Published : 10 Jun 2016 09:16 AM
Last Updated : 10 Jun 2016 09:16 AM
புத்தக வாசிப்புக்கும் அகமண முறைக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. என்ன சாதி, அதில் என்ன உட்பிரிவு, என்ன குலம் என்றெல்லாம் பார்த்துத் தங்களுடன் பொருந்திவந்தால் மட்டுமே திருமண உறவை ஏற்படுத்திக்கொள்வார்கள். மாற்றுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பொருட்படுத்தக்கூட மாட்டார்கள். வாசிப்பிலும்கூடப் பலர் இதே முறையைத்தான் கையாண்டுவருகிறார்கள்.
ஒருவர் இடதுசாரி என்றால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ என்று தொடங்கி ஒரு கறாரான வரிசையை ஏற்படுத்திக்கொள்வார். இந்த மூலஆசான் களின் கோட்பாடுகளை முன்வைத்து விவாதிக்கும் சிந்தனையாளர் களை மட்டுமே அவர் வாசிப்பார். மற்றவர்களை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார். வலதுசாரியும் இவ்வாறே ஒரு கோட்டைக் கிழித்துக்கொண்டு அதை மிகக் கவனமாகப் பின்பற்றுவார்.
பொன்விதி
சற்றே நெருங்கி வந்து விவாதிப்போம். ராஜாஜி, திலகர், லஜபதி ராய், ராஜேந்திரபிரசாத் போன்றவர்களை ஓர் இடதுசாரி மனம் திறந்து வாசிப்பார் என்றா நினைக்கிறீர்கள்? மூலதனம் வரை போக வேண்டாம்; இருப்பதிலேயே எளிமையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஒரு வலதுசாரி பிரித்தாவது பார்ப்பாரா?
காந்தியைப் படித்துப் பார்த்திருக்கிறேன்.. அவருடைய இன்னின்ன கருத்துகளோடு என்னால் உடன்பட முடியவில்லை என்றோ மார்க்ஸியத்தை நிராகரிப்பதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் உள்ளன என்றோ ஒருவர் தரவுகளை அடுக்கிக்காட்டி வாதிடலாம். ஆனால், இங்கு பலர் இப்படித் தர்க்கரீதியாக ஒரு சித்தாந்தத்தை ஏற்பதோ நிராகரிப்பதோ இல்லை.
நான் ஏன் ராஜாஜியை அல்லது விவேகானந்தரைப் படிக்க வேண்டும் என்றும் நான் ஏன் பெரியாரை அல்லது ஸ்டாலினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும்தான் வாதிடுகிறார்கள். அதாவது, ஒருவர் இடதுசாரியாக அல்லது வலதுசாரியாக இருப்பதாலேயே அவர் சில விஷயங்களைப் படிக்கலாம் அல்லது படிக்க வேண்டாம் என்பதாக ஆகிவிடுகிறது. ஒருவர் எதையெல்லாம் ஏற்க வேண்டும், எதையெல்லாம் மறுக்க வேண்டும் என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. இந்த முடிவைச் சம்பந்தப்பட்டவர் என்றென்றைக்குமான ஒரு பொன்விதியாக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் தன் கதவுகளைச் சிலருக்குத் திறந்துவிடுகிறார், சிலருக்கு மூடியே வைக்கிறார். அகமண முறையோடு வாசிப்பை முடிச்சுப்போட வேண்டிய அவசியம் ஏற்படுவது இந்த இறுக்கமான மனநிலையால்தான்.
இந்த மனநிலையுடன்கூடிய வாசிப்பு ஒருபோதும் முழுமையான பார்வையைத் தந்துவிடாது. நாம் கொண்டாடும் சிந்தனையாளர்கள் யாரும் இப்படி இருந்ததில்லை. அம்பேத்கர் இடது அரசியலை நிராகரித்தவர் என்றபோதும் இறுதிவரை அவர் கார்ல் மார்க்ஸுடன் உரையாடிக்கொண்டிருந்தார். வலதுசாரி பொருளாதார அறிஞர்களையும் கற்பனா வாதத் தத்துவவியலாளர்களையும் மார்க்ஸ் ஆழமாகக் கற்றிருந்ததோடு கிறிஸ்தவத் தையும் பண்டைய மதங்களையும் அவர் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத் தினார். நல்ல இலக்கியப் பரிச்சயமும் அவருக்கு இருந்தது. தன்னுடைய விரிவான, ஆழமான வாசிப்பின் முடிவில்தான் மார்க்ஸ் கம்யூனிஸத்தைக் கண்டடைந்தார். இந்த முடிவுக்கு வந்து சேர்ந்த பிறகும், அவர் முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் படைப்புகளை ஊன்றி வாசித்துக்கொண்டுதான் இருந்தார்.
ஏற்பும் நிராகரிப்பும்
நம்மில் பலர் இதனைத் தலைகீழாகச் செய்துவருகிறோம். ‘எதிர் முகாம்’ எழுத்துகளை வாசிக்காமலேயே, அவற்றை முதலில் நிராகரித்துவிடுகிறோம். ஓரளவுக்குக்கூட பரிச்சயமில்லாமல், ஒரு சிறு அறிமுகத்தைக்கூட ஏற்படுத்திக் கொள்ளாமல், ஒரு கோட்பாட்டை போகிறபோக்கில் புறக்கணிப்பதோடு, அதை எள்ளி நகையாடவும் செய்கிறோம்.
பங்குச்சந்தை மோசமானது என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு நகர்ந்து சென்றுவிடுவது சரியல்ல. பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது, அதன் அடிப்படைகள் என்ன என்பதை வாசித்துக் கற்க வேண்டும். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி, பாசிசம் ஆபத்தான சித்தாந்தம் என்றெல்லாம் வெறுமனே தீர்ப்பெழுதிவிட்டு ஒதுங்கிப்போவதற்குப் பதில், இஸ்ரேலின் வரலாற்றை ஆழமாகக் கற்க முன்வர வேண்டும். ஜெர்மனி ஏன் ஹிட்லர் போன்ற ஒருவரை உற்பத்தி செய்தது என்பதை ஆராய வேண்டும். பாசிசம் ஏன் ஆபத்தானது, வரலாற்றில் அது வகித்த பாத்திரம் என்ன என்பதைத் தேடிப்பிடித்துக் கற்க வேண்டும்.
வாசிக்காமலேயே நிராகரிப்பதைக் காட்டிலும் சிக்கலானது, வாசிக்காமலேயே ஏற்பது. எல்லா விதமான கருத்துகளையும் படித்து உள்வாங்கி, அலசி ஆராய்ந்து தனக்கான ஒரு சரியான கருத்தாக்கத்தை அல்லது கோட்பாட்டை வரித்துக்கொள்வதே சரியான அணுகுமுறை. இதுவே அறிவியல்பூர் வமானதும்கூட.
இன்னொன்றோடு மோதிக்கொள்ளும் போதுதான், அதை எதிர்த்துப் போராடும் போதுதான் ஒரு கருத்து வளர்கிறது, வலுவடைகிறது. அதற்காகவேனும் நாம் நமது கூடுகளை உடைத்துக்கொண்டு, திறந்த மனத்துடன் வாசிப்பை விரிவாக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்யும்போது இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. நம்முடைய கருத்து தவறானதாக இருந்தால் உதறித்தள்ளிவிட்டு நம்மை மாற்றிக்கொள்ளலாம். சரியாக இருந்து விட்டால் மேலதிக உறுதியுடனும் நேர்மையுடனும் அதனைப் பற்றிக்கொள்ளலாம்.
- மருதன், எழுத்தாளர்,
தொடர்புக்கு : marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT