Published : 31 Oct 2013 12:35 PM
Last Updated : 31 Oct 2013 12:35 PM
‘ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து உறவாடும் நேரமடா...’ என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் தீபாவளியை நினைவூட்டுகின்றன. அதேநேரம் பட்டாசு வெடிச் சத்தங்கள் உருவாக்கும் ஒலியும் புகையுமான மாசு வயதானோரையும், நோயுற்றோரையும், செல்லப் பிராணிகளையும், கால்நடைகளையும் கதிகலங்க வைக்கும்.
சிவகாசியிலும் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தீபாவளிக்கு முன்னரே ஏற்படும் தீ விபத்துகளில் பல்லுயிர்கள் பலியாகும் காட்சிகள் கண்ணீர் கதைகள். ஆனால், பட்டாசு தொழிலில் போட்டியிடும் சீனாவில் அப்படி நடக்கின்றனவா என்றுத் தெரியவில்லை.
பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தீபாவளிக்கு முன்பே மாதக்கணக்கில் பட்டாசுக்காக பணம் வசூலித்து, சிவகாசியில் இருந்து மொத்தமாக வாங்கி, ஊழியர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள். அந்த நேரத்தில் அலுவலக வேலைகளை யார் செய்வார் என்று எவருக்கும் தெரியாது.
தீபாவளி வந்தாலே போனஸ் கோரிக்கைகள் தொழிலாளர் மத்தியில் எழுந்து விடும். 1965-ம் ஆண்டு போனஸ் சட்டத்தில் நிதியாண்டு முடிந்து 8 மாதங்களுக்குள் போனஸ் பட்டுவாடா செய்யவேண்டும் என்று இருப்பதே அதற்குக் காரணம். நவம்பரில் தீபாவளிச் செலவு நெருக்குவதால் ‘தீபாவளி போனஸ்’ அக்கோரிக்கை பெயர் பெற்றது.
ஆண்டுதோறும் விலை ஏறினாலும் பட்டாசுகளுக்கும் வாண வேடிக்கைகளுக்கும் மட்டும் குறைவில்லை. இப்போது சவ ஊர்வலம் தொடங்கி தலைவர்களை வரவேற்பது வரை பல நிகழ்வுகளிலும் பட்டாசு வெடிப்பது வழக்கமாகிவிட்டது. புதிதாக பதிவுப் பெற்று பார் கவுன்சிலை விட்டு வெளியே வரும் இளம் வக்கீல்களுக்கும்கூட பட்டாசு வரவேற்பு உண்டு. இதைத் தடுக்க பார் கவுன்சில் போட்ட உத்தரவும் வெடி சத்தத்தில் மங்கிவிட்டது.
முன்பெல்லாம் பட்டாசு கடைகள் பூக்கடைக்கு எதிரே உள்ள நெரிசலான நான்கு தெருக்களில் வியாபாரம் செய்தன. அதற்கான விற்பனை உரிமங்கள், வெடிமருந்து விதிகளுக்கு உட்பட்டவை. வெடிமருந்து சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இவ்விதிகளின் எண் 137-ன்படி ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு பட்டாசு கடைக்கும் இடைவெளி 15 மீ்ட்டர் இருக்கவேண்டும். 1000 கிலோவுக்கு மேல் வெடி பொருட்கள் இருப்பு வைக்கக் கூடாது. ஆனால், பண்டிகை நேரத்தில் சில்லறை விற்பனை தேவை அதிகம் இருப்பதால் மத்திய அரசின் 1984-ம் ஆண்டு உத்தரவின்படி சில்லறை கடைகளுக்கிடையே மூன்று மீட்டர் இடைவெளி போதும் என்று விதி தளர்த்தப்பட்டது.
இந்த விதிகளை மேலும் தளர்த்தக் கோரி ஒருசாராரும், பாரிமுனையின் தெருக்களில் பட்டாசு விற்கக் கூடாது என்று ஒருவரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், விதிகளை தளர்த்த முடியாது; அதிகாரிகள் வெடிபொருள் சட்டத்தைக் கறாராக அமல்படுத்த வேண்டும் என்று 2006-ல் உத்தரவிட்டது. தேவை எனில் வேறு சில பொது மைதானங்களை அரசு உரிமம் வழங்கி அங்கு பட்டாசு விற்கலாம் என்றும் தெரிவித்தது.
இன்று தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் நடத்த உரிமம் வழங்கும் உரிமையை தனிநபர் ஒருவரின் கொள்ளைக்கு விட்டதோடு வெடி பொருள் சட்ட விதிகளும், உயர் நீதிமன்ற உத்தரவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வெடிமருந்து விதிகள் எல்லாம் காற்றில் பறக்க வெடிச் சத்தம் காதைத் பிளக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT