Published : 19 Sep 2016 09:14 AM
Last Updated : 19 Sep 2016 09:14 AM
பெரியார் தொடங்கிய சமூக நீதிக்கான போராட்டங்களின் நியாயங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
சேலத்தில் பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் (1971) கடவுள்களை அவமதிக்கும் படங்கள் எடுத்துவரப்பட்டதாக எதிர்ப்புகள் வந்தன. பல ஊர்களில் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும், அவரது ‘கொள்கை எதிரிகள்’ எதிர்ப்புக் காட்டியபோது, பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘எனது படத்தைச் செருப்பால் அடிக்க விரும்புவோருக்குப் பாதி விலையில் இரண்டையும் அனுப்பித் தருகிறேன். நன்றாக அடியுங்கள்; இந்த எதிர்ப்பின் வழியாகவே எனது கருத்துகள் மக்களைச் சென்றடையும்’ என்றார்.
சமூக மாற்றத்துக்கு உண்மையாகத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட தலைவர். முதலில் ‘சுய புகழ்ச்சி’ மறுப்பாளராக வேண்டும் என்பதே பெரியாரின் தலைமைப் பண்புக்கான மையம். உச்ச நீதிமன்றங்களே திணறிப்போகும் அளவுக்கு அவதூறு வழக்குகள் குவிந்துகொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலில், பெரியாரின் இந்த ‘சுய புகழ்ச்சி’ மறுப்பு இன்றைக்கு நாம் கவனிக்க வேண்டியது. அது மட்டுமல்ல; ‘சுய சாதி மறுப்பு’, சுய குடும்ப நலன் மறுப்பு’ தலைவராகவும் அவர் நிமிர்ந்து நின்றார்.
உரையாடலின் வடிவங்கள்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் களுக்குமான உரிமைகளை உறுதிசெய்வதே உண்மையான ஜனநாயகம் என்று கூறிய பெரியார், அந்த மக்களின் உரிமைகளைப் பிடிவாதமாக மறுத்த ஆதிக்க சக்திகளிடம் நடத்திய உரையாடலே கிளர்ச்சிகளாகவும், இயக்கங்களாகவும், சுற்றுப் பயணங்களாகவும் வடிவம் பெற்றன.
“நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத்தான் ஆக வேண்டும் என்பதுபோல், எனக்கு தொண்டைக் குரல் உள்ள வரை பேசியாக வேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும்” என்றார் பெரியார்.
அந்த உரையாடல்களில் சமரசமற்ற அழுத்தமான சொற்கள் வெடித்துக் கிளம்பின. அனல் வீசிய அவரது சொல்லாடல்களில், உரையாடல்களுக்கான களத்தை விரைவுபடுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருந்தது. அவரது பேச்சு, எழுத்துகளை ஊன்றிப் படித்தால் இதை உணர முடியும். அந்தக் களத்தை உயிர்த் துடிப்புடன் நீடித்திருக்கவே கொள்கைகளில் சமரசமற்ற நிலையையும் நடைமுறையில் விட்டுக்கொடுத்தல்களையும் அவர் மேற் கொண்டிருந்ததை வரலாறு நெடுக நாம் காண முடிகிறது.
சாதி அமைப்பே எதிரி
பெண் - ஆண், கீழ் சாதி - உயர் சாதி, ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடுகளுக்கு எதிராக அவர் இயக்கங்கள் நடத்தினார். இந்தப் பாகுபாடுகளுக்கு முதன்மையான எதிரியாக அவர் சாதியமைப்பை அடையாளம் கண்டார். அதனைப் புனிதப்படுத்தும் நிறுவனங்கள், சடங்குகள், பண்டிகைகளைப் புறக்கணிக்க மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
புனையப்பட்ட புராணங்கள் வழியாக அறிமுகமான பண்டிகைகள், சடங்குகளின் உள்ளடக்கங்களை அவர் கேள்வி கேட்டார். “தேவர்கள் என்ற உயர் குலத்தோர், அசுரர்கள் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை அழித்தொழிப்பதை நியாயப்படுத்துவதை எப்படிக் கொண்டாட முடியும்?” என்று அவர் கேட்டது பலருக்கும் கசப்பாகவே இருந்தது. மக்கள் அதன் கொண்டாட்டங்களில் மட்டும் மூழ்கினார்களே தவிர, உள்ளடக்கம் பற்றிச் சிந்திக்கவில்லை. இப்போது கேரளத்தில் ஓணம் பண்டிகையை ‘வாமன ஜெயந்தி’யாக மட்டுமே கொண்டாட வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷாவும், ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ ஏடான ‘கேசரி’யும் வற்புறுத்து கிறார்கள்.
உயர் சாதிக்கு மட்டுமா ஓணம்?
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து, மாபலி எனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அசுரனைத் தனது இடது காலால் மிதித்து பாதாளத்துக்குள் அழுத்தினார். ஆனால், மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய அசுரன் மாபலி, மீண்டும் கேரளாவுக்கு வருவதை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் மலையாள மக்கள். இதுவே ஓணம் பண்டிகையின் ஐதீகம். ஆனால், அசுரர் களைக் கொண்டாடாதே! அழிக்க வந்த அவதாரத்தைக் கொண்டாடுங்கள் என்று பாஜக - ஆர்எஸ்எஸ் தலைமை கட்டளையிடுகிறது.
“ஓணம் உயர் சாதிக்கே சொந்தமானது என்று மரபை மாற்றும் இந்த முயற்சியை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார், பண்டிகைகளின் உள்ளடக்கத்தைக் கேள்வி கேட்டதற்கான நியாயம் இப்போது புரிந் திருக்கும்.
போராட்டங்களின் நியாயம்
பெரியார் தொடங்கிய சமூக நீதிக்கான போராட்டங்களின் நியாயங்கள் இப்போதும் உணரப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங் களில் சமூகநீதி வேண்டும் என்ற உரிமைக் குரல் கேட்கிறது.
பெண்களை ஒடுக்கும் தேவதாசி முறை, குழந்தைகள் திருமண முறைகளுக்கு எதிராகச் சட்டங்கள் வந்தபோது வைதீகர்கள் எதிர்த்தார்கள். பெரியாரோ அச்சட்டங்களை அழுத்தமாக ஆதரித்தார். இப்போது வேறு ஒரு பெண்ணின் கருவைச் சுமந்து குழந்தைகள் பெற்றுத் தருவதற்கான ‘வாடகைத் தாய் மார்க’ளையே ஆட்சியாளர்கள் ஏற்கும் காலம் வந்துவிட்டது.
இப்போதைய தேவை பெரியார் படத்தைப் போடுவதோ, அவருக்குச் சிலைகள் வைப்பதோ அல்ல, அவர் வழி நடத்திய பாதையில் பயணிக்க இளைய தலைமுறை தயாராக வேண்டும் என்பதுதான்!
பெரியார் காலமெல்லாம் முடிந்துவிட்டது என்று பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் சிலர்.
சாதியும் சமூக அநீதியும் இந்தியாவில் தொடரும் வரை பெரியார் உயிரோட்டமாக இங்கு இருப்பார். உலகில் சமத்துவத்துக்கான கடைசிக் குரலுக்கு மதிப்பிருக்கும் வரை அவர் நினைவுகூரப்படுவார்.
- விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சி பெரியார் முழக்கம்’ இதழாசிரியர், தொடர்புக்கு: viduthalaikr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT