Published : 14 Sep 2016 09:42 AM
Last Updated : 14 Sep 2016 09:42 AM

மழை வந்ததும் தண்ணீர் பிரச்சினையை மறந்துவிடலாமா?

நீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் சுருங்கிவருவது, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் சவாலாகிவிடும்



தண்ணீர்ப் பிரச்சினை என்பது கோடைக் காலத்தில் மட்டும் பேசிவிட்டு மற்ற நேரங்களில் மறக்கக் கூடிய விஷயமா? மக்கள்தொகையில் பெரிய நாடாக விளங்குவதாலும், பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளதாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அதிகமான இன்னல்களை இந்தியா சந்திக்கும் என்ற எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ‘உலக வளங்கள் பற்றிய ஆராய்ச்சி மைய’த்தின் (The World Resources Institute) 2015-ம் ஆண்டு அறிக்கை, இந்தியாவின் 54% பகுதிகளில் வாழும் மக்கள் நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள் என்கிறது. உலக வங்கி அறிக்கைப்படி, ‘தற்போது தனி நபருக்கு ஓராண்டுக்குக் கிடைக்கக் கூடிய நீரின் அளவானது 1,588 கியூபிக் மீட்டரிலிருந்து, இன்னும் 15 ஆண்டுகளில் பாதிக்கும் கீழாகக் குறைந்துவிடும்’ என எச்சரிக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் உலக வங்கியால் வெளியிடப்பட்ட பருவநிலை மாற்றம், நீர் மற்றும் பொருளாதாரம் (High and Dry: Climate Change, Water and the Economy) அறிக்கை, ‘எந்தெந்த நாடுகளில் நீர்ப் பற்றாக்குறை உள்ளதோ, அவற்றின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் ஏறக்குறைய 6% வரை, வரும் 2050-ம் ஆண்டில் குறைய வாய்ப்பு’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது சொல்லுங்கள், தண்ணீர்ப் பிரச்சினை என்பது கோடைக் காலத்தில் மட்டும் பேசிவிட்டுப்போகிற விஷயமா?

மறக்க முடியாத நிகழ்வுகள்

நாட்டிலுள்ள அணைகளின் நீர் இருப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. மத்திய நீர்ப்பாசனத் துறை கடந்த ஜூலை 21-ம்தேதி வெளியிட்ட அறிக்கைப்படி, நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளில் மொத்த நீர் இருப்பு 54.419 பி.சி.எம் (பில்லியன் கியூபிக் மீட்டர்). ஆகும். சென்ற ஆண்டு இதே தேதியில் இருந்த நீர் இருப்பைவிட, இது 59.100 பி.சி.எம். குறைவு. வற்றாத ஜீவ நதிகளான கங்கை, கோதாவரி, கிருஷ்ணா கூட கடந்த ஆண்டு பல இடங்களில் வற்றிவிட்டன. உலகின் நிலத்தடி நீர் வளமிக்க ஆற்றுப் படுகைகளில் முன்வரிசையில் இருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீரின் அளவு ஓர் ஆண்டுக்கு 15-20 மி.மீ. குறைவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், நீர்ப்பரப்புப் பகுதியில் வண்டல் மண் சூழ்ந்துள்ள காரணத்தால், இதுவரையில் நம் நாட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர அணைகளின் மொத்தக் கொள்ளளவு கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய நீர்ப்பாசனத் துறையால் 2015-ல் வெளியிடப்பட்டுள்ள அணைகளில் வண்டல் மண் பாதிப்பு பற்றிய அறிக்கை (Compendium of Silting of Reservoirs in India) இதனைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

வரலாறு காணாத நடவடிக்கைகள்

கடந்த ஆண்டு 10 மாநிலங்களிலுள்ள 254 மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு உள்ளாகின. இந்தியாவின் 25% மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தில் விழுந்தார்கள். குறிப்பாக மகாராஷ்டிரம், குஜராத் மாநில மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தென்மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடும் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொண்டன. (அதன் தொடர்ச்சியே இன்றைய காவிரிப் பிரச்சினை.)

வறட்சியின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, வரலாறு காணாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. ஏறக்குறைய 300 கி.மீ. தொலைவிலிருந்து, ரயில்கள் மூலமாக ஐந்து லட்சம் லிட்டர் குடிநீரை மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்துக்குக் கொண்டுவந்து விநியோகித்தார்கள். குடிநீர்ப் பிரச்சினையால் மக்கள் கலவரத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டு, லத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீர்நிலைகளுக்கு அருகில் மக்கள் கூடுவதற்குக்கூடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இவற்றையெல்லாம் இன்று அரசும் சரி, பாதிக்கப்பட்ட மக்களும் சரி மறந்துவிட்டார்கள். தொலைக்காட்சிகளும் மறந்துவிட்டன.

விவசாயத்தின் போக்கு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விவசாயத் துறையைப் பெரிதும் நம்பியுள்ளதால், மற்ற நாடுகளைக் காட்டிலும், நாம் நீர்ப்பற்றாக் குறையைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. கடன்பட்டு வைத்த பயிருக்குத் தண்ணீர் இல்லாமல் மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். மராத்வாடா பகுதியிலுள்ள விவசாயிகள், தங்கள் ஊரைக் காலி செய்துவிட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காக நகரங்களில் தஞ்சம் புகுந்தனர். நீர்ப் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் சுருங்கிவருவது, நம் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் சவாலாகிவிடலாம்.

இந்தச் சூழலில், நாம் அனைவரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங்கின் தனி முயற்சியால், ராஜஸ்தான் மாநிலத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத நீர்நிலைகள் மராமத்து செய்யப்பட்டு, அவை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் நீர்நிலைகளைச் சரிசெய்து, அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் மழையின் அளவிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யும் நாட்கள் குறைந்துள்ளன. அதேநேரத்தில், இந்தியாவின் பல பகுதிகளில், ஓர் ஆண்டுக்குக் கிடைக்க வேண்டிய மொத்த மழையளவு ஓரிரு நாளில் பெய்துவிடுவதும் நடக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்குக்கும் இதுபோன்ற மழையே காரணம். இப்படிப்பட்ட சூழலில், நாம் அதிக அளவு நீரைச் சேமித்து வைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

சிறிய நீர்ப்பாசன ஆதாரங்கள் பற்றிய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறக்குறைய 6.42 லட்சம் குளங்கள், ஏரிகள் மற்றும் குட்டைகள் உள்ளன. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இவற்றின் நீர்க் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டது. சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன என மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றைப் பராமரிப்பு செய்யத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நீர்வரத்துப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, வண்டல் மண் படிவதால், தற்போது பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில், நீர்க் கொள்ளளவு குறைந்துகொண்டே வருகிறது. எனவே, அணைகளில் சூழ்ந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் அணைகளின் முறைகளிலும், மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

நீர்ப் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு வறுமை என்ற அரக்கனை எதிர்த்துப் போராட முடியாது. நீர் ஓர் அரிதான பொருளாக மாறிவருவதால், தண்ணீர் பிரச்சினையை இன்னமும் கோடைக் கால விவாதப் பொருளாக மட்டும் வைத்திருக்கக் கூடாது. மழைக் காலங்களில் நீரைச் சேமிப்பதற்கு மறக்காமல் தொடர் முயற்சிகளை அரசும் நாமும் சேர்ந்து எடுக்க வேண்டும். இது பேசுவதற்கல்ல, செயல்படுவதற்கான தருணம்!

- அ.நாராயணமூர்த்தி, காரைக்குடி அழகப்பா பல்கலையில் பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைத் தலைவர்.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x