Published : 30 Jul 2016 10:03 AM
Last Updated : 30 Jul 2016 10:03 AM
ஆதிவாசி மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்துவந்த வங்க மொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மறைந்துவிட்டார். மேற்கு வங்காளம், ஒடிசா, பீஹார் மாநிலங்களில் வசித்துவரும் ஆதிவாசிகள், அதிகாரத்தின் இரும்புக் கரங்களாலும் சமூக அடுக்கின் அழுத்தத்தாலும் முடக்கப்படுவதைத் தனது எழுத்துகளில் தொடர்ந்து பதிவுசெய்துவந்தவர் அவர். ஆதிவாசிகளும் விலங்குகளும்தான் வனத்தின் உரிமையாளர்கள் எனும் உண்மை மறக்கடிக்கப்பட்டு, யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும் மனிதனின் வாழ்விடத்தில் அத்துமீறி நுழைவதாகவே அன்றாடம் செய்திகள் வெளியாகின்றன. ஆதிவாசிகள், வனவிலங்குகளின் வசிப்பிடங்களை, உரிமைகளைப் பறித்து, அவர்களைக் குற்றவாளிகளாக மாற்றியுள்ள சமூகம்தான் நமது ‘நாகரிக’ச் சமூகம். இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தவர் மஹாஸ்வேதா தேவி.
ஆதிவாசிகளால் ‘தாய்’ என்று உணர்வுபூர்வமாக அழைக்கப்பட்டவர்கள் இருவர். முதலாமவர், மகாராஷ்டிரத்தின் வார்லி ஆதிவாசிகளின் விடியலுக்காக வாழ்நாள் முழுவதையும் செலவழித்த கோதாவரி பருலேகர். மற்றொருவர், மஹாஸ்வேதா தேவி.
உரிமைக் குரல்
1926 ஜனவரி 14 டாக்கா நகரில் பிறந்தார். தந்தை மணீஷ் கட்டாக், தாய் தரித்ரி தேவி இருவருமே வங்காளக் கவிதை உலகில் புகழ்பெற்றவர்கள். இந்தியத் திரைப்பட உலகின் மேதைகளில் ஒருவரான ரித்விக் கட்டக், அவரது சித்தப்பா. தாகூரின் சாந்தி நிகேதனில் படித்த மஹாஸ்வேதா தேவி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது கணவர் பிஜோன் பட்டாச்சார்யா நவீன வங்காள நாடக உலகின் பிரம்மாக்களில் ஒருவர். இந்திய மக்கள் நாடகக் கழகத்தைத் தோற்றுவித்ததில் பெரும் பங்காற்றியவர். இந்தத் தம்பதியின் மகன் நபரூபன் பட்டாச்சார்யாவும் புகழ்பெற்ற நாவலாசிரியர்.
பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே, ஆதிவாசி களின் வாழ்நிலைக்கான போராட்டத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் என்று விளிம்புநிலை மக்களின் வாழ்வைத் தனது சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்தார். ஆதிவாசி மக்களின் வாழ்க்கையை அவர்களோடு வாழ்ந்து அனுபவித்து, அவர்களின் ஆசைகளை, ஏக்கங்களை, தேவைகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தியவர் அவர். அம்மக்களின் நல்வாழ்வுக்காக மேற்கு வங்காளம், ஒடிசா, பிஹார் மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வழிநடத்திவந்தார். ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் குறித்த இயக்கங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் நடைபெற்றாலும் அவற்றில் மஹாஸ்வேதாவின் பங்கு இருக்கும். பத்ம விபூஷண், ராமேன் மகசசே, சாகித்ய அகாடமி, ஞானபீடம், சாந்தி நிகேதனின் தேசிகோத்தமா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற மஹாஸ்வேதா தேவி, எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
திரை வடிவங்கள்
பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது படைப்புகள் திரைப்படங்களாகவும் உருப்பெற்றுள்ளன. திலிப் குமார், வைஜெயந்திமாலா நடிப்பில் 1968-ல் வெளியான ‘சங்கர்ஷ்’ எனும் இந்தித் திரைப்படம், அவர் எழுதிய ‘லாய்லி அஸ்மனேர் அய்னா’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அவர் எழுதிய ‘ஹஜார் சவுரஷீர் மா’ எனும் நாவலைத் தழுவி, ‘ஹஜார் சௌராசி கி மா’ (1998) எனும் இந்தித் திரைப்படத்தை கோவிந்த் நிஹ்லானி உருவாக்கினார். நக்சலைட் இயக்கத்தில் ஈடுபடும் தனது மகனின் செயல்களுக்குப் பின்னால் இருந்த நியாயத்தை உணர முயற்சிக்கும் தாயின் உணர்ச்சிப் போராட்டங்களை விவரிக்கும் கதை அது. ராஜஸ்தானில் உயர் சாதி ஆண்களின் இறுதிச் சடங்கில் ஒப்பாரி வைக்கும் தொழில்முறைப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘ருடாலி’ எனும் அவரது சிறுகதையை அதே பெயரில் இந்தித் திரைப்படமாக உருவாக்கினார் கல்பனா லஜ்மி. சமூகத்தில் பெண்களின் உரிமைகள் பற்றிய அவரது சிறுகதையான ‘சோளி கே பீச்சே’ இத்தாலிய இயக்குநர் இடாலோ ஸ்பினெலியால் ‘கங்கோர்’ எனும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
மஹாஸ்வேதா தேவி எழுதிய ‘ஆரண்யேர் அதிகார்’(வனத்துக்கான உரிமை) எனும் வங்காள மொழி நாவலுக்கு 1979-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகளின் தலைவர் பிர்ஸா முண்டாவின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது அந்நாவல்.
வார்த்தையே வாழ்க்கை
காடுகளையே தங்கள் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சினைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மைப் பதறச் செய்பவை. சமூகமும், அரசும் எதற்கும் பொறுப்பேற்காமல் கண் மூடி நிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை அவரது எழுத்துக்கள் வீரியமாக வெளிப்படுத்தின.
தான் சந்தித்த, புறக்கணிப்புக்கும் அடக்குமுறைக்கும் ஆளான எளிய மக்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங் களையே தனது படைப்புகளில் வெளிக் கொணர்ந்ததாக அவர் கூறியிருக்கிறார். வெளியுலகுக்கு மிக எளிமையானதாகத் தோன்றும் ஒரு விஷயத்துக்குக் கூட ஆதிவாசிகள் எத்தகைய இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது பற்றி அவரது படைப்புகள் பேசின.
அடிப்படையில் ஓர் இடதுசாரியாக இருந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின்போது சிங்கூர், நந்திகிராம் நிலங்களைக் கையகப்படுத்த அரசு எடுத்த முயற்சிகளை எதிர்த்துக் களமிறங்கினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் மிகுந்த மதிப்பைப் பெற்றவராக இருந்தபோதிலும், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் சமூகச் செயல்பாட்டாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின்போது, மம்தா வெளியிட்ட கருத்துகளைக் கடுமையாகச் சாடியவர். தான் தலைமை வகித்த வங்காளி அகாடமி பரிந்துரைத்த எழுத்தாளர்களில் ஒருவருக்கு மட்டும் மாநில அரசு விருது வழங்க மறுத்தபோது, அதைக் கண்டித்து அந்தப் பதவியிலிருந்து விலகினார். வாழ்வு, எழுத்து, அரசியல் நிலைப்பாடு, சமூகப் பணி என்று அனைத்திலும் சமரசமற்ற போக்கைக் கொண்டிருந்த துணிச்சல்காரர் அவர்.
“காடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் எங்கே போவார்கள்… சாதாரண மக்கள்.. அவர்களின் சாதாரணமான கனவுகள்.. நக்சலைட்டுகளைப் போல.. அவர்களின் குற்றம் என்ன? அவர்கள் கனவு காணத் துணிந்ததுதான். ஏன்? அவர்கள் கனவுகூடக் காணக் கூடாதா?” என்று முழங்கியவர் அவர். இன்றும்கூட, ஆதிவாசிகளின் பிரதிநிதிகளாக, அவர்களுக்காகப் போராடும் சோனி சோரி (சத்தீஸ்கர்), இரோம் ஷர்மிளா (மணிப்பூர்), ஜானா (கேரளா) போன்ற ஏராளமான செயல்பாட்டாளர்கள் அதிகாரவர்க்கத்தால் வேட்டையாடப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். ஆதிவாசிகள் காலம் காலமாக வசித்துவரும் காட்டுப் பகுதிகளைப் பல்வேறு காரணங்களைக் கூறி ஆக்கிரமித்து வரும் நவீன ‘நாகரிக’ சமூகத்தினரிடையே ஆதிவாசிகளின் உரிமைகள், கனவுகள், தேவைகள் ஆகியவற்றை எழுத்தில் வடித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது அவர்களை உணரச் செய்தவர் மஹாஸ்வேதா தேவி.
“மிகச் சுருக்கமான வார்த்தைகள்; மகத்தான எளிமை. அவசியத்துக்கும் அவசியமற்றதற்கும் இடையே அவசியமற்றதைத் துச்சமெனத் தூக்கியெறிந்த தீர்க்கமான ஒரு வாழ்க்கையே மஹாஸ்வேதா தேவியின் வாழ்க்கை” என்றார் குஜராத் ஆதிவாசிகளுக்கான செயல்பாட்டாளர் கணேஷ் தவே. சத்தியமான வார்த்தைகள்!
- வீ.பா.கணேசன், எழுத்தாளர். | தொடர்புக்கு : vbganesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT