Last Updated : 09 Nov, 2014 11:06 AM

 

Published : 09 Nov 2014 11:06 AM
Last Updated : 09 Nov 2014 11:06 AM

பெர்லின் சுவரைத் தகர்த்தெறிந்த சகோதரத்துவம்

சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சரித்திரச் சம்பவம் இது. மனிதர்களின் உறவுப் பாலங்களை அறுக்கும் வகையில், ஜெர்மனியின் குறுக்கே நின்றிருந்த அந்தத் தடுப்புச் சுவர் தகர்க்கப்பட்டது இந்த நாளில்தான். ஒரு சுவரால் பிரிக்கப்பட்டு, இரண்டாகப் பிரிந்துகிடந்த ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்த மறக்க முடியாத நிகழ்வு.

இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்த ஜெர்மனியை, பிற வல்லரசுகள் ராட்சசனாகவே பார்த்தன. எனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி மீண்டும் பலம் பெறக் கூடாது என்று நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய 4 பெரிய வல்லரசுகள் அந் நாட்டைக் கூறுபோட்டன. சோவியத் யூனியனைத் தவிர்த்த பிற நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றாக்கி நிர்வகித்தன. அதுதான் மேற்கு ஜெர்மனி. சோவியத் யூனியனின் பொறுப்பில் இருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவினை அத்தோடு நிற்கவில்லை, தலைநகர் பெர்லினும் பாகம் பிரிக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் சோவியத் வசம் வந்தது.

எப்படி எழுந்தது சுவர்?

கிழக்கு ஜெர்மனியில் இருந்தவர்கள் சோவியத்தின் அடக்கியாளும் போக்கை விரும்ப வில்லை. கிழக்கு ஜெர்மனியில் நிலங்களும் தொழிற்சாலைகளும் அரசுடமை யாக்கப்பட்டன. சொகுசு வாழ்க்கை, கேளிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தங்கள் வளர்ச்சி, குழந்தைகளின் எதிர்காலக் கல்வி போன்றவற்றை உத்தேசித்து ஏராளமானோர் மேற்கு ஜெர்மனிக்கும் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல விரும்பினர். இந்த எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்தது. இதைத் தடுப்பதற்காக, கிழக்கு ஜெர்மனியின் நில எல்லைக்குள்ளாகவே பெரிய தடுப்பை ஏற்படுத்தும் பணி 13.8.1961-ல் தொடங்கியது.

தொடக்கத்தில் பெரிய சுவராக எழுப்பப்படவில்லை. முதலில் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டது. பிறகு, 1962-65 காலத்தில் அந்த வேலியே வலுவாக அமைக்கப்பட்டது. பிறகு கான்கிரீட் சுவராக 1965-75 காலத்தில் கட்டி முடிக்கப் பட்டது. பிறகு, அதுவே எல்லைப்புறச் சுவராக 1975-89-ல் மேம்படுத்தப்பட்டது. சுவரின் உயரம் 12 அடி, அகலம் 3.9 அடி. யாரும் சுவரைத் தாண்டிவிடாமலிருக்கவும் சுவரைத் துளைக்காமலிருக்கவும் 116 காவல்கோபுரங்களும், சுவர் பாதுகாப்பு வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க 20 பதுங்கு குழிபோன்ற சுரங்க அறைகளும் கட்டப்பட்டன.

சோவியத் சொன்ன காரணம்

மேற்கிலிருந்து சதிகாரர்களும் முதலாளித்துவ ஏஜெண்டு களும் பாசிஸ்டுகளும் கிழக்குப் பகுதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சுவரை எழுப்பியதாக சோவியத் யூனியன் கூறியது. கிழக்கு ஜெர்மனியில் பொதுவிநியோக முறையில் தாங்கள் வழங்கும் கோதுமை, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலை மலிவாக இருப்பதால், மேற்கிலிருந்து வந்து வாங்கிவிடுவார்கள் என்றும் காரணம் சொன்னது. மேற்கு ஜெர்மனிக்காரர்களோ அதை அவமானச் சுவர் என்று அழைத்தார்கள். சகோதரர்களைப் பிரித்துவைக்கும் கொடுஞ் சுவர் அது என்று சாடினார்கள்.

கிழக்கு ஜெர்மானியர்கள் எப்படியாவது கடவுச் சீட்டு பெற்று, மேற்கு ஜெர்மனிக்குச் செல்வார்கள். அவர்கள் அங்கே நீண்ட காலம் தங்கிவிடக் கூடாது என்பதற்காகக் கைச்செலவுக்கு மிகக் குறைந்த தொகையை மட்டுமே கிழக்கு ஜெர்மனி அதிகாரிகள் அனுமதிப்பார்கள். கிழக்கத் தியர்கள் பணமில்லாமல் அவதிப்படுவதைப் பார்த்து மேற்கு ஜெர்மானியர்கள் தங்களுக்குள் நிதி வசூலித்து ஒரு தொகையைத் தயாராக வைத்திருப்பார்கள். கிழக்கு ஜெர்மனியிலிருந்து யார் வந்தாலும் அவருடைய கைச் செலவுக்குக் கணிசமாகப் பணத்தைத் தந்து உபசரிப்பார்கள். இப்படியாக, சுவர் கட்டப்படுவதற்குள் கிழக்கு ஜெர்மனி யிலிருந்து 35 லட்சம் பேர் தப்பியோடிவிட்டார்கள். அதன் பிறகும் 5,000 பேர் முயற்சி செய்தார்கள். காவல் படையினர் சுட்டு 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

மாற்றத்தின் விதை

80-களின் இறுதியில், உலக அளவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியன் சிதறுண்டது. கிழக்கு ஜெர்மனி மீது அதற்கிருந்த அதிகாரமும் குறைந்தது. கிழக்கு ஜெர்மானியர்கள் அப்போதும்கூட மேற்கு ஜெர்மனிக்குப் போக அனுமதி வேண்டும் என்றுதான் சுவருக்கு அருகே நெடுகிலும் நின்று கிளர்ச்சி செய்தனர். அவர்களை யாரும் தடுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளும் கிழக்கு ஜெர்மானியர்களின் கோரிக்கையை ஆதரித்தன. வேறு வழியில்லாமல் பாதைகளைத் திறந்துவிட முடிவு செய்தது கிழக்கு ஜெர்மனி.

அதே சமயம், மேற்கு பெர்லினில் இருந்தவர்கள் சுவருக்கு அப்பால் இருந்துகொண்டு இவர்களை ஊக்கப் படுத்தினார்கள். இவர்களை வரவேற்க ஷாம்பெய்ன் பாட்டிலுடன் திரண்டார்கள். படுவேகமாக வளர்ந்த இந்தக் கிளர்ச்சி, 1989 நவம்பர் 9-ம் தேதி முடிவுக்கு வந்தது. அன்று தான் அடையாளபூர்வமாகத் தகர்க்கப்பட்டது பெர்லின் சுவர். கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்தன. ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதியை ஜெர்மானியர்கள் ஒற்றுமை நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்தச் சுவர் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலான எல்லைகளும் கோடுகளும்கூட நாமாகப் போட்டுக்கொண்டவைதான். அந்தக் கோடுகளையே நில எல்லைகளாகக் கருதி உணர்ச்சிவசப்பட்டுப் போரிடுகிறோம். இரண்டு போர்களுக்குக் காரணமாக இருந்த ஜெர்மனி, பெர்லின் சுவர் உடைப்பு மூலம் உலகுக்குக் கற்றுத்தந்த ஒப்பற்ற பாடம், சகோதரத்துவம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x