Published : 23 Sep 2016 10:02 AM
Last Updated : 23 Sep 2016 10:02 AM
உத்தரப் பிரதேசத்தை அரசாங்கம் ஆளவில்லை; மாறாக ஒரு குடும்பமே ஆள்கிறது - ராகுல் காந்தி
ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினைகள் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் உலுக்குகிறது. உண்மையில், இந்திய ஜனநாயகம் யார் கையில் இருக்கிறது என்பதையும் அது பளிச் என்று காட்டுகிறது.
2012 மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதி களில் 224-ல் வென்றது சமாஜ்வாடி கட்சி. எல்லோரும் கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் முதல்வர் நாற்காலியில் உட்காருவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக அறிவித்தார் முலாயம். பிரச்சினை அப்போதே தொடங்கிவிட்டது.
ஐந்து அதிகார மையங்கள்
முலாயம் கையில் முழு அதிகாரமும் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தி லேயே சமாஜ்வாடி கட்சியில் ஐந்து அதிகார மையங்கள் உண்டு. முதலாவது, முலாயம். இரண்டாவது, அவருடைய இரண்டாவது மனைவி. மூன்றாவது, முலாயமின் தம்பி ஷிவ்பால். நான்காவது, முலாயமின் நெருக்கமான கூட்டாளியும் சமாஜ்வாடி கட்சியின் முஸ்லிம் ஓட்டு வங்கியுமான ஆஸம்கான். ஐந்தாவது, டெல்லியில் சமாஜ்வாடி கட்சியின் பேரங்களை நடத்துபவரான அமர் சிங் (இடையில் கொஞ்ச காலம் ‘வெளியே’ இருந்த அமர் சிங், இப்போது மீண்டும் தன் இடத்தைப் பிடித்துவிட்டார்). முலாயமின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் அகிலேஷ். முதல்வர் நாற்காலியில் அவர் அமர்ந்தபோது, கட்சியின் அதிகார மையங்களில் மேலும் ஒன்று கூடியது.
நாளாவட்டத்தில் கட்சிக்குள் இந்த அதிகார மையங்களுக்கு இடையிலான போட்டி அதிகமானது. இதில் முக்கியப் பங்கு வகித்தார் ஷிவ்பால். முதல்வருக்கு அடுத்து இவருக்குத்தான் அதிக துறைகள் மொத்தம் 10 துறைகள். கட்சியிலும் அவர் கையே ஓங்கியது. தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் சித்தப்பா தடுக்கிறார் என்று அகிலேஷ் கோபப்பட்டார். ஆனால், அப்பாவை மீறி சித்தப்பா விஷயத்தில் அவரால் தலையிட முடியவில்லை.
கொதிநிலையில் உத்தரப் பிரதேசம்
கட்சியிலும் அரசியலிலும் முலாயம் குடும்பத்தவர்கள் ஏராளமான பதவிகளைத் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டனர். அத்துடன், மாநில அதிகாரிகள் அகிலேஷையும் பொருட்படுத்தாமல், ஷிவ்பாலையும் பொருட்படுத்தாமல் நிர்வாகத்தில் மெத்தனமாக இருக்கத் தொடங்கினர். வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. இதன் விளைவாகத்தான் மக்களவைப் பொதுத் தேர்தலில் சமாஜ்வாடி பெருத்த தோல்வியைச் சந்தித்தது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73-ல் வென்றது. ஆளும் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
ஆனால், முலாயம் சிங் அப்படி நினைக்கவில்லை. தம்பி ஷிவ்பாலின் யோசனையைக் கேட்காமல், அகிலேஷ் செயல்படுவதே கட்சியின் பின்னடைவுக்குக் காரணம் என்று கருதினார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இப்போது எல்லாக் கட்சிகளின் பார்வையும் உத்தரப் பிரதேசத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. 27 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவேன் என்று களம் இறங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. பாஜக ஒருபுறம், பகுஜன் சமாஜ் ஒருபுறம் என்று ஆளுக்கொரு வியூகத்தோடு இறங்க, கொதிநிலையில் இருக்கிறது மாநிலம்.
முலாயமின் கட்டப் பஞ்சாயத்து
இந்நிலையில், ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைக்க கட்சிக்குள் தன் பிடியை இறுக்கிக்கொள்வது முக்கியம் என்று உணர்ந்த அகிலேஷ், காய்களை நகர்த்த ஆரம்பித்தார். தன்னை மதிக்காத, ஷிவ்பால் செல்வாக்கால் தலைமைச் செயலாளர் ஆன தீபக் சிங்காலை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார் அகிலேஷ். அடுத்து, ஷிவ்பால் வசமிருந்த துறைகள் சிலவற்றைப் பறித்தார். உடனே, ஷிவ்பால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகத் தன் அண்ணனிடம் தெரிவித்தார். முலாயம் கடுப்பானார். கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகிலேஷை நீக்கியவர், அந்தப் பதவியில் ஷிவ்பாலை உட்கார வைத்தார்.
“அரசியலில் நான் செல்வாக்கு பெற தம்பி ஷிவ்பால் சிங், அமர் சிங், பல்ராம் யாதவ், காயத்ரி பிரசாத் பிரஜாபதி போன்ற பலருடைய உழைப்பும் ஆலோசனையும் ஆதரவும்தான் காரணம். காங்கிரஸ் அரசு என்னை அரசியல்ரீதியாகப் பழிவாங்க சி.பி.ஐ. மூலம் சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்தபோது, என்னைவிட்டு எல்லோரும் விலகினர். அமர் சிங் மட்டுமே எதற்கும் அஞ்சாமல் என்னுடன் இருந்தார். இவர்களை அலட்சியப்படுத்தினால் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. என்னுடைய மூச்சு இருக்கும்வரை இவர்களை விட்டுத்தர முடியாது. நீ என் மகன் என்பதாலேயே முதலமைச்சர். எந்தக் காரணத்தால் நீ முதலமைச்சரோ, அதே காரணத்தாலேயே அதாவது, என் தம்பி என்பதாலேயே - ஷிவ்பால் அமைச்சர். ஷிவ்பாலின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவது உன்னுடைய இருப்பையே கேள்விக் குள்ளாக்கிக்கொள்வதற்குச் சமம்” - இது முலாயமின் கட்டப் பஞ்சாயத்து நியாயம்.
ஒரு குடும்பத்தின் ஆட்சி
ஆக, முலாயமின் பஞ்சாயத்தைத் தொடர்ந்து, இருவரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். தக்கதொரு தருணத்துக்காகக் காத்திருக்கின்றனர். சமீபத்திய அதிரடி, அகிலேஷுக்கு நெருக்கமான, ராஜேந்திர சவுத்ரியைக் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் ஷிவ்பால். அதேபோல, அகிலேஷால் கட்சியின் இளைஞர் அமைப்புகளுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் பதவி களிலிருந்து நீக்கிவிட்டார் ஷிவ்பால். அந்த மூவரில் ஒருவர் ராம் கோபால் யாதவின் சகோதரி மகன். ராம் கோபால் யாதவ் யார் என்கிறீர்களா, முலாயமின் இன்னொரு தம்பி, பேராசிரியர் என்று அழைக்கப்படுபவர். குடும்பத்திலேயே அதிகம் படித்தவர். மாநிலங்களவை உறுப்பினர். அடுத்து, அகிலேஷ் என்ன செய்வார் என்று மறுநாள் பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் உத்தரப் பிரதேச மக்கள்.
இப்போது அங்கு சூறாவளிப் பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி, “உத்தரப் பிரதேசத்தை அரசாங்கம் ஆளவில்லை; மாறாக ஒரு குடும்பமே ஆள்கிறது” என்று சொல்லியிருக்கிறார். அது சரிதான். இதைச் சொல்வது யார் தெரிகிறதா? வாழ்க ஜனநாயகம்!
வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT