Published : 26 Jun 2017 09:35 AM
Last Updated : 26 Jun 2017 09:35 AM

தமிழுக்கு சிவப்பென்றும் பேர்!

தமிழ்நாட்டின் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில், ஜூன் 26, 2017-ல் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்புள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தமிழர் உரிமை மாநாடு ஒரு முக்கிய மைல்கல். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கீழடி வரலாற்றுரிமையை நிலைநாட்டவும் என இரு கருத்துகளை மையமாகக் கொண்டு கூட்டப்படும் இந்த மாநாடு, உண்மையிலேயே மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் செய்யப்படும் மிகவும் தைரியமான ஓர் எதிர்வினை.

மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றில் அலட்சியம் காட்டிவந்த அல்லது முரணான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சி என்று பலரும் அதை மதிப்பிடுகின்ற ஒரு சூழலில், இந்த மாநாடு பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது. காங்கிரஸ், பாஜக, மையநீரோட்ட இடதுசாரிகள் ஆகிய மூன்று தரப்பினருமே இந்தியா என்கிற கட்டமைப்பை ஒரே மாதிரியாகப் புரிந்துகொண்டவர்கள் அல்ல என்றாலும், மொழி உரிமை அல்லது தேசிய இனங்களின் உரிமை என்று வரும்போது, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் கட்சிகளாக இவை தோற்றமளிக்கின்றன என்பதே இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்.

நிர்ப்பந்திக்கும் மோடியின் செயல்பாடுகள்

ஆனால், எந்த மாற்றமும் அக - புறக் காரணிகளினூடாகத்தான் ஏற்படுகிறது என்பது ஒரு மார்க்ஸிய அணுகுமுறை. மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகள், இந்தியாவிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற அரசியல் அமைப்புகளையும் தமது பார்வைகளையும் வியூகங்களையும் சரிபார்க்கும்படி நிர்ப்பந்திக்கின்றன. இந்தி இந்து - இந்துஸ்தான் என்கிற திரிசூலத்தின் மூன்று கூரிய முனைகளில் ஒரு முனையை மட்டும் எதிர்ப்பதால் பயனில்லை என்கிற எண்ணம் இப்போது இடதுசாரிகளிடம் பரவியிருக்கிறது. இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. மலையாள மொழியுரிமைக்குச் சட்டம் இயற்றுவதன் மூலமாகவும் கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்துவதன் மூலமாகவும் கேரளத்தில் இடதுசாரி பினராயி விஜயன் அரசு பாஜகவை எதிர்கொள்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு அனைத்திந்தியக் கட்சிகளும்கூட இதே சூழலை எதிர்கொள்கின்றன. கடந்த வாரம், பெங்களூரு மெட்ரோவில் இந்தி திணிக்கப்பட்டதற்கு எதிராக கன்னட மொழியுரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, கர்நாடகத்தின் ஆளும் காங்கிரஸ் கட்சியினரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் மொழியுரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவே இருக்க முடியும் என்கிற முடிவுக்கு 1940-களில்தான் கம்யூனிஸ்ட் கட்சி வந்தடைந்தது. அதாவது, தேசிய இனங்கள் குறித்த லெனினிய நிலைப்பாடு இந்திய கம்யூனிஸ்ட்டுகளால் முன்னிறுத்தப்பட்டது. இந்தியாவில் 17 வளர்ந்த தேசிய இனங்கள் இருக்கின்றன என்றும் அவற்றுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்றும் இந்தியாவின் அரசியல் சாசன அவையே இந்தத் தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் அவையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் கருதினார்கள். 1950-களில் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம் தீவிரமடைந்தபோது, ஆந்திரத்தில் விசாலாந்திரா போராட்டத்துக்குத் தலைமை தாங்கியதே கம்யூனிஸ்ட் கட்சிதான். கேரளத்தில் மொழிவாரி மாநிலத்துக்கான ஐக்கிய கேரள இயக்கம் நடந்தபோது, அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு. ‘குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் இணைத்த பாம்பே மாநிலம் வேண்டாம், மராத்தியர்களுக்குத் தனி மாநிலம் வேண்டும்’ என்கிற முழக்கத்தோடு களமிறங்கி வெற்றிகண்ட சம்யுக்த மகாராஷ்டிர இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் எஸ்.ஏ.டாங்கே.

தமிழுக்காக வாதாடிய இடதுசாரி இயக்கம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிங்காரவேலரையும் ஜீவாவையும் மறக்க முடியுமா? அவர்கள் செந்தமிழ் என்பதைச் சிவந்த தமிழாக ஆக்கினார்கள். 1961-ல் நாடாளுமன்றத்தில், “மெட்ராஸ் மாநிலம் என்கிற பெயரைத் தமிழ்நாடு என மாற்ற வேண்டும்” என்கிற தனிநபர் மசோதா ஒன்றை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பூபேஷ் குப்தா. அப்போது பூபேஷ் குப்தாவை உச்சி முகர்ந்தார் மாநிலங்களவை உறுப்பினராக அங்கே இருந்த அண்ணா. தமிழ்நாட்டுக்கு அப்பெயரை வைக்கச்சொல்லி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி, உயிர் துறந்த சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட் கட்சியினரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, மத்திய அரசின் இந்தித் திணிப்பு மொழிக் கொள்கைக்கு முடிவுகட்டுவதற்காக 1968-ல் இரு மொழித் திட்டத்தை அமல்படுத்தியது. அதற்கான சிறப்புச் சட்டப்பேரவை விவாத அமர்வில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, “நீதிமன்றம், அரசு நிர்வாகம் அனைத்திலும் தமிழுக்கே முதலிடம்” என்று வலியுறுத்தினார். அத்துடன், “ஆங்கிலத்தைக் கட்டாய மொழியாக ஆக்கிய இந்த இருமொழித் திட்டம், தமிழை ஏனைய 13 மொழிகளோடு சேர்த்து விருப்ப மொழியாக ஆக்கியிருக்கிறது. மாறாக, தமிழையல்லவா கட்டாயமாக ஆக்கியிருக்க வேண்டும்?” என்று அண்ணா அரசிடமே கடுமையாக வாதாடினார். சட்ட மன்றத்தில் தமிழுக்காக வாதாடிய தருணங்கள் பல இடதுசாரி இயக்கத்துக்கு உண்டு. மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாண சட்டசபையில் விவாதங்கள் ஆங்கிலத்தில் நடப்பதே வழக்கம். அதை மாற்ற வேண்டும் என்று 1953-ல் போராடினார் பி.ராமமூர்த்தி. அவரே பட்ஜெட் தொடர்பான தனது கருத்துரையை அழகான தமிழில் ஆற்றினார்.

இத்தகைய வரலாற்றுப் பின்புலமுள்ள இடதுசாரிகள், ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் மொழிக்களத்தில் தீவிரமாக நுழைவது வரவேற்புக்குரியது. அதுவும் இன்றைய யதார்த்தம் பல புதிய சிக்கல்களைக் கொண்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழகத்திலுள்ள மத்திய, பொதுத்துறை நிறுவனங்களில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைத்துப் பணியிடங்களுக்கும் வடநாட்டிலிருந்து அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் நியமிக்கும் போக்கு தீவிரமாகியுள்ள சூழலில், பெரும்பாலும் இவ்விடங்களில் பணியாற்றும் தமிழக ஊழியர்கள் (இவர்களில் பலர் சிஐடியு போன்ற இடதுசாரி தொழிற்சங்கங்களில் இருப்பவர்கள்) மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

பறிபோகும் வாய்ப்புகள்

அவர்களின் பணி உயர்வும் புதிதாக தமிழகத்திலிருந்து வேலைக்கு ஆளெடுக்கும் வாய்ப்பும் பறிபோய்க்கொண்டிருப்பதைப் பார்த்துதான், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் அதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிக்கு எதிராகவும் எல்ஐசி, பெல், ரயில்வே துறை போன்றவற்றில் போராட்டம் வெடித்தது. மொழியுரிமை இங்கே நேரடியாக ஒரு வாழ்வாதாரச் சிக்கலாக உருமாறியிருக்கிறது. எனவே, இடதுசாரிகளின் மொழியுரிமைப் போராட்டம் என்பது பெரும்பாலான தமிழகப் பாட்டாளிகளின் வர்க்க நலன்சார்ந்தும் அமைகிறது. தமிழ் மொழியுரிமை இயக்கத்தில் இது ஒரு முக்கிய பரிமாணமாகும். இந்தியாவில் மொழியுரிமைக்குத் தமிழகம் முன்னோடி என்றால், இந்திய இடதுசாரி இயக்கத்தில் மொழியுரிமைக்கான முன்னோடியாக தமிழக இடதுசாரிகள் இருக்கட்டும்.

இந்த மாநாட்டின் மற்றுமொரு மையக் கருத்து கீழடி. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றையே திருப்பிப் போடக்கூடிய, “வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்கு!” என்று வரலாற்றாசிரியர்களை நிர்ப்பந்திக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு நம்முடைய கீழடி அகழ்வாராய்ச்சி. இதுவரை இந்தியாவின் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள்கூட தமிழக வரலாற்றை ஊறுகாயாகத்தான் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் கீழடியை முன்னிறுத்தியதன் மூலம் தமுகஎச மிக முக்கியமான வரலாற்றுப் பங்களிப்பைச் செய்திருக்கிறது. தேசிய இனங்களின் உரிமைகளுக்கான சித்தாந்தவாதிகளிலேயே ஆகச்சிறந்தவரான லெனினின், ரஷ்யப் புரட்சி தனது நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், அந்தப் புரட்சியைத் தமிழக இடதுசாரிகள் மிகச் சரியான ஓர் நகர்வினூடாக நினைவுகூர்கிறார்கள்!

- ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கத்தின் செயலர்.

தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x