Published : 04 Oct 2013 10:33 AM
Last Updated : 04 Oct 2013 10:33 AM
கடந்த காலத்தைப் பற்றிய நம் பார்வை நிகழ்காலத்துக்கு ஏற்ப மாறிவிடக்கூட யது. இந்த மாற்றம் கடந்த காலத்தைப் பற்றிய புதிய ஆவணங்கள் கிடைத்தால் ஏற்படலாம். நிகழ்காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்பவும் கடந்த காலம் மாறுவது உண்டு. நிகழ்காலம், வருங்காலத்தின் மீது தாக்கம் செலுத்துவதுபோலவே கடந்த காலத்தின் மீதும் தாக்கம் செலுத்துகிறது.
உதாரணத்துக்கு, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது காந்தியின் முக்கியமான சாதனையாக நேற்றுவரை பார்க்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்களுக்குப் பாதுகாப்பு, மனித உரிமை, சுகாதாரம், தலித் மக்களின் நிலை, வறுமை, கல்வி, ஊழல் என எல்லா அளவுகோல்களிலும் மிகக் கேடான நிலையில் இருக்கிறது. எனவே, சுதந்திரம் பெற்றதன் மகத்துவம் இன்று மங்கிவிட்டது. அதே நேரம் மட்டற்ற நுகர்வுப் பண்பாடும் புவி வெப்பமடையும் அச்சமும் காந்தி பரிந்துரைத்த சுற்றுச்சூழலுடன் இயைந்த எளிய வாழ்க்கை முறை மீது கவனத்தைக் குவித்துள்ளன.
1991-ம் ஆண்டு இரண்டு முக்கிய நிகழ்வுகள் தமிழ் அறிவுலகில் தாக்கத்தைச் செலுத்தின. ஒன்று, சோவியத் யூனியனின் வீழ்ச்சி. மற்றொன்று, அம்பேத்கர் நூற்றாண்டு. இந்தப் பின்னணியில் பெரியார் மீட்டெடுக்கப்பட்டார். மார்க்சியக் கனவு வீழ்ச்சியடைந்தமை இடதுசாரிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தலித்தியத்தின் எழுச்சி அம்பேத்கருடன் இணைத்துப் பேசத் தக்க ஒரு தமிழ்த் தலைவரை முன்னிறுத்தும் சூழலை ஏற்படுத்தியது. பெரியார், திராவிட இயக்கத்தவர்களின் தலைவராக இருந்த நிலை மாறி, தீவிர இடதுசாரிகள் முதல் பின்நவீனத்துவவாதிகள் வரை அனைவரும் விதந்தோதும் தலைவரானார். ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் பல வெளிவந்தன. அவரது எழுத்துகள் தேடித் தேடித் தொகுக்கப்பட்டன. பெரியாரின் போதனைகள் அப்படியே இருக்க சமகாலத் தேவைக்கு ஏற்ப அவர் புத்துருவாக்கம் பெற்றார். நிகழ்காலத்தின் தேவைக்கு ஏற்ப கடந்த காலம் பற்றிய பார்வையும் புரிதலும் மாறுவதற்கு இவை சான்று.
காலமாற்றம் என்பது ஈவிரக்கமற்ற முன்னகர்வு. எந்தத் தத்துவத்துக்கும் தீர்க்கதரிசிக்கும் அது விசுவாசமாக இருப்ப தில்லை. சமகாலத்தில் முற்போக்காகப் பார்க்கப்படுவதும் பிற்போக்காகத் தூற்றப்படு வதும் காலமாற்றத்தில் பல சமயங்களில் எதிர்நிலைக்கு நகர்ந்துவிடுகின்றன. சமகாலத்தின் கருத்துச்சூழலுக்கு ஏற்ப ஆய்வின் வரையறைகளை அமைக்கும் போது புதிய நோக்குகள் கிடைப்பது அரிது. பல நேரங்களில் பொதுச் சமூகத் தில் பரவியிருக்கும் நிதர்சனத்தின் வெளிச்சம்கூட இங்கு ஆய்வுகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை.
தமிழகத்தின் ஆய்வாளர்கள் இன்று பல கருத்தியல் பார்வையைக் கொண்டி ருப்பவர்கள். அது திராவிடக் கருத்தியலாகவோ காந்தியமாகவோ மார்க்சியமாகவோ தலித்திய மாகவோ பெண்ணியமாகவோ இன்னும் பலவாகவோ இருக்கும்.
வரலாற்றில் தடம் பதித்த இப்புதிய பார்வைகளை ஏற்படுத்திய ஞானிகள், சமகாலத்தில் எல்லோராலும் முற்போக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்ட வர்கள் அல்ல. சமகாலத்தில் நம் மீது விழுந்த தாக்குதல்களையும் நமது பிம்பத்தில் ஏற்பட்ட கீறல்களையும் கண்டு அஞ்சியவர்களும் அல்ல. சமகாலத்தின் வரையறைகளைத் தட்டி நகர்த்தாமல் எந்தப் புதிய பார்வையும் உருவாக முடியாது. புதிய பார்வை கூடிவராத ஆய்வுகள் நமது கருத்துச் சூழலுக்கு அதிகம் பங்களிப்பதில்லை.
ஆய்வாளர் சமகாலத்தில் தமது முற்போக்குப் பிம்பத்தைத் தக்கவைக்க முனைவதைவிட நிதர்சனமாகக் கண்டறிந்த உண்மைகளைச் சான்றுகளின் பின்புலத்துடன் விவாதத்துக்கு முன்வைப்பதே சாலச் சிறந்தது. நிகழ்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப கடந்த காலம் பற்றிய அணுகுமுறை மாறிவிடும் நிலையில், கண்டறிந்த, பட்டறிந்த உண்மைகளைத் துணிச்சலுடன் முன்வைப்பதே காலமாற்றத்தைக் கடந்து நிற்க சிறந்த உபாயம்.
சமகாலத்தில் இடதுசாரிகளால் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்ட காந்தியும் பெரியாரும் இன்று மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு விமர்சிக்கவும் விவாதிக்கவும்படுகின்றனர். அக்காலத்தின் மாசற்ற முற்போக்கு ஆளுமைகளை இன்று ஆவணக் காப்பகங்களில் தேடித்தான் பிடிக்க வேண்டும்.
சமகாலத்தில் முற்போக்காகக் கருதப்படும் கருத்துக் கேடயத்தில் தமது பிம்பத்தை ஒப்பனை செய்பவர்களின் சிந்தனைகள் அவர்தம் மரணத்துக்கு முன்னரே சமாதியாகிவிடும் வாய்ப்புகளே அதிகம்!
கண்ணன், பதிப்பாளர், விமர்சகர் - தொடர்புக்கு: kannan31@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT