Last Updated : 11 Oct, 2013 04:23 PM

 

Published : 11 Oct 2013 04:23 PM
Last Updated : 11 Oct 2013 04:23 PM

சோதனைக்குழாய் இல்லாமல் பெற்ற 3 நோபல்!

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் விருதுகள், சோதனைக் குழாய்களோ, சோதனைக்கூட கோட்டுகளோ தேவைப்படாத ஆராய்ச்சிப் பணிக்காகத் தரப்பட்டுள்ளன. மூலக்கூறுகளின் உலகத்தைக் கணினி உதவியுடன் ஆராய்ந்தவர்கள் அவர்கள். அத்துடன் எதிர்கால ஆய்வுகளையும் எளிதாகச் செய்ய வழிவகுத்துள்ள முன்னோடிகள். ஒளிச்சேர்க்கை, எரிதல் போன்ற வேதிவினைகளை மேலும் ஆழமாக ஆய்வு செய்யவும் புதிய மருந்துகளின் உருவாக்கத்திலும் இவர்களின் ஆய்வுமுறை பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

மார்டின் கார்ப்ளஸ் (83) - பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மைக்கல் லெவிட் (66) ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், ஏரி வார்ஷெல் (72) தெற்கு கலிபோர்னியப் பல்கலைக்கழகம் ஆகியோர் நோபல் பரிசையும், பரிசுத்தொகை சுமார் ஏழரைக் கோடி ரூபாயையும் பகிர்ந்துகொள்வார்கள்.

பரிசு பெற்ற மூன்று பேருமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளனர். ஆஸ்திரியா நாட்டில் பிறந்த டாக்டர் கார்ப்லஸ் அந்நாட்டுக் குடியுரிமையையும் வைத்துள்ளார். டாக்டர் லெவிட் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் குடியுரிமைகளையும் வைத்துள்ளார். டாக்டர் வார்ஷெல் இஸ்ரேலில் பிறந்தவர். இஸ்ரேலியக் குடிமகன்.

மிகவும் சிக்கலான வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டு எளிதாகப் புரிந்துகொள்ள கணினியைப் பயன்படுத்த வழி ஏற்படுத்தித் தந்தமைக்காக மூன்று பேருக்கும் விருதுகள் தரப்படுவதாக ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாதெமி அறிவித்துள்ளது.

“மூலக்கூறுகளின் கட்டமைப்பு மாதிரிகளை உருவாக்க வேதியியல் வல்லுநர்கள் பிளாஸ்டிக் பந்துகளையும் குச்சிகளையும் பயன்படுத்துவார்கள். இப்போதோ இவை கணினியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குக் காரணம், இந்த மூவரும் 1970-களில் தொடங்கிய இந்த வழிமுறைகளே” என்று அகாதெமி தனது பாராட்டுரையில் தெரிவிக்கிறது.

சோதனைச் சாலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வேதியியல் விற்பன்னர்கள் என்னென்ன ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன, அவற்றின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்று முதலிலேயே கூறிவிடுவார்கள். ஆனால், வேதிவினைகளோ மிகவும் துரிதகதியில் நடந்துமுடிந்துவிடும். 'ஹாம்லெட் நாடகத்தின் எல்லா பாத்திரங்களையும் முதலிலேயே பார்த்துவிடுவதைப் போல இது இருக்கும். கடைசியில், எல்லாம் சடலங்களாக விழுந்து கிடக்கும். நடுவில் என்ன நடந்தது என்பது புரியாத புதிராகவே நீடிக்கும். நடுவில்தான் சுவையான சம்பவங்களே நடக்கின்றன. கோட்பாட்டுமுறை வேதியியல் இதைத்தான், அதாவது ஒட்டுமொத்த நாடகத்தையும்தான் நமக்குத் தருகிறது'என்று நோபல் பரிசு தேர்வுக்குழுத் தலைவர் ஸ்வென் லிடின் கூறுகிறார். 

1960-களில் கணினிகள் அளவில் பிரமாண்டமானவையாக இருந்தன. ஆய்வுக்கூடத்தின் பெரிய அறைகளையே ஒரு கணினி அடைத்துவிடும். கணினிக்குள் செலுத்த வேண்டிய கட்டளைநிரலை விஞ்ஞானிகள் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. எனவே, ஆய்வும் ஒரு எல்லைக்கு மேல் போக முடியாமல் இருந்தது. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் அறிவியல் கழகத்தில் வார்ஷெல் டாக்டர் பட்ட ஆய்வு மாணவராகவும் லெவிட் கணினிக் கட்டளைநிரலாளராகவும் இருந்தனர். நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அடிப்படையில் மூலக்கூறுகளின் குணாதிசயங்களை அவர்கள் ஆராய்ந்தனர். குவாண்டம் விளைவுகளை அப்போது அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், வேதிவினைகளைப் போலவே நடைபெறக்கூடிய வினைகளைக் கணினியில் டாக்டர் கார்ப்ளஸின் ஆய்வுக்குழு உருவாக்கியது. அதில் குவாண்டம் இயற்பியலை அதன் முழு வீச்சுடன் பயன்படுத்தினர். முனைவர் பட்டத்துக்குப் பிறகு முதுமுனைவர் பட்டம் பெற்ற வார்ஷெல், கார்ப்ளஸின் ஆய்வுக்கூடத்தில் முதுஆய்வராகச் சேர்ந்துகொண்டார். 1972-ல் அவ்விருவரும் சேர்ந்து, ஒரு சில மூலக்கூறுகளின் வேதியியல் தன்மைகளை குவாண்டம் இயற்பியல், பாரம்பரிய இயற்பியல் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் விளக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.



பிறகு வார்ஷெல், லெவிட்டுடன் மீண்டும் சேர்ந்து செயல்பட்டார். அதற்குள் லெவிட் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். உயிரிகளில் வேதியியல் வினைகளுக்குக் காரணமாக இருக்கும் புரதங்களான நொதிகளை எப்படி எதிர்கொள்வது என்ற ஆய்வை இருவரும் கூட்டாக மேற்கொண்டனர். புரதங்கள் மேல் எக்ஸ் கதிர்களைப் பந்தடித்து அதன் மூலம் சில நொதிகளின் உருவ அமைப்புகளை வேதியியலாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால், அப்போது நடக்கும் வேதியியல் வினைகள் குறித்து அதிகம் அறியாமல் இருந்தனர். 'ஒரு கடிகாரத்தில் மணியை மட்டும் பார்க்க முடிந்து, அது எப்படி வேலை செய்கிறது என்று புரியாமல் வியப்படையும் சாமானியர்களைப் போலவே இருந்தது வேதியியல் ஆய்வர்களின் செய்கை. ''உண்மையில் புரதம் என்ன செய்கிறது, எப்படிச் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, புரதத்தின் கட்டமைப்புபோன்ற தோற்றத்தைக் கணினியில் துல்லியமாக உருவாக்கி, ஒரு வழிமுறையைக் கண்டறிந்தோம்'' என்கிறார் டாக்டர் வார்ஷெல்.

''சுற்றியுள்ள பிற மூலக்கூறுகளினால் ஏற்படும் விளைவுகளை, குறிப்பாக நீரால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சேர்க்காமல் நொதிகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இதுதான் தங்களுடைய கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம் என்றார் வார்ஷெல். கணினியைக் கொண்டு நாம் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், அதற்கான வழிமுறை எளிமையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே, நமது நினைவுத்திறனைச் சிரமப்படுத்தாத வகையிலான கணினிக் கட்டளைநிரல்களை நாங்கள் எழுதிப் பயன்படுத்தினோம்'' என்கிறார் வார்ஷெல்.

''செய்முறை அறிவியலாளர்கள் இந்தப் புதிய வழிமுறையை வெகு நிதானமாகவே பின்பற்ற ஆரம்பித்தார்கள். கணினியில் நீங்கள் எதையாவது செய்யப் புகுந்தால், அதை மற்றவர்கள் வெகு சாதாரணமாக நிராகரிக்கவும், இதெல்லாம் கணிப்பொறியில் செய்த சித்துவேலை என்று சொல்லவும் கூடும். கணக்கீடுகள் மூலம் கிடைத்த முடிவுகளும் கணினியில் செய்த ஆய்வின் முடிவுகளும் ஒன்றாக இருந்தபோது செய்முறை ஆய்வர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதே ஆய்வுகளில் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கியபோது, அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை'' என்கிறார் வார்ஷெல்.

“கடைசியாக, நாம்தான் நேரில் விளக்க வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்னால் ஒருவருக்குக்கூட நேரில் சொல்லிப் புரியவைக்க முடியவில்லை. நான் கூறியவற்றைக் கேட்டு அவர்கள் கோபம் அடைந்ததுதான் மிச்சம்” என்கிறார் வார்ஷெல்.

“கணினியில் செய்யும் மாதிரிச் சோதனைகள் (சிமுலேஷன்ஸ்) உண்மையான சோதனைக்கூட ஆய்வுகள் அளவுக்குத் தகவல்களைத் தருகின்றன. அதே வேளையில் ஆய்வகங்களிலும் இந்தச் சோதனைகளைக் கூடவே செய்தாக வேண்டும். ஆனால், இப்பொதெல்லாம் கோட்பாடுகள் உருவாக்கும் கணிப்புகள் உறுதியானவையாக மாறிவருவதால், செய்முறை ஆய்வுகளில் செலவாகக்கூடிய நேரத்தில் 90% மிச்சப்படுத்திவிட்டு, செய்முறை ஆய்வுகள் தரக்கூடிவற்றில் மிக முக்கியமானவை என்று நாம் நினைக்கும் ஆய்வு முடிவுகளில் மீதமுள்ள 10% நேரத்தைச் செலவிடலாம்” என்கிறார் நோபல் விருது கமிட்டியின் டாக்டர் லிடின்.

லெவிட்டுக்கு இன்ப அதிர்ச்சி:

“நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஸ்டாக்ஹோமிலிருந்து வந்த தொலைபேசித் தகவல் தெரிவித்தபோது அதிர்ச்சியில் உறைந்தேன். யார் யாருக்கு நோபல் விருது கிடைக்கும் என்று இணையதளங்களில் வந்த தகவல்களைப் படித்திருந்தேன். ஒருவர்கூட எனக்குக் கிடைக்கும் என்று கூறவில்லை. எனவே, நோபல் பரிசுக் குழுவினர் என்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியபோது அதிர்ச்சியாகவே இருந்தது. என்னைத் தேர்வு செய்தது சரியா இல்லையா என்றுகூட என்னால் கூற முடியவில்லை” என்று டாக்டர் லெவிட் குழந்தையைப் போலக் கூறுகிறார்.

“விருதுக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு என்னுடைய ஆய்வறிக்கையை அனுப்புவதாக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தேன். ஆனால், அதன்படி நான் அனுப்பவில்லை. அதை அவர்கள் குறிப்பிட்டு, நீங்கள் உங்கள் ஆய்வறிக்கையை எங்களுக்கு அனுப்பாவிட்டாலும் உங்களுடைய ஆய்வறிக்கைகளை நாங்கள் பெற்றுவிட்டோம். அதன் அடிப்படையில் உங்களைத் தேர்வுசெய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் லெவிட்.

விருது கிடைத்த தகவல் கிடைத்ததும் லண்டன் மாநகரில் உள்ள 98 வயதான தன்னுடைய தாயாரைத் தொலைபேசியில் அழைத்து, நோபல் விருது குறித்த இணையதளத்தைக் கணினியில் பார்க்குமாறு கூறியிருக்கிறார். “அந்த இணையதளத்தின் முகவரியைக் கூறு” என்று அம்மா கேட்க, “நோபல் பரிசு என்று சும்மா தட்டச்சு செய்து கூகுளில் தேடேன், முதலிலேயே பெயர் வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார் லெவிட்.

காலின்ஸின் பெருமிதம்:

அமெரிக்காவின் தேசியச் சுகாதாரக் கழகத்தின் (என்.ஐ.எச்.) இயக்குநர் பிரான்சிஸ் எஸ். காலின்ஸ் இம் மூவருக்கும் விருது கிடைத்தது குறித்துப் பெருமிதப்படுகிறார். அதே சமயம், அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கப்பட்டதால், தங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளும் முடங்கிக்கிடப்பதால் வருத்தம் அடைந்துள்ளார். “இம் மூவரின் ஆய்வுகளும் அமெரிக்க பெடரல் அரசு தந்த மானியங்களால்தான் சாத்தியமானது” என்று சுட்டிக்காட்டுகிறார். உடல் இயக்கவியல் – மருத்துவத்துக்காகச் சில நாள்களுக்கு முன்னர் நோபல் விருது பெற்ற மூவரும்கூடத் தங்களுடைய நிறுவனத்தின் மானிய உதவியில்தான் ஆய்வுகளை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டுகிறார். “என்ன சொல்லி என்ன பயன்? இன்னமும் இந்த நிறுவனத்தின் பூட்டுகளைத் திறக்க நேரம் வரவில்லையே?” என்று அவர் அங்கலாய்த்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x