Published : 01 Feb 2017 10:29 AM
Last Updated : 01 Feb 2017 10:29 AM
நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் பிரகாஷ் சரண் மகத் சமீபத்தில் டெல்லி வந்திருந்தார். வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆகியோரோடு பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது பேட்டியின் பகுதிகள்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நேபாளம் பாதிக்கப் பட்டதா?
பணமதிப்பு நீக்கம் பற்றிய இந்தியப் பிரதமரின் நோக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், நேபாளத்தின் தேவை வேறு. நாடுகளுடனான அன்றாட பணப் பரிமாற்றம், ஏற்றுமதி - இறக்குமதிப் பரிமாற்றங்களுக்காக எங்களுக்குப் புதிய இந்திய ரூபாய் நோட்டுகள் தேவை. பழைய இந்திய ரூபாய்களைப் புதிய நோட்டுகளாக மாற்றாவிட்டால், அவை எல்லாம் வீணாகப் போகும். அதை எப்படி எதிர்கொள்வது என்ற பிரச்சினையில் நேபாள அரசும் மக்களும் மாட்டியிருக்கிறோம்.
நேபாள மக்களிடம் எவ்வளவு பழைய நோட்டுகள் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி எங்களிடம் கேட்கிறது. தோராயமான மதிப்பீடு எதுவும் தற்போது எங்களிடம் இல்லை. பழைய நோட்டுகளை வாங்கிக்கொள்ளும் நடைமுறையை ரிசர்வ் வங்கி நேபாளத்தில் அமைத்தால், நாங்கள் அத்தகைய மதிப்பீட்டைச் செய்யத் தொடங்குவோம். கறுப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து யாரையும் நேபாளத்துக்கு வரவிட மாட்டோம். எங்களின் வங்கிகளைப் பயன்படுத்தவிட மாட்டோம் என்று ரிசர்வ் வங்கிக்கும் நிதியமைச்சருக்கும் நாங்கள் உறுதியளித்துள்ளோம்.
அரசியல்சாசனத் திருத்தங்கள் செய்தாலும் அவற்றைச் செயல்படுத்துவதில் நேபாளம் மெதுவாகப் போகிறதே?
எதிர்க்கட்சிகளோடு நாங்கள் கருத்தொற்றுமைக்கு முயல்கிறோம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் திருப்தியடைய வேண்டும் என்பதால், நாங்கள் ஒவ்வொருவரோடும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அரசியல் சாசனத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இருபங்கு பெரும்பான்மை உங்களுக்கு இருக்கிறதா?
நாடாளுமன்றத்தில் திருத்தங்களை முன்வைத்த பிறகு, நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு நல்ல அறிகுறிகள் கிடைத்தன. மாதேசிகளும் எதிர்த் தரப்பினரும் தற்போது மேலும் மேலும் அதிகமாக விட்டுக்கொடுத்து வருகின்றனர். தங்களின் நிலையிலேயே ஒருவர் இருக்கக் கூடாது. காலப்போக்கில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். மாதேசிகளை மையமாகக் கொண்ட கட்சிகள் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். விட்டுக்கொடுக்காத கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான விவாதங் களில் என்ன முக்கியமான கருத்து?
மாதேசிகளுக்கு நாங்கள் நாடாளுமன்றத்தில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தருகிறோம் என்று உறுதியளித்துள்ளோம். ஐந்தாவது மாகாணத்தின் மலைப் பகுதிகளில் மாதேசிகளுக்கு என்றே தனியான ஒரு பிரதேசத்தையும் நாங்கள் உருவாக்க உள்ளோம். ஆனால், முக்கியமான பிரச்சினை மனப்போக்குதான். அது விட்டுக்கொடுக்கும் தன்மையோடு இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டபோது, அதன் பல சட்டப் பிரிவுகளை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லைதான்.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், மாநிலங்களின் எல்லை களை மாற்றியமைப்பது போன்ற முக்கியமான கோரிக்கை களை மாதேசிகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறீர் கள் நீங்கள்…
ஆமாம். ஒவ்வொரு தரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டும். காட்மாண்டில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளுக்கும் மாதேசிகளின் கட்சிகளுக்கும் அரசியல் சாசனத் திருத்தங்களின் மீது ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் சமரசமாகப் போக வேண்டிய தேவை இருக்கிறது.
அரசியல் சாசனம் வரையறுத்துள்ள மாநில எல்லைகளைத் தற்போது மாதேசிகள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லவா? இத்தகைய நிலையில் நீங்கள் எப்படித் தேர்தல்களை நடத்திமுடிக்க முடியும்?
தற்போதுள்ள மாநிலங்களின் எல்லைகளோடு, நாடாளுமன்றத்தின் ஆதரவோடு நாங்கள் எதிர்வரும் தேர்தல்களை நடத்திவிடுவோம். எங்களது தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் நல்ல தீர்வுகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். அவற்றை மாதேசிகளின் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கள்தான் ஜெயிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது.
நேபாள - இந்திய உறவுகளில் இறக்குமதிக் கட்டுப்பாட்டு வரி ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறதே?
ரொம்பக் குறைவான அளவே நாங்கள் சணலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் மொத்த அளவில் எங்களிடமிருந்து இறக்குமதியாவது 2%தான். இந்தியா - நேபாளம் இடையே சமத்துவம் இல்லாத வணிக உறவுகள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. ஆனால், எங்கள் மீது இந்தியா இறக்குமதி கட்டுப்பாட்டு வரி விதித்துள்ளது. அது எங்களைப் பாதிக்கிறது. இறக்குமதி கட்டுப்பாட்டு வரியைத் தாண்டி, வேறு தனியான பிரச்சினையும் உள்ளது. ஏற்றுமதிகளுக்குத் தரும் மானியங்களுக்கு எதிரான வரியும் 5% விதிக்கப்படுகிறது. நேபாளத்தின் சணலை வியாபாரிகள் பயன்படுத்துவதை இந்தியச் சட்டவிதிமுறைகள் தடுக்கின்றன. இந்திய - நேபாள நட்பு ஒப்பந்தத்தை மீறியவை இந்த வரிகள். இவற்றைப் பற்றி இந்தியாவிடம் பேசியுள்ளோம். இந்தியாவும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: த.நீதிராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT