Published : 10 Nov 2014 08:43 AM
Last Updated : 10 Nov 2014 08:43 AM
பால்பாண்டி. அப்படி ஒன்றும் படித்தவர் இல்லை. வசதியானவரும் இல்லை. எளிய தோற்றம். அடிப்படையில் கட்டிடத் தொழிலாளி. ஆனால், சுமார் 150 குழந்தைகளுக்குத் தாயுமானவராக அவர் செய்யும் சேவை போற்றுதலுக்குரியது. பால்பாண்டி, அந்த இல்லத்துக்குள் நுழைந்தவுடனேயே குழந்தைகள் உற்சாகமாகக் கூவியபடியே ஓடிவந்து அவர் தோளில் ஏறி அமர்ந்துகொள்கின்றனர். அத்தனை பேருமே மதுவின் கொடுமையால் பெற்றோரை இழந்த பிஞ்சுகள். தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் இருக்கிறது பால்பாண்டி நடத்தும் ‘மனித நேயக் காப்பகம்’. கடந்த 2004-ம் ஆண்டு மதுவுக்கு எதிராக, தனிநபராக பால்பாண்டி தொடங்கிய அறப் போராட்டத்தில் எழுந்தது இந்த இல்லம்.
இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைகளின் பின்னாலும் ஒரு சோகம் இருக்கிறது. சுமார் 30 குழந்தைகள் மனநோயாளிகளாக இருக்கிறார்கள். குடிநோயாளிகளின் குரூரங்களால் மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒரு சிறுவனுக்கு வயது 13. வயதுக்குத் தொடர்பில்லாத பெருத்த உடல். அவனது தாய்/தந்தை இருவரும் குடிநோயாளிகள். குழந்தை பிறந்த சில வாரங்களிலிருந்தே அதற்கும் மதுவைப் புகட்டியிருக்கிறார்கள்.
10 வயதிலேயே குடிநோயால் பாதிக்கப்பட்டான் சிறுவன். உடல் பெருத்து, கை, கால்களை இயக்க முடியாத ஆல்கஹாலிக் பாலிநியூரோபதி (Alcoholic polyneuropathy) என்கிற நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்பட்டது. நோயின் தீவிரம் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். பாதத்தில் தொடங்கி முழங்கால் வரை உணர்ச்சிகள் குறையும். திடீரெனக் கால்களில் மின்சாரம் பாய்ச்சியதுபோலக் கடுமையான அதிர்வு ஏற்படும். சிலசமயம் கால்களைத் தரையில் ஊன்றும்போது மெத்தென்று இருக்கும்.
இன்னொரு சமயம் முட்களை மிதித்ததுபோல இருக்கும். அலறித் துடிப்பார்கள். இந்தப் பாதிப்பை மருத்துவர்கள் ‘பின்ஸ் அண்ட் நீடில்ஸ்’ என்கிறார்கள். தகுந்த சமயத்தில் சிறுவனுக்குச் சிகிச்சை அளித்து நோயிலிருந்து மீட்டிருக்கிறார்கள். ஆனாலும், மனநோயின் பாதிப்பிலிருந்து மீளவில்லை அந்தச் சிறுவன். இவன் ஓர் உதாரணம் மட்டுமே.
சொந்தங்கள் இல்லாமலேயே சொர்க்கம்!
குடிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிஞ்சுகளின் சோகக் கதைகள் நீள்கின்றன. ஆனாலும், சோகங்களை உதறி வேகம் கொண்டு எழுந்திருக்கிறார்கள், சொந்தங்கள் இல்லாமலேயே சொர்க்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நெருக்கடிகளை நொறுக்கித் தள்ளி நம்பிக்கையை ஆழ விதைத்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருமே குடிநோய்க்கு எதிரான போராளிகள் என்பதே இந்த இல்லத்தின் சிறப்பு.
உடல் பருத்த அந்தச் சிறுவன் அருமையாக ஓவியம் வரைகிறான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 454 மதிப்பெண் எடுத்திருக்கிறாள் காயத்ரி. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,014 மதிப்பெண் வாங்கியிருக்கிறார் பாண்டீஸ்வரி. கராத்தே, ஜிம்னாஸ்டிக், யோகாவில் தேசிய அளவில் முதல் பரிசு வாங்கியிருக்கிறார் முத்துராஜ். நந்தினியும் பூஜாவும் தென்னிந்திய அளவில் யோகாவில் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் கபடிப் போட்டி எங்கு நடந்தாலும் கோலோச்சுகிறது இவர்கள் அணி. கடந்த 2011-ம் ஆண்டு ‘உலக அமைதிக்கான காரணிகள்’ என்கிற தலைப்பில் ஐ.நா. சபை நடத்திய போட்டியில் பரிசு வென்றிருக்கிறார்கள். அப்துல் கலாம் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
கட்டிடத் தொழிலாளியின் கருணை!
பால்பாண்டியிடம் பேசினேன். “நான் கொத்தனார் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ஒருநாள் வேலை பார்க்குற இடத்துல தாய், தகப்பன் ரெண்டு பேருமே அதிகமாகக் குடிச்சிட்டு செத்துப்போயிட்டாங்க. அவங்களோட ஆறு மாசக் குழந்தை அநாதையா நின்னப்ப ஒரு நிமிஷம் என்ன செய்யறதுன்னு புரியலை. கடைசியில அந்தக் குழந்தையை நானே எடுத்து வளர்த்தேன். என் வாழ்க்கையைத் திசைமாற்றியது அந்த நிமிஷம்தாங்க. எங்க ஊர்ல மதுவால் கொத்துக்கொத்தா மக்கள் செத்தாங்க. குழந்தைங்க நடுத்தெருவுல பிச்சை எடுக்கிறதைப் பார்க்கச் சகிக்கலை. ஏதாவது செஞ்சே ஆகணும்னு கொஞ்சம் இருந்த விவசாய நிலத்தை வித்து இந்த இல்லத்தை ஆரம்பிச்சேன். இன்னைக்கு இந்த இல்லம் வளர்ந்து நிக்கிறதப் பார்த்துச் சந்தோஷப்படுறதா, வருத்தப்படுறதான்னு தெரியலைங்க” என்கிறார் கவலையுடன்!
தேனி மருத்துவக் கல்லூரியின் சுகாதாரப் பார்வையாளராக இருக்கிறார் சர்ச்சில் துரை. அவர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. “தென் மாவட்டங்களின் பல பகுதிகள் குடிநோய் மற்றும் வறுமையின் குறியீடுகளாக மாறியிருக்கின்றன. பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் ஆண்/பெண் பாகுபாடு இல்லாமல் காலையிலேயே மது அருந்துகிறார்கள். ஒருபக்கம் வறிய மக்கள் அறியாமையால் மது அருந்துகிறார்கள் என்றால், மாணவர் சமுதாயம் இன்னமும் மோசம்.
தேனியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் சுமார் 500 பேர் படிக்கிறார்கள். ஒருநாள் மருத்துவச் சோதனையின்போது அவர்களில் 80% பேர் மது அருந்தியிருந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தோம். வார இறுதி நாட்களில் மாணவர்கள் கும்பல் கும்பலாக நெடுஞ்சாலை மரத்தடிகளில் அமர்ந்து மது அருந்துவதை இங்கு சாதாரணமாகக் காணலாம். அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள்கூட மது அருந்திவிட்டு வருவது சமீப காலங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது” என்கிறார்!
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT