Last Updated : 20 Mar, 2017 10:30 AM

 

Published : 20 Mar 2017 10:30 AM
Last Updated : 20 Mar 2017 10:30 AM

விவசாயம் தொடர்பான இன்றைய பார்வையிலேயே மாற்றம் வேண்டும்!

இன்னும் உக்கிரமான கோடையைத் தொடவில்லை. அதற்குள் வறட்சியின் கொடூரங்களைத் தமிழகம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் அரிசிக் கிண்ணமான காவிரிப் படுகை விவசாயிகளை, இந்த வெஞ்சூழல் சாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்திருக்கின்றன. சென்னையில் எப்போதும் இம்மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தண்ணீர் கையிருப்பில் இருக்கக் கூடிய நீர்த்தேக்கங்களில், ஒரு மாதத்துக்கான தண்ணீர்கூட இல்லை. குவாரி பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, மக்களுக்குக் குடிக்க அனுப்பிக்கொண்டிருக்கிறது அரசு.

2015-ல் நூற்றாண்டு காணாத மழைப்பொழிவு, வெள்ளம். 2016-ல் வரலாறு காணாத மழைப்பொய்ப்பு, வறட்சி. 2015 டிசம்பர் 1 அன்று சென்னையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. செய்வதறியாது நின்றோம். 2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது. செய்வதறியாது நிற்கிறோம்.

நூற்றாண்டு வெள்ளம், நூற்றாண்டு வறட்சி என்ற சொல்லாடல்களின் வழி தப்பித்துக்கொள்ளுதல் எளிது. நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என்ன, இன்றைக்கு உருவாகியிருக்கும் சாத்தியங்கள் என்ன? இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அதே துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியிருப்பது யாருடைய தவறு என்று யோசித்தால், துயரங்கள் இயற்கையின் விளைவு அல்ல; ஆட்சியாளர்களின் நிர்வாகக் கோளாறின் விளைவு என்பது புரியவரும்.

நீராதாரத்தில் பெரும் சேதம்

தமிழகத்தின் நீராதாரக் கட்டமைப்பில் கடந்த நூற்றாண்டுகளில் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று மாநிலத்தின் பிரதான நீராதார நதிகளில், நீர்ப் பகிர்வில் அண்டை மாநிலங்களுடன் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம்முடைய முழு ஆளுகைக்குட்பட்ட நீர் சேகரக் கட்டமைப்பிலும் பெரும் நாசத்தை நாமே உண்டாக்கிவிட்டோம்.

சென்னைக்குக் குடிநீர் தரும் வீராணம் ஏரி ஒரு உதாரணம். 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்த இந்த ஏரியின் கொள்ளளவு 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டது. அதாவது, மூன்றில் ஒரு பகுதி காணாமல்போய்விட்டது. சென்னையின் மிகப் பெரிய ஏரியான போரூர் ஏரியின் பரப்பளவு 800 ஏக்கர். இப்போது அதில் 470 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தலைநகர நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கதியே இதுவென்றால், மாநிலத்தின் ஏனைய நீர்நிலைகளின் நிலையை விவரிக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன; அவற்றில் எத்தனை அதே பழைய கொள்ளளவுடன் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. கண்மாய்கள், குளங்களின் நிலை இன்னும் பரிதாபம்.

மிச்சமுள்ள ஒரே ஆதாரம் நிலத்தடி நீர். அதீதப் பயன்பாட்டால், அங்கும் பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிதாக முளைக்கும் ஆழ்துளைக் கிணறுகள் நாட்டிலேயே நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியங்களில் ஒன்றாக தமிழகத்தை மாற்றிவருகின்றன.

நீர்ப் பற்றாக்குறை மாநிலம்

அடிப்படையிலேயே தமிழகம் நீர்ப் பற்றாக்குறை மாநிலம். அதாவது, பருவ மழை வழக்கம்போலப் பெய்து, அண்டை மாநிலங்களிலிருந்து இங்கு வர வேண்டிய ஆற்றுத் தண்ணீர் பெரிய சேதாரம் இன்றி வரக் கூடிய நாட்களிலேயே மாநிலத்தின் நீராதாரம் 1,587 டிஎம்சி. தேவை 1,894 டிஎம்சி. கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு பற்றாக்குறை. மேலும், தமிழகம் பெறும் மழை நீரும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சமமானதோ நாம் எல்லாப் பகுதிகளுக்கும் திருப்பிவிடக் கூடியதோ அல்ல.

திருச்சியில் பணியாற்றியபோது, அங்கு ஆட்சியராக இருந்த நந்தகுமார் சொல்வார், “எப்போதுமே திருச்சியில் 54% மழை குறைவாகத்தான் கிடைக்கிறது; தேனிக்கு 38% கூடுதலாகக் கிடைக்கிறது. ஆனால், நாம் எல்லா ஊரும் ஒன்று என்று நினைத்துக்கொண்டுதான் விவசாயக் கொள்கைகளை வகுக்கிறோம்!” தமிழக வேளாண்மையில் கடந்த ஐம்பதாண்டுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றம், அதிக நீர் தேவைப்படும் பயிர்களின் சாகுபடி வகைதொகையின்றி அதிகரித்தது. குறிப்பாக, நெல்லும் கரும்பும்.

இரண்டே வழிகள்

ஒரு பற்றாக்குறை மாநிலம், தன்னிடம் மிச்சமுள்ள நீராதாரத்தையேனும் காப்பாற்றிக்கொண்டு, எதிர்காலத் தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும் என்றால், அதன் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன? 1. புதிய நீராதாரக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். 2. சிக்கனமான தண்ணீர்ப் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

முதலாவது விஷயத்தில், தெலங்கானாவையே நாம் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ரூ.22,000 கோடியில் தெலங்கானா அரசு தொடங்கியிருக்கும் ‘மிஷன் காகதீயா’இயக்கம் ஒரு நல்ல முயற்சி. 46,653 சிறு பாசன ஏரிகள், கண்மாய்கள், குளங்களை மீட்டுருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது இது. முதல் கட்டமாக 8,000 நீர்நிலைகளை மீட்டுருவாக்கியிருக்கிறார்கள். இவையே 2.4 டிஎம்சி நீராதாரத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இரண்டாவது விஷயத்தில், இஸ்ரேலை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதிக நீர் தேவைப்படாத பயிர்ச் சாகுபடியைத் தேர்ந்தெடுத்தல்; குறைந்த தண்ணீரில் அதிகமான விளைச்சலைத் தரும் புதிய ரகப் பயிர் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப ஆய்வுகளில் இறங்குதல். நிலத்தடி நீர்த்தேக்கங்கள், சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற சிக்கன பாசனத் தொழில்நுட்பங்களை வரித்துக்கொள்ளுதல் என்று விரிவான பன்நடவடிக்கைகளைக் கொண்ட செயல்திட்டம் இது.

இவ்வளவு நெல் தேவையா?

எல்லாவற்றுக்கும் அடிப்படையான மாற்றம், தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கேற்ற சிக்கனமான நீர்ப் பயன்பாட்டைக் கொண்ட விவசாயக் கொள்கையை உருவாக்குவதாகும். விவசாயத் துறையை ஒரு ‘புனிதப் பசு’ஆக்கி, விமர்சனங்களுக்கும் புதிய மாற்றங்களுக்கும் அப்பாற்பட்ட இடத்தில் அதை நிறுத்தி வைத்திருக்கும் இன்றைய போலிப் பார்வையிலிருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். நம்முடைய நீர்ப் பயன்பாட்டில் 90% விவசாயம் சார்ந்தது. அங்கு கை வைக்காமல் பேசப்படும் எந்த மாற்றமும் அர்த்தமற்றது என்று நாம் உணர வேண்டும்.

பெரியவர் ‘மரம்’தங்கசாமி சொல்வார், “ஒரு பிராந்தியம் பசுமையாக இருக்க அதன் மூன்றில் ஒரு பங்கு நிலம் வனமாக இருக்க வேண்டும். அதேபோல, மிச்சத்தில் நான்கில் ஒரு பங்குக்கு மேல் வயலாக இருக்கக் கூடாது. நம் முன்னோருக்கு இருந்த இந்தத் தெளிவைப் பிற்பாடு இழந்ததுதான் நம்முடைய இன்றைய சிக்கல்களுக்கு முக்கிய காரணம்!” அதாவது, வயலில் நான்கில் ஒரு பகுதிக்கு மேல் சாகுபடி செய்யக் கூடாது. அது தரிசாகவும் மரங்கள் நடப்பட்டும் விடப்பட வேண்டும். மீறி அதில் பயிர் போட்டால், அது மானாவாரிப் பயிராக இருக்கலாம். ஏனென்றால், அதீத பயிர் சாகுபடி நீராதாரத்துக்குப் பெரும் ஆபத்து!

இன்றைக்கு தமிழ்நாட்டின் பெரும் பகுதி மாவட்டங்கள் இந்த வரையறைகளைக் கடந்தவை. ஆறில் ஒரு பங்கு நிலம்கூட வனமாக இல்லை. மிச்ச நிலத்தில் கணிசமாக வயல். அதுவும் காவிரிப் படுகையிலெல்லாம் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வயல். அதிலும் பெரும் பகுதி நெல்! சிறுதானிய நுகர்வு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதன் பின்னுள்ள சந்தை அரசியலை எவரும் உணர்வதில்லை.

பார்வை மாற்றம் வேண்டும்!

நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அதிகப்படியான நீரைச் செலவழிக்கும் இதே விதமான பயிர்ச் சாகுபடி முறையையே பின்பற்றப்போகிறோம்? இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பழைய தொழில்நுட்பங்களையே கையாள்வோம்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு விவசாயிகளை ஒரு நிலையற்ற சூழலிலேயே வைத்திருக்கப்போகிறோம்?

- சமஸ்,
தொடர்புக்கு:samas@thehindtamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x