Published : 08 Oct 2013 04:51 PM
Last Updated : 08 Oct 2013 04:51 PM
நம்மூரில் தேர்தல் என்றால் திருவிழா. கலாட்டாக்களுக்குப் பஞ்சமில்லாவிட்டாலும் நடக்குமா நடக்காதா என்றெ ல்லாம் நாம் என்றுமே கவலை ப்பட்டதில்லை.
ஆப்கனிஸ்தானில் அப்படி இல்லை. வோட்டுப் போட மக்கள் வருவார்களா மாட்டார்களா என்பது ஒரு பக்கம் இருக்க, எலெக்ஷனில் நிற்க வேட்பாளர்கள் முன்வருவதே துர்லபம். ஐயா எது இருந்தாலும் இல்லாது போனாலும் உயிர் இருக்க வேணாமா? விடிந்து எழுந்தால் வேட்பாளர்களைப் போட்டுத்தள்ளுவேன் என்று கிங்கரர்கள் நாட்டுத்துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நின்றால் யார் வந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்கள்?
யுத்தம் முடிந்து ஹமீத் கர்சாய் ஆட்சிக்கு வந்து ரெண்டு ரவுண்டு முடிந்துவிட்டது. இதோ மூன்றாவது அதிபர் தேர்தல். சமத்து கர்சாய் இனியும் அரசுக் கட்டிலில் இருக்க ஏலாது. ஆண்ட காலத்தில் தன்னால் முடிந்தவரைக்கும் அமைதிக்கும் இன்னபிறவற்றுக்கும் முயற்சி செய்து ஒரு மாதிரி சமாளித்துவிட்டார். தலிபான்களுடன் சமரசம் பேசுவதற்குத் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தும் ஒன்றும் பிரயோசனப்படவில்லை.
தலிபான்கள் மாறமாட்டார்கள். கர்சாய் மாறித்தான் தீரவேண்டும்.
ஆனால் இந்த தேசத்தில் இனி ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் மூலம்தான் நடக்கும் என்று உறுதிப்படுத்தி வைத்தது கர்சாயின் சாதனைதான். சந்தேகமில்லை. ஒசாமா காண்டம் முடிந்து, அமெரிக்க யுத்த பேரிகைகளின் சத்தம் அடங்கிய பிற்பாடும் காபூலில் பிரதி வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு சந்தில் குண்டு வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆன்னா ஊன்னா அமெரிக்க தூதரகத்துக்கு ஆசீர்வாதம் பண்ணுவது போல ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார்கள். கர்ம சிரத்தையாக நாந்தான் செய்தேன் என்று கடுதாசியும் போடுவார்கள்.
யார் கேட்பது? ஆப்கானியர்க ளுக்கு குண்டுச் சத்தம் பழகிவிட்டது. பலிகள் பழக்கமாகிவிட்டன. இழப்பு ஏற்படாத தினமெல்லாம் சுபதினம்தான். உயிரோடு இருக்கும் வரை லாபம். எனவே, தேர்தல் ஒரு தேறுதல். அடுத்த ஏப்ரல் அஞ்சாம் தேதி அங்கே அதிபர் தேர்தல் நடக்க வேண்டும். அறிவிப்பு வெளியாகி, சுமார் இருபது பேர் களத்தில் குதித்துவிட்டார்கள். ஹமீத் கர்சாயின் மூத்த சகோதரர் கயாம் கர்சாய் ஆஜர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஆப்கனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அடுத்து இருக்கிறார். அஷ்ரஃப் கானி, அப்துல் ராப் ரசூல் சயீஃப் போன்ற பஷ்டூன் பெருந்தலைகள் இந்தத் தேர்தலில் ஜெயித்து அதிபராகியே தீருவது என்று வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.
தலிபான்கள் மீதான அச்சம் இந்த அத்தனை பேருக்குமே எப்போதும் உண்டு. எங்கே அவர்கள் தேர்தலை நடத்த விடாமல் பண்ணிவிடுவார்களோ என்கிற அச்சம். ஆனாலும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள். கஷ்டமிருந்தாலும் கர்சாயால் முடிந்தது நம்மாலும் முடியாதா என்கிற நம்பிக்கை அல்லது நப்பாசை. கிட்டத்தட்ட மூன்றேகால் கோடி ஜனத்தொகை கொண்ட ஆப்கனிஸ்தானில் நாற்பத்திரண்டு சதவீதம் பேர் பஷ்டூன்கள். இருபத்தியேழு சதவீதம் தஜிக்குகள். ஹஜாராக்களும் உஸ்பெக்குகளும் தலா ஒன்பது சதவீதம். இப்படியெல்லாம் புள்ளிவிவரம் சொல்லும்படியாக அங்கே தலிபான்களின் எண்ணிக்கை கிடையாது என்றாலும், எதைத் தொடங்குவதானாலும் பிள்ளையாரப்பனை முதலில் மனத்தில் வேண்டி வணங்கி ஆரம்பிப்பது மாதிரி அவர்களை நினைத்த வண்ணம்தான் தொடங்கியாக வேண்டியிருக்கிறது.
தலிபான்களின் பலம், ஆயுதங்களல்ல. குண்டுகளல்ல. ஆட்களல்ல. திறமைசாலிகளல்ல. தங்களுடைய பலம் என்னவென்பதை யாராலும் சரியாகக் கணிக்க முடியாதபடி பொத்தி வெச்ச மல்லிகை மொட்டாக இருக்கிறார்களே, அது. சந்தேகமில்லாமல் அவர்கள் பலம் குன்றித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆப்கனின் கரடுமுரடான நிலப்பரப்பு அவர்களுக்குப் பெரும் சாதகம். கொசு ஒழிப்பு ப்ரோக்ராம் மாதிரி ஒன்றைத் திட்டமிட்டு தலிபான்களை முற்றிலும் ஒழித்துவிடுவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது. இதனால்தான் ஹமீத் கர்சாய் அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வியாதி சொஸ்தம் பண்ணப் பார்த்தார். அது நடக்கவில்லை. போகட்டும். விட்ட இடத்திலிருந்து புதிதாக வருபவர்கள் எதையாவது செய்வார்கள்.
எந்த அரசானாலும் சரி. மக்களின் அடிப்படைத் தேவைகளை முழு மூச்சாக நிறைவேற்றுவதில் எனக்கு அக்கறை இருக்கிறது என்று காட்டிவிட்டால் ஆயுததாரிகளால் நீண்டநாள் தாக்குப் பிடிக்க முடியாது. யுத்தங்களல்ல; பேச்சு வார்த்தைகளும் அல்ல; செயல்பாடு ஒன்றே நிரந்தரத் தீர்வு.
வரப்போகிற புதிய அதிபருக்கு இது புரிய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment