Published : 14 Jul 2016 08:52 AM
Last Updated : 14 Jul 2016 08:52 AM
சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள எந்த ஒரு கோளிலாவது ஜீவராசிகள் உள்ளனவா?
வானில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அவற்றில் நமது பூமிக்கு நெருக்கமாக இருப்பது ஆல்பா சென்டாரி. நெருக்கமாக என்று சொன்னாலும், தற்சமயம் கைவசமுள்ள சாதனங்களின் உதவியுடன் அதற்கு ஒரு விண்கலத்தை அனுப்பினால், அது ஆல்பா சென்டாரியைச் சென்றடைய 30,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
பிரபல அறிவியல் எழுத்தாளரான ஸ்டீபன் ஹாக்கிங், விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்ட யூரி மில்னர் என்ற ரஷ்ய நாட்டுக் கோடீஸ்வரருடன் இணைந்து, இருபதே ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியைச் சென்றடையக்கூடிய ஒரு விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தபால் தலை அளவுள்ள நுண் விண்கலங்களின் ஓர் அணியை, லேசர் கதிர்களின் உதவியுடன் ஒளியின் திசை வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்துக்கு முடுக்கிவிட்டு, இருபதே ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியில் போய் இறங்கச் செய்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். அத்தகைய ஒரு விண்கலம் மூன்றே நாட்களில் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையான புளூட்டோ கிரகத்தின் ஓடு பாதையைக் கடந்து வெளியேறிவிடும். சூரிய மண்டலத்துக்கு வெளியில் ஏதாவது ஒரு கோளில் ஜீவராசிகள் உள்ளனவா என்று துப்பறிவதே இத்திட்டத்தின் நோக்கம்.
விண்மீன் பயணத்தின் சாதனைப் படி
“வெறுமனே நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா! அவற்றில் போய் இறங்கப்போகிறோம்... அதற்கான முயற்சியின் முதல் படி இது” என்று கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் நாள் நியூயார்க் நகரில் இருவரும் அறிவித்தார்கள்.
அவர்களுடைய திட்டத்துக்கு ‘விண்மீன் பயணத்தின் சாதனைப் படி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சின்னதாக ஒரு விண்கலத்தை உருவாக்கி, அதை ஏவுவதற்காக மில்னர் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறார். பூமியிலிருக்கும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, விண்வெளியில் எங்காவது உயிரினம் உள்ளதா என்று கண்டறியும் முயற்சிகளுக்கு, கடந்த ஆண்டு சில கோடி டாலர்கள் நிதியுதவி செய்திருக்கிறார் மில்னர். அதோடு திருப்தியடையாமல் ஒரு படி மேலே போய், மனிதர் இயற்றிய சாதனங்களை விண்மீன்களுக்கு அனுப்பி உயிரினங்களைத் தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
இந்த முயற்சியில் மில்னர், ஹாக்கிங் ஆகியோருடன் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட பிரபலங்களும் கோடீஸ்வரர்களும் கைகோத்துள்ளனர். இந்த முயற்சிக்கு ‘நாஸா’வின் விண்வெளி ஏவுகணை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான பீட் வோர்டன் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு கிராம் எடையில் ஒரு விண்கலம்
ஆல்பா சென்டாரி பூமியிலிருந்து 4.37 ஒளியாண் டுகள் தொலைவில் அதாவது, 25 டிரில்லியன் மைல்கள் அல்லது 40.2 டிரில்லியன் கி.மீ. தொலை வில் உள்ளது. ( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) இப்போதுள்ள எரியன்களால் செலுத்தப்படுகிற விண்வெளிக் கலங்களைப் பயன்படுத்தினால், அங்கே போய்ச் சேரவே 30,000 ஆண்டுகளாகும். அதனால், நமக்கும் ஒன்றும் பயனில்லை. ஆனால், ஹாக்கிங்கும் மில்னரும் ஒளியின் உதவியுடன் நுண்ணிய விண்கலத்தை இயக்கத் திட்டமிடுகிறார்கள்.
அந்த விண்கலத்துக்கு ‘ஸ்டார் சிப்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது ஒரு தபால்தலையின் அளவே இருக்கும். அதன் எடை கிட்டத்தட்ட ஒரு கிராம்தான். ஆனாலும், அதில் ஒளிப்பதிவுக் கருவிகள், ஃபோட்டான் (ஒளித்துகள்) முடுக்கிகள், ஆற்றல் வழங்கிகள், வழிநடத்துக் கருவிகள், தகவல் பரிமாற்றக் கருவிகள், மின்சுற்றுகள் என்று பல உறுப்புகள் திணித்து வைக்கப்பட்டுள்ளன.
அந்த விண்கலத்துடன் ஒரு மீட்டர் அகல நீளமுள்ளதும், ஓரிரு கிராம் அளவே எடையுள்ளதும், ஒரு மீட்டரில் லட்சம் பங்கே தடிமனுள்ளதுமான இறக்கை இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய ஒளி படும்போது, அதன் ஃபோட்டான்கள் அதைத் தள்ளும். விண்கலத்துக்குக் கூடுதலாக உந்துதலை வழங்குவதற்காகப் பூமியிலிருந்து லேசர் கற்றைகளை அந்த விண்கலத்தை நோக்கிச் செலுத்த ஹாக்கிங்கும் மில்னரும் திட்டமிட்டுள்ளனர். 100 கிகாவாட் லேசர் ஆற்றலைச் செலுத்தி, அந்த விண்கலத்தை மணிக்கு 160 மில்லியன் கி.மீ. வரையிலான வேகத்தில் செலுத்த முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அந்த வேகத்தில் அந்த விண்கலம் 20 ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியைச் சென்றடைந்துவிட முடியும்.
காகிதக் கற்பிதங்கள் இல்லை
இது போன்ற பல நூறு நுண் விண்கலங்களை விண்ணில் ஏவிவிட்டால், அவை நாலா திசைகளிலும் பரவிப் பயணம் செய்து, மிக அருகிலுள்ள விண்மீன்களைச் சுற்றி இருக்கக்கூடிய கோள் மண்டலங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அனுப்பும் என்று ஹாக்கிங் ஆய்வுக் குழுவினர் நம்புகிறார்கள். என்றாவது ஒரு நாள், அப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாதகமான கோளில் போய், மனிதர்களைக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கு அந்தத் தகவல்கள் உதவியாயிருக்கும்.
இப்போதைக்கு இவையெல்லாம் காகிதத்தில் எழுதப்பட்ட திட்டங்களாகவே உள்ளன. இதற்கு முன்பே லேசர்களால் இயக்கப்படுகிற விண்கலங்களைப் பற்றி விவரிக்கிற ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவற்றில் கூறப்பட்ட கருத்துகளை மறுதலிக்கவோ, அவற்றின் கணக்குகளில் தவறு காணவோ முடியவில்லை. எனவே, அவற்றை வெறும் காகிதக் கற்பிதங்கள் என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், கடந்த கால அனுபவங்கள் அப்படி ஒரு கொள்கையை அல்லது கருத்தை லேசாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று காட்டுகின்றன. அத்துடன் தமது திட்டங்கள் யாவும் தற்போது அறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்வரும் சில பத்தாண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்று மில்னர் கூறுகிறார். என்றாலும், அத்திட்டங்களை நிறைவுசெய்வதற்கு முன், பல தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். எந்த நேரத்தில், எந்த அளவில், எந்தப் பிரச்சினை தலைதூக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாதிருப்பதே ‘ஸ்புட்னிக்’ ஏவப்பட்டது தொடங்கி, நிலவில் மனிதர் காலெடுத்து வைத்தது வரை, எல்லா விண்வெளிப் பயணங்களிலும் உள்ள சிக்கல். ஒரு தனி மனிதராலோ, ஒரு சிறு ஆய்வர் குழுவினாலோ எல்லாவிதமான சிக்கல்களையும் யூகித்துவிட முடியாது. எனவே, மில்னர் குழுவினர் உலகிலுள்ள எல்லாவிதமான மக்களிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் தமது திட்டத்தை மேம்படுத்துவதற்கான கருத்துரைகளையும், ஆலோசனைகளையும் கோரியிருக்கிறார்கள்.
இது ஒரு பேராசை மிக்க திட்டம்தான். ஆனாலும் நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பித் தரையிறங்கச் செய்த திட்டங்களும் அப்படித்தான் விமர்சிக்கப்பட்டன. அதேபோல ஆல்பா சென்டாரிக்கும் ஒரு விண்கலம் அனுப்பப்படுவது உறுதி என ‘நாஸா’ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT