Published : 05 Jan 2016 08:48 AM
Last Updated : 05 Jan 2016 08:48 AM
இன்றைய காலகட்டத்தின் நியதிக்கு உட்பட்டு நானும் வாட்ஸ்அப் குழுக்கள் சிலவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். Literary & Intellectuals என்றொரு குழு அதில் உண்டு. பல்வேறு செய்திகள், கட்டுரைக்கான இணைப்புகள், குறிப்புகள் ஆகியவற்றுடன் சில சமயம் நகைச்சுவைத் துணுக்குகளும் அதில் பரிமாறிக்கொள்ளப்படும். அதில் அண்மையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வந்திருந்தது. ஒரு மனைவியின் பிறழ் நடத்தையை வைத்து உருவாக்கப்பட்ட துணுக்கு.
இந்தத் துணுக்கைப் பார்த்ததும் “பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர்க்கலாமே” என்று அதற்குப் பதில் எழுதினேன். அந்தத் துணுக்கைப் பதிவிட்டிருந்த நண்பர் அப்படிச் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். “ஆனால், எல்லா ஜோக்குகளும் யாராவது ஒருவரை இழிவுபடுத்துபவைதானே?” என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். “பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் வரலாறு கொண்டவர்கள் நாம். இனிமேலாவது அதற்குப் பிராயச்சித்தம் செய்வோம்” என்று பதில் எழுதினேன்.
ஆதரித்து ஒரு செய்தி
சில வாரங்களுக்கு முன்பு வேறொரு குழுவில் (இது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் குழு) பெண்களைக் கேலி செய்யும் வேறொரு துணுக்கு பதிவிடப்பட்டிருந்தது. அப்போதும் நான் எதிர்க் குரல் எழுப்பினேன். பதிவிட்டவரிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. குழுவில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து என்னை ஆதரித்து ஒரு செய்தி வந்தது.
நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான். நகைச் சுவைத் துணுக்கு என்பதே ஒருவரின் அசட்டுத்தனம், முட்டாள்தனம், அபத்தம், பிறழ் நடத்தை ஆகிய எதையேனும் பகடிசெய்து சிரிப்பதுதான். யாரையும் சற்றேனும் நெளியவைக்காமல் நகைச்சுவை, கிண்டல், கேலி ஆகியவை இருக்க முடியாது. இது அளவோடு இருக்கும்வரை பரவாயில்லை. எல்லை மீறிப் புண்படுத்தும் அளவுக்கு இது செல்லக் கூடாது. ரசனையும் நாசூக்கும் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அவற்றுக்கு இலக்காகுபவர்களையும் மனம்விட்டுச் சிரிக்கவைத்துவிடும். எல்லை மீறும் துணுக்குகள் அவமானத்துக்கு உள்ளாக்கும்.
பெண்களைப் பற்றிய துணுக்குகள் பெரும்பாலும் இரண்டாவது ரகத்திலேயே இருப்பதுதான் சிக்கல். பெண்கள் மீதான ஈர்ப்பும் இளக்காரமும் ஒருங்கே கொண்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் மனப் பிறழ்வுகளைப் பழமொழிகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல விதங்களிலும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய மேலோட்டமான, ஒருதலைப்பட்சமான விமர்சனமே இந்தக் கேலிகளின் அடிப்படை. மேற்படிக் குழு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்ட துணுக்கு ‘ஓடிப் போன’ பெண் பற்றி ஒரு கணவனின் பார்வையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்களை இலக்காக்கும் எல்லாத் துணுக்குகளிலும் இதுபோன்ற போக்கைக் காணலாம்.
ஏன் பெண்களை, அதிலும் மனைவியரைக் குறிவைத்தே அதிகத் துணுக்குகள் உருவாக்கப்படுகின்றன? ஆண்கள் அபத்தம், முட்டாள்தனம், பிறழ் நடத்தை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களா? ஆண்களைக் கேலிசெய்யும் துணுக்குகள் ஆணை / கணவனைப் பொதுமைப்படுத்திப் பேசுவதில்லை. தொழில், ஊர், மதம் ஆகிய பிரிவுகளுக்குள் ஆணைச் சித்தரித்துக் கேலி செய்கின்றன. கேலிக்குரியவர் ஆண் என்றால், அவர் பொதுவாக டாக்டர், வக்கீல், மேனேஜராக இருப்பார். கேலிக்குரியவர் பெண் என்றால், பொதுவாக மனைவி, மாமியார் அல்லது அம்மா பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரிகசிக்கப்படுவார். அல்லது
`வேலைக்காரி ஜோக், நர்ஸ் ஜோக்'. ஒரு கணவன் அல்லது ஒரு ஆண் என்று குறிப்பிட்டு ஆணைப் பொதுவாகக் கேலிசெய்யும் துணுக்குகள் முதலமைச்சரின் பேட்டி போலவே அரிதானவை. ஆண்கள் அல்லது கணவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லையா?
கைபேசியில் இடம் பொருள் ஏவல் அறியாமல் சத்தமாகப் பேசும் கணவன்மார்களைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மனைவியுடன் போய்க்கொண்டிருக்கும்போதும் வெட்கமில்லாமல் பிற பெண்களைப் ‘பராக்கு’ பார்க்கும் ஒரு ஆண், தன் மனைவி மீது பிற ஆண்களின் கண் பட்டால் ரோஷப்படும் அபத்தமும் அன்றாடம் அரங்கேறத்தான் செய்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட கணவன்கள், எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவரும் கல்லூரிப் பெண்ணைப் பார்த்து அசடுவழியும் அற்பத்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘குடும்பத் தலைவர்’களான கணவன்களுக்கு ‘ஓடிப் போக’ வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிறழ் உறவுகளுக்கும் சில்லறைச் சபலங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மாட்டு வண்டியே தன்னைக் கடந்துபோனாலும் கவலைப்படாத ஆண் சிங்கங்கள், ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனம் கடந்து சென்றுவிட்டால் அவமானமடைந்து ஆக்ஸிலேட்டரைத் திருகும் கேலிக்கூத்தும் சாலைகளில் அன்றாடக் காட்சிதான். பொது இடம் என்றும் பாராமல் கிடைக்கிற சந்துகளுக்கெல்லாம் சிறுநீர் அபிஷேகம் நடத்தும் ஆண்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். சாலைகளில் (சிகரெட்) புகை மண்டலப் பூஜை நடத்திப் பிறரைத் துன்புறுத்துவதும் பல ஆண்களுக்கு வாடிக்கைதான். இதையெல்லாம் பரிகசித்து, நாகரிகம் இல்லாத ஆண் அல்லது விவஸ்தையற்ற கணவன் என்னும் பொதுப் பாத்திரத்தை முன்வைத்துத் துணுக்குகள் அதிகம் வருவதில்லை.
`பெண்டாட்டிக்குப் பயப்படும் கணவன்' ஜோக் மட்டுமே வருகிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான இதை விட்டுவிட்டால் கணவன் பாத்திரம் பொதுவாக கிண்டலடிக்கப்படுவதில்லை.
இதே ஆண்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்போது, எப்படிப் போகலாம் அல்லது போகக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். குடும்பத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் “பொம்பள சரியில்ல, அதான் காரணம்” என்று கூசாமல் சொல்கிறார்கள். பொது வாழ்வில் வெற்றிபெறும் பெண்கள் மீது வெட்கமின்றி அவதூறு சுமத்துகிறார்கள். இதெல்லாம் போதாதென்று, அவர்களைப் பரிகசித்து நகைச்சுவைத் துணுக்குகளையும் அள்ளிவிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்: பெண்களை இழிவாக, இளக்காரமாக, இரண்டாந்தர மனிதர்களாகப் பார்க்கும் போக்கு.
தொடரும் அசிங்கம்
ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பு, பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளில் ஒன்றாகவே இந்தத் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது. வீடுகளிலும் பத்திரிகை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்பதன் மூலம், ஆண் சமூகம் இவற்றை சகஜப்படுத்திவைத்திருப்பது இந்தத் துணுக்குகளைக் காட்டிலும் கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல், விதவைகளை முடக்கிவைத்தல், கல்வி மற்றும் சொத்துரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரம் கண்டதுபோலவே ஆண் உலகம் இதற்கும் பரிகாரம் காண வேண்டும்.
முதலாவதாக, நீண்ட காலமாகத் தொடரும் இந்த அசிங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்தபடியாக, ஆண்கள் தங்களைப் பரிகசிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்கிப் பெருமளவில் உலவவிடலாம். மிஸ்டர் எக்ஸ் என்ற பாத்திரத்தை வைத்துத் துணுக்குகள் வந்ததுபோல ‘அசட்டுக் கணவன்’ அல்லது ‘அலட்டல் பையன்’ என்னும் பாத்திரத்தை வைத்துத் துணுக்குகளை ஆண்களே உருவாக்கலாம். பெண்களும் அதில் பெருமளவு உதவலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் இவற்றைப் பகிர்ந்துகொண்டு கைகொட்டிச் சிரிக்கலாம். பெண்களைக் கேலிப்பொருளாக்கியதற்கான பிராயச்சித்தத்தைச் சிரித்துக்கொண்டே தொடங்க இது நல்ல வழியாக இருக்கும்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT