Published : 22 Oct 2013 09:48 AM
Last Updated : 22 Oct 2013 09:48 AM
இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. உலக அணுசக்தி வரலாற்றிலேயே இதுவரை செய்யப்படாத ஒரு மீட்புப் பணி, ஜப்பானில் சிதைந்து கிடக்கும் ஃபுகுஷிமா அணு உலையில் ஆரம்பிக்கப்படும். இது தோற்றால் ஹிரோஷிமா, செர்னோபில் நாசங்களைவிடப் பெரும் நாசத்தை உலகத்துக்கு ஏற்படுத்தும். தோற்கும் வாய்ப்பே அதிகம் என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய விஷயம்.
ஃபுகுஷிமாவில் இருக்கும் அணு உலை வளாகத்தில் நான்காம் உலையில் இருக்கும் எரிபொருள் குச்சிகள்தான் இப்போதைய பிரச்சினை. எல்லா உலைகளின் பாதுகாப்புக் கவசங்களும் விபத்தில் முற்றாகச் சிதைந்துவிட்டன. எரிபொருள் குச்சிகள் இருக்கும் பகுதிக்கு மேற்கூரையே இப்போது இல்லை. கட்டடமே நொறுங்கி விழுந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. அதனுள்ளே நீர்த் தொட்டியில் குச்சிகள் உள்ளன. குச்சிகளின் கடும் வெப்பத்தையும் கதிரியக்கத்தையும் குளிர்விக்க வேண்டிய நீரே கொதிநிலையில் இருக்கிறது. நீரை விட்டு வெளியே குச்சிகள் வந்தால், காற்றில் பட்டதும் உடனே தீப்பிடிக்கக் கூடியவை. பெரும் கதிர்வீச்சை சீனா முதல் மேற்கு அமெரிக்கா வரை பரப்பக் கூடியவை. இந்தக் கதிர்வீச்சின் அளவு ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பில் இருந்த கதிர்வீச்சைப் போல 14 ஆயிரம் மடங்கு அதிகம் இருக்கும்.
எரிகுச்சிகளை உலையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து இன்னொரு பத்திரமான நீர்த் தொட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், கட்டடம் சிதைந்து இப்போதுள்ள தொட்டியிலிருந்து குச்சிகள் வெளிப்பட்டால், 14 ஆயிரம் ஹிரோஷிமாக்கள் நடந்தே தீரும். எரிகுச்சிகளை வெளியே எடுப்பது இன்னொரு தொட்டியில் வைப்பது எல்லாமே நீருக்குள்ளேயே நடக்க வேண்டும். காற்றுவெளியில் குச்சிகள் வந்தால் உடனே பெரும் தீ விபத்தும் கதிரியக்கமும் நடக்கும். ஒவ்வொரு குச்சியும் 30 கிலோ எடை உள்ளது. 15 அடி நீளம் உடையது. மொத்தம் 1,331 குச்சிகள் இருக்கின்றன. எரிபொருள் குச்சியை அணு உலைக்குள் பொருத்துவது, எடுப்பது எல்லாம் சாதாரண சமயத்தில் கணினி உதவியுடன் இயந்திரங்களால் துல்லியமாகச் செய்யப்படும் வேலைகள். ஆனால், இப்போது எல்லாமே சிதைந்து கிடக்கும் நிலையில், இதை மனிதர்கள் நேரடியாக ஒரு சில கருவிகள் உதவியுடன்தான் செய்தாக வேண்டும். குச்சிகள் எதுவும் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை உருவுவதுபோல நேராக இல்லை. எல்லாம் விபத்தில் வளைந்தும் உடைந்தும் முறுக்கிக்கொண்டும் கிடக்கின்றன.
இந்த பிரமாண்டமான, ஆபத்தான வேலையை நவம்பரில் யார் செய்யப்போகிறார்கள்? உலையின் உரிமையாளரான, தனியார் நிறுவனமான ‘டெப்கோ’தானே செய்யப்போவதாகச் சொல்கிறது. இதுவரை ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் உலையிலிருந்து கதிரியக்கம் பரவாமல் தடுக்கும் வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்காமல் ‘டெப்கோ’தானே செய்துவருகிறது. ஜப்பான் அரசாங்கம் பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்கிறது. பணமும் அள்ளி வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெப்கோ’வால் இதுவரை எந்தப் பாதுகாப்புப் பணியையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே, இதே உலை வளாகத்தில் இன்னொரு பகுதியில் கதிரியக்கம் உள்ள நீர், ஒரு பகுதியிலிருந்து கசிந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதை ‘டெப்கோ’ எத்தனை முயன்றும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒருபக்கம், அரசாங்கத்திடம் கோடிக் கணக்கில் பண உதவி பெற்றுக்கொள்ளும் டெப்கோ, இன்னொரு பக்கம் ஆட்குறைப்பையும் சம்பள வெட்டையும் செய்துகொண்டிருக்கிறது. 2011 விபத்துக்குப் பிறகு, தொழிலாளர் சம்பளத்தில் 20 சதவீதம் வெட்டப்பட்டது. இரண்டு வருடங்களில் 1,800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொடர்ந்து பணியாற்றுவோரில் 1,973 பேருக்கு தைராய்டு கதிர்வீச்சின் விளைவாகப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நவம்பர் சவாலை ‘டெப்கோ’வாலோ ஜப்பானாலோ தனியே சந்திக்க இயலாது என்ற கவலையை அமெரிக்க அரசியல்வாதிகள் தம் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் இருக்கும் அணு விஞ்ஞானிகள் இணைந்து ஃபுகுஷிமாவில் இடர் தடுப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நா. சபை முன்பு வைக்கப்பட்டிருக்கிறது.
ஃபுகுஷிமா விபத்து இயற்கைப் பேரழிவால் மட்டும் நடந்தது அல்ல. உலை வடிவமைப்பு சரியில்லை என்று பல வருடம் முன்னரே பொறியாளர்கள் எச்சரித்ததை ‘டெப்கோ’வும் அரசும் மதிக்கவில்லை. விபத்துக்குப் பின் நடந்த ஜப்பானிய அரசின் விசாரணையில் இந்த விபத்து மோசமான உலை வடிவமைப்பினாலும், அரசு அதிகாரிகளுக்கும் ‘டெப்கோ’வுக்கும் இடையே இருந்த கள்ள பேரங்களினாலும், மனிதத் தவறுகளால் நடந்த விபத்து என்றே கூறப்பட்டது. விபத்துக்குப் பின்னரும்கூட மூன்று உலைகளின் மேற்கவசம் எல்லாம் நொறுங்கிவிட்டது தெரிந்திருந்தும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு அதை மறைத்து ‘டெப்கோ’பொய் சொல்லிக்கொண்டிருந்தது.
இந்த மாதம் 9-ம் தேதியன்றுகூட, கதிரியக்க நீர்த் தொட்டியில் நடந்த தவறினால், ஆறு தொழிலாளர்கள் கதிரியக்க நீரில் முக்குளித்து கதிர்வீச்சுக்கு ஆளானார்கள். இந்த ஒரு விபத்திலேயே 10 டன் கதிரியக்க நீர் வெளியே கொட்டிவிட்டதாக அதிகாரபூர்வமாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தவிர, தினசரி 300 டன் கதிரியக்க நீர், ஓடைகள் வழியே கடலில் கலப்பதாக ‘டெப்கோ’ஒப்புக்கொண்டிருக்கிறது. அவசரஅவசரமாகக் கட்டப்பட்ட ஆயிரம் கதிரியக்க நீர்த் தொட்டிகளிலும் கசிவுகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
நவம்பரில் மேற்கொள்ள வேண்டிய பெரும் ஆபத்தான பணி மொத்தப் பணிகளில் ஒரு துளிதான். இந்த அணு உலை வளாகத்தை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்ய 40 ஆண்டுகளும் 11 பில்லியன் டாலர்களும் தேவை. உலை வளாகத்தில் கசிந்திருக்கும் புளுட்டோனியம் தனிப் பிரச்சினை. உலக அணுசக்தி வரலாற்றில் இதுவரை புளுட்டோனியக் கசிவுகள் சில அவுன்ஸ் கணக்கில் மட்டுமே இருந்திருக்கின்றன. ஆனால், ஃபுகுஷிமாவில் டன் கணக்கில் புளுட்டோனியக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இன்று அணு உலை விபத்து என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது குறிப்பிட்ட நாடு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல; அது எல்லை கடந்த பயங்கரம். ஃபுகுஷிமாவிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?
ஞாநி, மூத்த எழுத்தாளர், சமூக விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT