Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

இப்படியும் ஒரு வதந்தி!

ட் விட்டரில்தான் முதலில் அந்தச் செய்தி வந்தது. அது செய்திதானா, வெறும் வதந்தியா என்று விசாரித்து அறிந்துகொள்ளும் முன்னரே பரபரவென்று உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆப்பிரிக்க செய்தித் தாள்கள் பலவற்றில் நேற்று மதியத்துக்குப் பிறகு செய்தியாகவே அதனை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆம். அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடையின் முதல் கட்டமாக தேசமெங்கும் உள்ள மசூதிகளை இடிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஓரிரு தினங்களில் அங்கோலாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் நாடு கடத்தி விடுவார்கள்.

அங்கோலாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளே இதைச் செய்தியாகச் சொன்னதுதான் வியப்பு. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அங்கோலாவின் அதிபர் ஜோஸ் எட்வர்டோ 'தேசத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி முடக்கப்படும்; விரைவில் இது விஷயமாக ஓர் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று சில தினங்கள் முன்பு பேசியதைச் சுட்டிக்காட்டி, முடிவை ரொம்ப சீக்கிரம் எடுத்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். 'அங்கோலாவில் இன்னும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத மதம் இஸ்லாம். அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், இறுதி முடிவு எடுக்கப்படும்வரை மசூதிகள் மூடப்படும்' என்று அந்த தேசத்தின் கலாசாரத்துறை அமைச்சர் சொன்னதாகக் கிட்டத்தட்ட உலகின் அனைத்துப் பத்திரிகைகளுமே செய்தி வெளியிட்டுவிட்டன.

உலகம் கொந்தளிக்கத் தொடங்கிய நேரத்தில் இதற்கு மறுப்பு வெளியானது. அதெல்லாம் இல்லை. யார் சொன்னது? இது யாரோ கிளப்பிவிட்ட வீண் புரளி. இப்போதைக்கு எந்தத் தடையும் இல்லை. மசூதிகளை இடிக்கச் சொல்லி யாரும் சொல்லவில்லை. தீர்ந்தது விஷயம்.

என்ன தான் நடக்கிறது அங்கோலாவில்?

கொஞ்சம் விவகாரம்தான். அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் தகவல் பெட்டகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது சரியென்றால், அங்கோ லாவில் 47 சதவீதம் பேர் ஆதிவாசிகள். பெரிய அடையாளங்களற்ற இனக்குழுக்கள் சார்ந்த மதங்களிலும் சிறு தெய்வ வழிபாடுகளிலும் நம்பிக்கை உள்ளவர்கள். 38 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர்களாகவும் 15 சதவீதத்தி னர் ப்ராட்டஸ்டண்டுகளாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் சமீப காலமாக மேற்படி ஆதிவாசி ஜனங்களிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே பரவலாக நிகழ ஆரம்பித்திருக்கின்றன. இதனைத் தடுப்பதற்காகவே அங்கோலாவில் இஸ்லாத்தை 'தடை செய்யப்பட்ட மதமா'க அறிவிக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. இதில் ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. அதிபர் முதல் கட்டக்கடைசி கவர்மெண்ட் ஆபீஸ் ப்யூன் வரைக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமாகப் பேசப்பட்ட சங்கதிதான்.

'சிறுபான்மையினர்' என்று சொல்லுமள வுக்குக் கூட அங்கோலாவில் முஸ்லிம்கள் இல்லாத சூழலில், தொழில் நிமித்தம் குடியேறிய முஸ்லிம்களைத் தொந்தரவு செய்யவும் துரத்தியடிக்கவும் தம்மாலான நடவடிக்கைகளை ஆத்ம சுத்தியுடன் செய்து வந்தார்கள்.

நேற்றைய 'இஸ்லாத்துக்குத் தடை' உண்மை யில் செய்தியாகவே கூட இருக்கலாம். கடைசி நேர அச்சத்தில் இதனை ஒரு வதந்தி என்று அரசு பிளேட்டைத் திருப்பிப் போட்டிருக்கலாம். எப்படியானாலும் அங்கோலா தன்னை ஓர் இஸ்லாம் விரோத தேசமாக பகிரங்கமாக உலகுக்குக் காட்டிக்கொள்ள இந்த தினத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது கண்கூடு.

ஒரு பக்கம் தலைநகரமான லுவாண்டாவை உலகின் மாபெரும் சுற்றுலா சொர்க்கமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே மறு புறம் முஸ்லிம்களே வராதீர்கள் என்று ஒரு தேசம் அறிவிக்குமா? என்றால், அங்கோலா அதனைச் செய்யும். இப்போது அளிக்கப்படும் சுற்றுலா விசாக்களைக் கூட முஸ்லிம் அல்லாதவர்க ளுக்கே பார்த்துப் பார்த்துக் கொடுக்கிறார்கள்.

இதற்கான காரணமாக அங்கோலா அரசு சொல்வது முக்கியமான விஷயம். பல்வேறு ஆப்பிரிக்க தேசங்களில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியக் கிழக்கு முதல் ஆப்பிரிக்கா வரை பரவியுள்ள இஸ்லாமிய இயக்கங்களே முதன்மைக் காரணமாயிருக்கும் சூழலில் அங்கோலாவில் அம்மாதிரியான அவலங்களுக்கு இடம் தர விருப்பமில்லை என்று கடந்த ஆகஸ்டில் அதிபராகப்பட்டவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்த மண்ணின்மீது உரிமையற்றவர்கள் உள்ளே வர கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும் என்று அப்போதே அவர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். கெடுபிடி என்பதைத்தான் இன்று தடை என்று மாற்றி அறிவித்து, அதை வதந்தி என்று தாற்காலிகமாக மூடி வைத்திருக்கி றார்கள். தாற்காலிகமாகத்தான். விரைவில் இது அதிகாரபூர்வமாகவே நிகழ்ந்துவிடும் என்றுதான் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x