Published : 21 Jun 2017 09:20 AM
Last Updated : 21 Jun 2017 09:20 AM
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சியை ஆக்கிரமித்த போது, “அத்வானி அரசியல் வாழ்வின் மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி” என்று சொன்னார் மூத்த சகா ரங்காசாரி. பாஜகவின் 2014 பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளர்’ என்ற வாக்குறுதியின்பேரிலேயே அத்வானி சமாதானப்படுத்தப்பட்டார் என்பது ஊர் அறிந்த ரகசியமாக இருந்தது. இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான பேச்சுகள் தொடங்கிய சூழலில், அத்வானி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் கையில் எடுத்தபோது, ‘குடியரசுத் தலைவர் தேர்தல் பந்தயத்தில் அத்வானி இருக்கப்போவதில்லை’ என்பதற்கான தீர்க்கமான சமிக்ஞைகள் வெளிப்பட்டன. இப்போது ராம்நாத் கோவிந்த் தேர்வின் மூலம் அது அதிகாரபூர்வமாக்கப்பட்டிருக்கிறது. அத்வானி மிதவாதி கிடையாது. ஆனால், அத்வானியின் அரசியல் முடிவு என்பது பாஜகவில் வாஜ்பாய் தொடக்கிவைத்த மிதவாத யுகத்தின் முடிவு என்று உறுதியாகச் சொல்ல முடியும். மேலும், பாஜகவுக்குள் இதுவரை நிலவிவந்த உட்கட்சி ஜனநாயகத்தின் முடிவு என்றும் இதைச் சொல்ல முடியும்.
அரசியலைத் தீவிரப் போக்கில் கையாண்டுவந்த ஆர்எஸ்எஸ்ஸின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். “தீவிரமான சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் கட்சியானது பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில் ஆட்சிக்கு வரவே முடியாது. ஸ்வயம்சேவகர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. அதிகாரத்துக்கு வருவது குறித்த ஆசையை அவர்கள் விட்டுவிடுவது அல்லது தீவிரமான சித்தாந்தத்தைக் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தை நோக்கி நகர்வது” என்றார் வாஜ்பாய். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான கோல்வால்கர் இதை ஏற்கவில்லை. “தீவிர சித்தாந்தப் பிடிமானமுள்ள ஒரு கட்சியால் இங்கு ஆட்சிக்கு வர முடியும்” என்றார் அவர். ஆனால், இது குறித்து விவாதிப்பதில் வாஜ்பாய் ஆர்வம் காட்டாதபோது, “இந்த இரண்டு போக்குகளில் எதைப் பின்பற்றுவது என்பதை நேரடி அரசியல் களத்திலிருக்கும் ஜனசங்கத்தினரே தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்றார் கோல்வால்கர்.
வாஜ்பாயின் மிதவாதப் போக்கே ஜனசங்கத்தை, பின்னாளில் பாஜகவை காஷ்மீர் - கன்னியாகுமரி கொண்டு சேர்ந்தது. வாஜ்பாயை வெறுமனே ஆர்எஸ்எஸ்ஸின் ‘மிதவாத முகமூடி’ என்று சொல்லிவிட முடியாது. நிச்சயமாக அது ஒரு போக்கு. நிச்சயமாக அத்வானியுடன் வாஜ்பாயை ஒப்பிட முடியாது. நிச்சயமாக மோடியுடன் வாஜ்பாயை ஒப்பிடவே முடியாது.
2002 குஜராத் கலவரத்தின்போது மோடியை முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொல்லும் முடிவை நோக்கி வாஜ்பாய் நகர்ந்தார். 2002, ஏப்ரல் 12 அன்று கோவாவில் நடந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூடியபோது வாஜ்பாயின் திட்டப்படி மோடி ராஜிநாமா செய்திருக்க வேண்டும். ஆனால், ஆர்எஸ்எஸ் பின்னால் இருக்க, அந்தக் கூட்டத்துக்குப் பல நாட்கள் முன்னதாகவே மோடியின் கை அங்கே ஓங்கியிருந்தது. கட்சியின் திசை மாறுவதற்கேற்ப வாஜ்பாயும் தன்னுடைய குரலை அப்போது மாற்றிக் கொண்டார், “முஸ்லிம்கள் எங்கெல் லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் சுமுகமின்மை இருக்கிறது; இந்தியாவுக்கு மதச்சார்பின்மையை யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை” என்றார். வெளியில் இப்படி அவர் மோடிக்கு சால்ஜாப்பு வாங்கினாலும், உள்ளே புழுங்கினார். குஜராத்துக்குச் செல்ல நேர்ந்தபோதெல்லாம் சங்கடத்துட னேயே அவர் சென்றதையும், மோடியை எண்ணி அவர் உள்ளூர அச்சப்பட்டதை யும் அவருடைய சகாக்களே பின்னாளில் கூறினார்கள்.
மோடிக்கு ஆதரவாக 2002 கோவா தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உரத்துக் குரல் எழுப்பியவர்களில் முன்னணியில் இருந்தவர் அன்றைக்குத் துணைப் பிரதமராக இருந்த அத்வானி. சரியாக, 11 ஆண்டுகள் கழித்து, 2013-ல் அதே கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அத்வானியின் பிரதமர் அரசியல் கனவுக் கான முடிவுரையை எழுதினார் மோடி. அது அத்வானியின் முடிவுக்கான அச்சாரம் மட்டும் அல்ல; கட்சி வாஜ்பாயின் போக்கிலிருந்து கோல்வால்கர் போக்கை நோக்கித் திரும்பிவிட்டதற்கான அறிகுறி. இடைப்பட்ட ஒரு தசாப்தத்தில் கட்சி தேசிய அளவில் தோல்விகளைச் சந்தித் துக்கொண்டிருக்க தீவிரப் போக்கைக் கையாண்டுவந்த மோடி தொடர்ந்து வென்றுவந்தார். அவருக்கான அங்கீ காரமானது மறைமுகமாக கட்சியின் வெற்றிக்கான புதிய சூத்திரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
2014-ல் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மோடி கொண்டுவந்த ‘75 வயதோடு அரசியல் முழுக்குத் திட்டம்’ அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை - அதாவது மோடியைக் கேள்வி கேட்கும் நிலையில் இருந்தவர்களை - ஆட்சியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ஒருசேர ஒதுக்கித் தள்ளுவதை மறைமுக லட்சியமாகச் சொன்னது. 75 வயதுக்கு உட்பட்டவரான ராம்நாத் கோவிந்தை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் இப்போது அதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியிருக்கிறார் மோடி. இனி கட்சிக்குள் அவரைக் கேள்வி கேட்கும் ஒருவர் இல்லை. மாநில சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் தொடங்கி இப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு வரை முழுக்க டெல்லியிலிருந்து முடிவெடுக்கப்படும் சூழலை உருவாக்கியிருப்பதன் மூலம் பாஜக இரண்டரை ஆள் நிர்வாகத்தில் திட்டவட்டமாக வந்திருக்கிறது: மோகன் பாகவத், மோடி, அமித் ஷா. இப்போது எஞ்சியிருக்கும் கேள்வி ஒன்றுதான், “ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடாளுமன்றம், ஒரே நிர்வாகி என்பது பறைசாற்றப்பட வேண்டும்” என்றார் கோல்வால்கர். அந்த ஒருவர் யார்? மோடியா, பாகவத்தா?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT