Published : 20 Jun 2017 09:22 AM
Last Updated : 20 Jun 2017 09:22 AM
கன்னியாகுமரியில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் மூத்த எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ‘‘இன்றைய முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் குறைந்துவிட்டது. குறிப்பாக, கணிப்பொறியியல் துறை ஆய்வுகள்; சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய ஆய்வாளரின் நிலை மிகவும் மோசமாகிவருகிறது” என்று நிறையப் புள்ளிவிவரங்களுடன் பேசினார்.
பேச்சு முடிந்து இடைவேளையின்போது, தமிழில் முனைவர் பட்ட ஆய்வு பற்றிக் காரசாரமாய் விவாதம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த பேராசிரியர் ஒருவர், தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றில் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தவர். “நீங்கள் விவாதிப்பதெல்லாம் சரிதான்; மலேசிய - இலங்கைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகளுடன் தமிழக ஆய்வை ஒப்பிட முடியாது. தரம் வேகமாகச் சரிந்துவிட்டது” என்றார். உலக அளவில் நடந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ‘சயன்ஸ் சைட்டேஷன் இண்டெக்ஸ்’ என்னும் பெயரில் வந்திருக்கிறது. 1989-ல் இந்தியாவின் இடம் எட்டு. 1998-ல் 12-வது இடம். இப்போது இன்னும் தரம் குறைந்துவிட்டது என்று சொன்னார் அந்தப் பேராசிரியர்.
அரசின் நிதிநிலை அறிக்கையின்படி தேசப் பாதுகாப்புக்கு அடுத்தபடி கல்விக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி ஆசிரியர் களின் சம்பளத்துக்கே செலவாகிவிடுகிறது. எஞ்சியது ஆராய்ச்சிக்கும் உயர் கல்விக்காகவும் செலவழிக்கப் படும். இந்தப் பணத்துக்குப் பலன் கிடைத் திருக்கிறதா? முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஒருமுறை “சில நாடுகளில் உயர் கல்வி ஆசிரியர்களின் ஊதியம் 50% கொடுக்கப் படுகிறது. எஞ்சிய 50% பணத்தை ஆசிரியரின் கடமை, ஆராய்ச்சிப் பொறுப்புடைமை போன்றவற்றைக் கணக்கில் கொண்டுதான் கொடுக்கிறார்கள் என்று ஒரு கூட்டத்தில் பேசினார். உயர் கல்வி ஆசிரியர்களின் சங்கங்கள் அவரை விமர்சித்தன. அரசியல்வாதிகள் மூச்சு விடவில்லை.
அப்போதைய ஆய்வாளர்கள்...
அறிவியல், விவசாயம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளிலாவது ஏதோ நடக்கிறது என்று சொல்வதற்குக்கூட இடம் இருக்கிறது. கலை - இலக்கியத் துறைகள் இன்னும் மோசம். தமிழ்நாட்டில் தமிழ் ஆய்வும், முனைவர் பட்ட ஆய்வும் தரம் தாழ்ந்துபோனது மட்டுமல்ல, ஊழல்கூடப் பெருக ஆரம்பித்துவிட்டது. பள்ளி ஆசிரியரான மயிலை சீனி வேங்கடசாமியின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் முனைவர் பட்டத்துக்குத் தகுதியானது. தகவல்களைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத காலத்தில், சொந்தப் பணத்தில் தமிழகம் எங்கும் பயணித்துச் செய்தி சேகரித்தவர். அவரது புத்தகங்கள் திரும்பத் திரும்ப அச்சிடப்படுகின்றன.
கல்வி நிறுவனம் சார்ந்த ஆய்வாளர்களான, வையாபுரிப்பிள்ளை, வெள்ளைவாரணர், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மு.இராகவையங்கார், தேவநேயப் பாவாணர் போன்ற பலரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இல்லை. இவர்கள் காலத்தில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள்தான் இன்றும் ஆதரிக்கப்பட்டோ மறுக்கப்பட்டோ தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகின்றன. புதிதாக எழுதப்பட்ட தீவிர ஆய்வுகள் மிகவும் குறைவு. உ.வே.சா.வின் ஆராய்ச்சிபூர்வமான புதிய பதிப்புகள் போன்றவை குறைவாகவே வந்துள்ளன. ஆரம்ப காலத்தில் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுத் துறைகளில் நடந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பல்கலைக்கழகங்களே வெளியிட்டன.
மதுரை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகத் தமிழண்ணல் இருந்தபோது, உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தமிழில் முனைவர் பட்டத்துக்குப் பதிவுசெய்யப்பட்ட ஆய்வுத் தலைப்புகளின் பட்டியலையும், ஆய்வேடு பற்றிய சிறு குறிப்பையும் சேகரித்து, ‘தமிழாய்வு’ (1986) என்னும் தலைப்பில் நூல்வடிவில் வெளியிட்டார். அது போன்ற முயற்சி முறைப்படி முழுமையாக நடக்கவில்லை. இந்நூலில் உள்ள பல தலைப்புகள் மறுபடியும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒரே தலைப்பை எட்டுப் பேருக்கும் மேல் பதிவுசெய்துள்ளனர்.
முனைவர் பட்டத்துக்காக ஆய்வுத் தலைப்பைத் தெரிவுசெய்வதிலிருந்தே ஊழலும் சிக்கலும் ஆரம்பமாகிவிடுகிறது. பதிவுசெய்தல், கட்டுரை எழுதுதல், வழிகாட்டியிடம் கையெழுத்து வாங்குதல், சமர்ப்பித்தல் என எல்லா நிலைகளிலும் ஊழல்தான். ஆய்வாளர், ஆய்வு வழிகாட்டி விரும்பிய தலைப்பைத்தான் எடுக்க வேண்டும் என்ற காலம் இருந்தது, இது ஊழல் இல்லாதவர்களுக்கு. சில வருடங்களுக்கு முன்பு நவீன இலக்கியத்தில் ஈடுபாடுள்ள ஆய்வு மாணவர் ஒருவர், பக்தி இலக்கியத்தில் ஈடுபாடுள்ள வழிகாட்டியிடம் ‘கலாப்ரியாவின் கவிதைகள்’ என்ற தலைப்பில் பதிவுசெய்ய விரும்பினார். வழிகாட்டி, “அந்த அம்மா (கலாப்ரியா) இப்போ இருக்காங்களா?” என்று கேட்டார். மாணவர், கலாப்ரியா பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டியதாயிற்று. கடைசியில், அருணகிரிநாதர் பாடல்களிலிருந்து ஒரு தலைப்பைக் கொடுத்தார் வழிகாட்டி. மாணவர் அதோடு ஆய்வை விட்டுவிட்டார்.
ஊழல் வழிகாட்டிகள்
ஆய்வு மாணவர் தெரிவுசெய்யும் தலைப்பு, ஏற்கெனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா என்று அறியும் தொழில்நுட்பம் ஆய்வுத் துறைகளில் இல்லை. இந்தச் சிக்கலும் சிரமமும் ஊழல் ஆய்வு வழிகாட்டிகளுக்கோ இவர்களிடம் பதிவுசெய்யும் ஆய்வாளர்களுக்கோ இருப்பதில்லை. ஆய்வுக் கட்டுரை தயாரித்துக் கொடுப்பதற்கென்றே ஆட்கள் இருக்கிறார்கள். வழிகாட்டி இவர்களிடம் மாணவரைக் கைகாட்டுவார். அதன் பிறகு, ஆய்வேடு சமர்ப்பிப்பது வரை மாணவர் வழிகாட்டுபவரைப் பார்க்க வேண்டும் என்பதில்லை. ஆய்வேட்டைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்து, கட்டமைத்து, வழிகாட்டியிடம் கையெழுத்து வாங்குவது வரை எல்லாம் தயாரிப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆய்வேட்டைத் திருத்துபவரையும் வழிகாட்டி கவனித்துக்கொள்வார். இதற்கெல்லாம் தவணையாகவோ மொத்தமாகவோ பணம் கொடுக்க வேண்டும். வழிகாட்டியின் மனைவிக்கு நகையாகக் கொடுத்தால் இன்னும் உத்தமம். பணம், பலவீனம் இல்லாத வழிகாட்டிகள் குறைவு என்றாலும், இவர்களிடம் அறிவுத் திருட்டு உண்டு. மாணவரை எழுத வைத்துத் தன் பெயரையும் போடச் சொல்வது; அல்லது தன் பெயரிலேயே கட்டுரை வருமாறு செய்வது என்பது இவர்களைப் பொறுத்தவரையில் ஊழல் அல்ல. இது போன்ற செயல்பாடுகள் கல்லூரி நிர்வாகத்துக்கோ பல்கலைக்கழகத்துக்கோ தெரிந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.இந்த ஊழல்களைப் பல்கலைக்கழகம் நினைத்தால் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மூத்த பேராசிரியர்கள். ஆனால், ஆய்வு வழிகாட்டியின் தர நிர்ணயத்தைக்கூட பல்கலைக் கழகத்தால் வரையறை செய்ய முடிவதில்லை.
வாய்மொழித் தேர்வில்கூட ஆய்வாளர், யாரோ எழுதியதைப் படித்து ஒப்பேற்றுவது என்பது வழக்க மாகிவிட்டது. வாய்மொழித் தேர்வின்போது பார்வையாளர் களான ஆய்வு மாணவர்களுக்கும் ஆய்வு மைய ஆசிரியர் களுக்கும் ஆடம்பரமான விருந்து வைப்பது என்ற வழக்கம் சமீபத்தில் பரவலாகிவருகிறது. தமிழுக்கு மட்டுமல்ல; பிற துறைகளுக்கும் இது பொருந்தும்.
மான்மியம் பெறும் ஆய்வு
மனிதவள மேம்பாட்டு நிறுவனம், செம்மொழி நிறுவனம் என மத்திய - மாநில அரசு வழி மானியம் பெற்று அறிக்கை தயாரிப்பவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் உண்டு. 2 லட்சம் முதல் 11 லட்சம் வரை பணம் பெற்று, ஆய்வறிக்கை எழுதும் உயர் கல்வித் துறை ஆய்வாளர்களில் சிலர், அரசியல்வாதிகளின் சிபாரிசில் கச்சிதமாக இதைச் செய்துவருகின்றனர். ஊழல் இல்லாதவர்களின் ஆய்வுகளில் கூட தர நிர்ணயத்தைப் பரிசீலிப்பது என்பது வழக்கில் இல்லை. ஆய்வு வழிகாட்டிகள் சிலரிடம் சில கேள்விகள். இவர்கள் சொந்தமாகப் புத்தகம் வாங்குகிறார்களா? வாழ்க்கையில் ஒருமுறையாவது புத்தகக் காட்சிக்குச் சென்றிருக்கிறார்களா? ஆய்விதழ், நவீனப் படைப்புகள் வரும் இதழ்கள் படிக்கிறார்களா? இவர்களுக்குத் தமிழின் சமகால வளர்ச்சி பற்றித் தெரியுமா? புத்தகங்களைப் படிக்கும்படி மாணவர்களைத் தூண்டுகிறார்களா? இறையனார் எழுதிய ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாடலைத் தருமி படித்து, பரிசு வாங்குவதான கதை இன்றும் தொடர்கிறது. ஆனால், சின்ன வித்தியாசம், தருமிக்குப் பாடல் எழுதிக்கொடுக்க இறையனார் பணம் வாங்கவில்லை. இன்றைய இறையனார் வாங்குகிறார். எழுத்தில் குறைகாண நக்கீரரும் இப்போது இல்லை.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT