Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

கோபாலபுரம் வேற மாதிரி! - உள்கதைகள்

ஏற்காடு பரபரப்பு முடிந்தது. மயிலிறகால் வருடும்விதமான சிற்சில தீர்மானங்களோடு சமீபகாலமாக பொத்தாம்பொதுவாகக் கூடிக் கலைந்துவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவின் போக்கில் பெரிய மாற்றம். 'காங்கிரஸ் வேண்டாம்' என்ற திட்டவட்ட அறிவிப்பு.

திறந்த கதவுகள்

வழக்கத்துக்கு மாறாக, அறிவாலயக் கதவுகள் அகலமாகத் திறந்திருக்க, தொண்டனும் பத்திரிகையாளனும் தாராளமாகக் காது கொடுக்க இந்த முறை அனுமதி இருந்தது.

பொதுக்குழுவில் துறைமுகம் காஜா தொடங்கி டி.ஆர்.பாலு, திருச்சி சிவா என அனேகம் பேருக்கு வாய்ப்பு. ராகுலைக் குறிவைத்துச் சிலரும், காங்கிரஸைக் காயப்படுத்திப் பலரும் பேசி, பொதுக்குழுவைக் குதூகலப்படுத்தினார்கள்.

“யாருடனும் கூட்டணி வேண்டாம்” என்று ஒரு நிர்வாகி உரக்கப் பேசியபோது, “உனக்கென்னப்பா… நீ எலெக்‌ஷன்லயா நிக்கப்போற... நாங்கள்ல சிக்குவோம்” என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் சற்று சத்தமாகவே கமென்ட் அடிக்க.. அறிவாலயக் கதவோரம் சலசலப்பு ஏற்பட்டது. டி.ஆர்.பாலு பேசியபோதும் “மொதல்ல நம்ம வாங்கி வச்சுருக்குற பதவிங்கள விட்டுட்டு அப்புறம் பேசணும்” என்று கமென்ட்.

சுப்புலட்சுமி ஜெகதீசன், ‘அலைக்கற்றை வலையில் கனிமொழியைக் கொண்டுவந்து கட்டம்கட்டிக் கோத்துவிட்டது எப்படி?’ என்பதுபற்றி சற்று நீளமாகவே பேசினார். சில நிமிடங்கள் பொதுக்குழு சீரியஸாகக் கவனிப்பதுபோல் தெரிந்தாலும், அதற்கும் கமென்ட். ‘கழுத்தறுத்தால்தானப்பா அது காங்கிரஸு... அதையும் இவ்வளவு லேட்டாவா புரிஞ்சுப்பீங்க?’ என்று.

காங்கிரஸைக் கைகழுவுவது தொடர்பான முடிவைப் பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும்கூட, அறிவாலயப் பூங்காவில் திரண்டிருந்த தொண்டர்கள் வேறு மாதிரிதான் பேசிக்கொண்டனர். ‘தலைவர் ஏதோ காய் நகர்த்துகிறார். அவ்வளவு சீக்கிரம் காங்கிரஸை விட்டு வந்துவிட முடியாதே?! எதற்கும் நாளைக்கு முரசொலி படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்’ என்று.

மனக் கணக்குகள்!

காங்கிரஸை விட்டுப் பிரிவது என்பது, பல சுற்று முயற்சிகளின் தோல்விக்குப் பிறகும் பல மனக் கணக்குகளுக்குப் பிறகும் கோபாலபுரம் எடுத்த முடிவு என்பதுதான் அறிவாலயத் தகவல்.

“சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியை ப.சிதம்பரம் சந்தித்தார். பேச்சு முழுக்க கனிமொழி பற்றியது. அலைக்கற்றை விவகாரம் தொடர்பானது. சி.பி.ஐ-யையும் நீதிமன்றத்தையும் எல்லை மீறிக் கட்டுப்படுத்தவோ, பயன்படுத்தவோ முடியாது என்பதை ப.சிதம்பரம் திட்டவட்டமாகக் கருணாநிதியிடம் கூறியிருக்கிறார். திரும்பத் திரும்ப கருணாநிதி முன்வைத்த கோரிக்கை, கனிமொழிக்கு எந்தப் பாதிப்பும் வராமல் அலைக்கற்றை வழக்கை நகர்த்த வேண்டும் என்பதுதான். ஆனால், ப.சிதம்பரத்தால் கருணாநிதியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் பேச்சு முடிந்துவிட்டது” என்கின்றன உள்ளே உள்ள பட்சிகள்.

டெல்லியில் டி.ஆர்.பாலுவும் சுற்றிச் சுழன்றாராம். முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்கிறார்கள். ஆனாலும், காங்கிரஸை விட்டு விலகுவது நல்லதல்ல என்ற கருத்தை மு.க.அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி மூவரும் கோபாலபுரம் ஆலோசனையில் வலியுறுத்திச் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ம்ஹூம்!

தலைவரை மிஞ்சி…

தி.மு.க-வின் அண்மைக் கால முக்கிய முடிவுகளில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக பங்கு உண்டு என்பதை அந்தக் கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி அரசியலும் அறியும். மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. அமைச்சர்களை வாபஸ் பெற்றபோது, தலைவரைவிட பொருளாளரின் வேகம் கண்டு கட்சி சற்று பிரமித்துத்தான் போயிருக்கிறது.

அதேபோல், தற்போதைய விலகல் நடவடிக்கையிலும் பொருளாளரின் பாய்ச்சல் கண்டும் கட்சி வியந்து நிற்கிறது. உதயநிதி ஸ்டாலினின் கார் விவகாரத்தில் குடைச்சல் கொடுத்தது; அமலாக்கப் பிரிவு மூலம் டெல்லியில் தனது நண்பரை அமுக்கிப் பிடித்தது போன்றவற்றைப் பொருளாளர் மறக்கவில்லை என்பது, கோபாலபுரம் ஆலோசனையில் எதிரொலித்ததாகச் சொல்கிறார்கள்.

தன்மானம் முக்கியம் என்பதை அழுந்தச் சொல்லி, காங்கிரஸைக் கழற்றும் முயற்சியில், தலைவரைச் சம்மதிக்க வைத்த வகையில் பொருளாளர் கை ஓங்கியிருக்கிறது. ஒதுங்கியிருந்தவரை, ஒதுங்கியே இருக்கவைக்கும் வகையிலும், பதவி எதிர்பார்த்து காத்திருந்தவரைப் பதுங்க வைக்க ‘சிறப்பு’அழைப்பாளர்களை அணிவகுக்க வைத்த வகையிலும் தலைவரை மிஞ்சி கட்சிக்குள் பொருளாளர் சாதிக்கிறார் என்பது தெரிந்தது.

ஒன்றா... இரண்டா?

பா.ஜ.க. பக்கம் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்திருக்கிறார் டி.ஆர்.பாலு. பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் சிரித்துப் பேசி, கைகுலுக்கியிருக்கிறார்கள். ஆனால், அத்வானி, மோடி இருவருமே நம்மை ரசிக்கவில்லை என்ற தகவலை கோபாலபுரத்துக்குச் சொல்லியிருக்கிறார் டி.ஆர்.பாலு. அந்தக் கோபத்தில்தான், “பா.ஜக. கூட்டணியா? அப்படின்னா?” என்கிற ரீதியில் பேசி ஒதுக்கிவிட்டாராம் தலைவர்.

காங்கிரஸும் வேண்டாம்… பாரதிய ஜனதாவும் வேண்டாம் என்று கோபாலபுரம் எடுத்த முடிவுக்குப் பின்னால் மிஞ்சியிருக்கும் பலமான நம்பிக்கை காம்ரேடுகள். அ.தி.மு.க-வுடன் சேர்ந்த பிறகு, நிறையவே அடி வாங்கியிருக்கும் காம்ரேடுகள் எப்படியும் இந்த முறை தி.மு.க. அணிப் பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்பது கோபாலபுரத்துக் கணக்கு.

“மக்களிடம் நமக்கென்று இருந்த 'இமேஜ்' குறைந்து வருகிறது. அ.தி.மு.க. பக்கம் சாய்ந்ததில் இருந்து எந்தப் போராட்டத்தையும் பழைய வேகத்தோடு நடத்த முடியவில்லை” என்பது காம்ரேடுகளின் கவலை. அப்படியிருந்தும், கோபாலபுரத்துக் கணக்குக்கு வெடிவைக்கும் விதமாக தமிழக காம்ரேடுகளின் பேச்சு இருப்பதால், சற்றே குழப்பம்.

ஆனாலும், டெல்லியில் மூத்த காம்ரேடுகளுடன் பேசிப் பார்த்த டி.ஆர்.பாலுவுக்கு ஆறுதலாகப் பதில் கிடைத்திருக்கிறது. அதை அவர் அப்படியே கோபாலபுரத்துக்குத் தெரியப்படுத்திவிட்டார். அந்த நம்பிக்கை தி.மு.க-வுக்குத் தெம்பு கூட்டியிருக்கிறது. அ.தி.மு.க. மீது அதிதீவிரப் பாசம் கொண்ட காம்ரேடை அந்தப் பதவியில் இருந்து நகர்த்த முடியுமா என்றுகூட கோபாலபுரம் ஆலோசித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின்போது, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியனிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி... “அ.தி.மு.க-வில் நமக்கு எத்தனை சீட் கிடைக்கும்?” என்பதுதானாம். “ஒன்றுதான் கிடைக்கும் என்பது இப்போதைக்குக் கிடைத்திருக்கிற தகவல். கூடுதலாக இன்னொன்றுக்கு முயற்சி செய்கிறேன்” என்ற தா.பா-வின் பதில் மூத்த தலைவர்களுக்குத் திருப்தியாக இல்லை.

மார்க்சிஸ்ட் பக்கமும் இதே மன உளைச்சல்தான். ஒன்றா, இரண்டா? என்ற பேச்சில் சலிப்புத் தட்டியிருப்பதால் டெல்லி காம்ரேடுகள், ‘தி.மு.க-வை ஏன் நேசிக்கக் கூடாது?’ என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மற்றபடி, கனிந்து பேசினால் கைக்குள் வந்துவிடும் என்று மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவற்றின் மீது தி.மு.க. நம்பிக்கை வைத்திருக்கிறது. பேசியதுமே முடியாது; பேசப் பேசத்தான் கனியும் என்கிற லிஸ்ட்டில் தே.மு.தி.க. இருக்கிறது.

இத்தனைக் கணக்குகளுக்கு மத்தியில், முடிவுகள் எடுப்பதில் கோபாலபுரம் வேற மாதிரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x