல்லை. நான் புறப்பட்டபோது அந்தப் பெரியவர் கையைப் பிடித்து அணைத்துக்கொண்டார்.

பாய்ந்து வரும் காற்றுக்கு முகங்கொடுத்தபடி கதவோரத்தில் நின்றிருந்தேன். ரயில் வேகமாகச் சென்னையின் எல்லைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் 30 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவற்றில் ஏதோ சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. என்றாலும், நாட்டிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 325/403 என்ற பிரம்மாண்டமான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி அடைந்திருக்கும் சமீபத்திய வெற்றியை அப்படிப் பத்தோடு ஒன்றாகக் கடந்து செல்ல முடியுமா?

இந்தத் தேர்தலை மிக உன்னிப்பாக நான் தொடர்ந்து கவனித்துவந்தேன். தேர்தல் வெற்றி யூகிக்காதது அல்ல. 2012 சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. அப்போது அது பெற்ற வாக்குவீதம் 15%. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில், பாஜகவினரே எதிர்பார்த்திராத வெற்றி பாஜகவுக்குக் கிடைத்தது. இதற்கு முன் அதன் வரலாற்றிலேயே நடந்திராத வகையில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் அது வென்றது. அதாவது 81% இடங்களில் வெற்றி. வாக்குவீதம் 42.3%. இந்த 71 தொகுதிகள் என்பவை உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டசபைத் தொகுதிகளில் 328 தொகுதிகளை உள்ளடக்கியவை.

வரலாற்றுரீதியாக நான்கு முனைப் போட்டிக் களமான உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, ஒரு தொகுதியில் 25% முதல் 30% வாக்குகள் வாங்கினால் போதும்; ஜெயித்துவிடலாம். ஆனால், மக்களவைத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகளின்படி, பாஜக 324 தொகுதிகளில் 30%-க்கு அதிகமாகவும், 253 தொகுதிகளில் 40%-க்கும் அதிகமாகவும் 94 தொகுதிகளில் 50%-க்கும் அதிகமாகவும் பெற்றிருந்தது. ஆக, முன்பு வாக்களித்தவர்களில் குறைந்தது 15% பேரை பாஜகவிடமிருந்து பிரித்தால் மட்டுமே அக்கட்சியைத் தோற்கடிக்க முடியும் என்ற நிலைக்கு அது உயர்ந்திருந்தது.

மாநிலத்தை ஆண்ட சமாஜ்வாதி கட்சி மக்களிடம் பெரிய அதிருப்தியைச் சந்தித்திருந்த நிலையில் பாஜகவின் தோல்வி அத்தனை எளிதல்ல என்றே பெரும்பான்மை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், இரு சவால்களை பாஜக சந்தித்தது. மக்களவைத் தேர்தல் நாட்டின் பிரதமரைத் தீர்மானிப்பது. அப்போது மோடியை நம்பி ஒரு பெரும் கூட்டம் வாக்களித்தது.

சட்டசபைத் தேர்தலோ முதல்வரைத் தீர்மானிப்பது. முதல்வர் வேட்பாளர் என்று பாஜக யாரையும் முன்னிறுத்தாத நிலையில், மோடியை நம்பி அதே வாக்காளர்கள் திரும்பவும் வாக்காளிப்பார்களா? அதிலும், ஏகப்பட்ட வாக்குறுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரும் சாதனைகள் என்று எதையும் நிகழ்த்தாத நிலையில், இனியும் அதே அளவுக்கான ஆதரவை பாஜகவுக்கு அளிப்பார்களா என்பது அதன் முன்னிருந்த முதல் சவால். இரண்டாவது சவால் என்னவென்றால், மாநிலத்தின் பிரதானக் கட்சிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் முதலிடத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியும் நான்காம் இடத்தில் இருந்த காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இரு சவால்களையுமே பாஜக கடந்தது.

மோடி பிரதமரான இந்த மூன்றாண்டுகளில் அது ஆட்சியமைத்திருக்கும் 8-வது மாநிலம் இது. உத்தரப் பிரதேசத்தோடு சேர்த்து பாஜகவின் கைகளில் நாட்டின் 13 மாநிலங்கள் வந்திருக்கின்றன; மேலும் இரு மாநிலங்கள் அதன் கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கின்றன. கிட்டத்தட்ட நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்கள்தொகை அதன் ஆளுகைக்குக் கீழ் வந்திருக்கிறது. மறுபுறம் நாட்டின் பிரதானக் கட்சியாக இருந்த காங்கிரஸ் பஞ்சாபில் மட்டும் வென்று, தன் வசம் ஏற்கெனவே இருந்த ஏழு மாநிலங்களை இழந்திருக்கிறது. 2014-க்குப் பிறகு 11 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் அது மொத்தமாகப் பெற்றிருக்கும் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 357. பாஜக 2367 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

இன்றைக்கு நாட்டில் மொத்தமுள்ள 4020 சட்டசபைத் தொகுதிகளில் வெறும் 813 மட்டுமே (20%) காங்கிரஸ் வசம் இருக்கின்றன. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் 225 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட (41%) - உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய 10 இந்தி மாநிலங்களில் ஒன்று மட்டுமே காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருக்கிறது. காங்கிரஸின் வரலாற்றிலேயே அது இவ்வளவு மோசமான நிலையில் இருந்ததில்லை.

அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை என்று இச்சூழலைக் கடந்துவிட முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் மட்டும் அல்ல; இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. ஒற்றைக் கலாச்சாரத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் இந்நாள் வரை முட்டுக்கட்டை போட்டுவந்த மாநிலக் கட்சிகளும் தங்கள் செல்வாக்கை இழந்துவருகின்றன. ஆக, தாராளவாதிகள் என்ற வட்டத்துக்குள் யாரையெல்லாம் அடைக்க முடியுமோ அவர்களுடைய அரசியல் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் செல்லரித்தபடி இருக்கிறது. இது பாஜகவுக்கு வெளியில் மட்டும் அல்ல; பாஜகவுக்குள்ளும் நடக்கிறது.

இன்றைய பாஜகவைக் காட்டிலும் எவ்வளவோ பலத்துடன் காங்கிரஸ் முன்பு இருந்திருக்கிறது. ஆனால், பாஜகவின் வெற்றி எதன் பொருட்டு அச்சமூட்டுகிறது என்றால், அதன் பின்னுள்ள பெரும்பான்மைவாதமும் அது முன்னிறுத்தும் ஒற்றைப்படைத்தன்மையும் இணைந்து கலங்கச் செய்கின்றன. நாட்டிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தாமல் இந்தப் பிரம்மாண்ட வெற்றியை அது பெற்றிருக்கிறது. மறைவில் ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கனவாகக் கொண்ட அது இன்று, வெளிப்படையாகவே ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் முழக்கத்துடன், எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்கவே கூடாது எனும் செயல்திட்டத்துடன் செயல்படுகிறது.

2025 ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு. இந்து ராஷ்டிரமாக இந்நாட்டை அறிவிக்கும் கனவை நோக்கிய பாஜகவின் பயணம் இந்த ரயிலைக் காட்டிலும் வேகமாக இருப்பதை இந்த ரயிலிலிருந்து யோசிக்கும்போது திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தடுத்து நிறுத்தும் வியூகங்கள் கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. பாஜக ஆதரவாளர்களும் சரி, அதன் எதிர்ப்பாளர்களும் சரி; இந்தச் சூழலின் பின்னணியில் ஒரே பெயரையே உச்சரிக்கிறார்கள்: நரேந்திர தாமோதர தாஸ் மோடி!

அவ்வளவுக்கும் மோடி மட்டும்தான் காரணமா?

(உணர்வோம்)

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x