Published : 15 Nov 2014 11:03 AM
Last Updated : 15 Nov 2014 11:03 AM
இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு நீதிபதி பணியாற்றி ஓய்வு பெற்றபின், தான் எந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்ந்து வழக்காடிகளுக்கு நீதி பரிபாலனம் செய்தாரோ, அதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, ஒரு வழக்காடியாக நிறுத்தப்பட்ட அரிய வரலாற்றுச் சம்பவம் 1981-ம் ஆண்டு நவம்பர் திங்களில் கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தேறியது.
கேரள உயர் நீதிமன்ற வெள்ளி விழாவில் சிறப்பு விருந் தினராக உரையாற்றிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித் துறையை அவமதிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் விமர்சனம் செய்து பேசினார் என வழக்கறிஞர் வின்சென்ட் பனிகுலங்கரா என்பவர் நீதிமன்ற அவமதிப்புக்கான குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத் தலைமை வழக்குரைஞரின் அனுமதி பெற்று வழக்கு தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே அந்த உயர் நீதிமன்றத்தில் 1968-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர். அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தண்டிக்கவோ, எச்சரிக்கை செய்யவோ முன்வரவில்லை. மாறாக, இந்திய நீதித் துறையின் பெருமையையும் வலிமையையும் உலகம் உணரும் வகையில் தீர்ப்புகளை வழங்கியவர் ‘நீதித் துறையின் மனசாட்சி’, ‘நாட்டு மக்கள் நலன் விரும்பி’ எனப் பாராட்டு மொழிகளால் தனது தீர்ப்பில் புகழாரம் சூடி, மனுவைத் தள்ளுபடி செய்தது. ஓர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியே பின்னாளில் அந்நீதிமன்ற வழக்காடியான வரலாறு முன்னுதாரணம் இல்லாத, முன் தீர்ப்பாகச் சட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.
பல்துறை அனுபவம்
உலகின் மிகப் பெரிய நீதி பரிபாலன அமைப்பு முறையைக் கொண்டுள்ள இந்தியக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தை அலங்கரித்த நீதியரசர்களில் வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிடத்தக்கவர். ஏனெனில், 25 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி, புகழ்பெற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடி வாகை சூடிய அனுபவம், தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் மன்றத்தில் தலைச்சேரி தொகுதியில் வென்று, சென்னை மாகாண சட்டப் பேரவை, கேரள மாநில சட்டப் பேரவைகளில் உறுப்பினராக, மாநில சட்ட அமைச்சராக உயர்ந்த பொறுப்புகளை வகித்து சட்டமியற்றல், திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் எனப் பல்துறை அனுபவத்தையும் பெற்றவர். பின்னர், இந்தியச் சட்ட ஆணைய உறுப்பினராக இருந்ததால் சட்ட முன்வரைவுகள், அறிக்கைகள் தயாரித்தல் இவற்றில் தனிப் பெரும் பயிற்சியும் கிடைத்தது. சட்டப்புலமை, திட்ட மிடுதல், திறமையாக வாதிடுதல் இவற்றுடன் தனக்கே உரிய தலைமைப் பண்புகளுடன் வாழ்ந்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவர். இத்துடன் இளமையில் தடுப்புக் காவலில் ஒரு மாதச் சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதியரசர்களில் மாநில அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தவிர வேறு எவருக்கும் கிடைக்க வில்லை.
காந்தியச் சிந்தனையாளர்
காந்தியச் சிந்தனைகளைப் பயின்று உள் வாங்கிய நீதிபதியான கிருஷ்ணய்யர், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் நோக்கில் தண்டனைகள் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில், சிறைச்சாலைகள் மனநல மருந்தகங் களாகச் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். இந்தியாவின் மிகப் பெரிய சிறையான திகார் சிறைச் சாலைக்குள் சென்று பார்வையிட்டு, அங்குள்ள சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கும் சிறைச் சாலை சீர்திருத்தங்களுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் பற்றிய திட்டமிடல் மேற்கொண்ட நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் முதன்மையானவர். கைதிகள் தங்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய கடிதங்களைத் தனக்கு அனுப்பிவைத்தால், அவற்றின் தன்மை அறிந்து அதனையே வழக்குக்கான மனுவாக ஏற்று, விசாரணை மேற்கொண்டு ‘கடித வழி நீதி நல்கும் முறை’யைத் தீவிரமாக அமல்படுத்தினார்.
ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாது காப்புக் காரணங்கள் எதுவுமில்லாத நிலையில், தேவை யின்றி இரும்புச் சங்கிலியைக் கையில் பூட்டி இழுத்துச் செல்வது மனித மாண்புகளுக்கு ஏற்றதல்ல என, கை விலங்கை உடைத்தெறியும் ஆற்றல் அவரது தீர்ப்புகளுக்கு இருந்தது.
கலைக்களஞ்சியம்
உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலக் குறுகிய பணிக் காலத்தில் 745 புகழ்மிக்க தீரப்புகளை வழங்கியுள்ளார். அதனை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர், குறுகிய காலத்தில் இத்தகைய சிறப்பான, மிகுதியான தீரப்புகளை அக்காலத்திலேயே வழங்கியவர் என கிருஷ்ணய்யரைப் பாராட்டுகின்றார். கணிப்பொறி, இணையதளத் தொடர்புகள் இல்லாத பணிச் சுழலில், ஒவ்வொரு தீரப்பிலும் உலக அறிஞர்களின் மேற்கொள்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதால், அவை படிப்பவர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாகத் தோன்றும்.
முதன்மையான தீர்ப்பு
இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்காடும் முறையைச் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்து ஊக்குவித்த பெருமை கிருஷ்ணய்யருக்கு உண்டு. மத்தியப் பிரதேச மாநில ரத்லம் நகராட்சியின் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்த்து அந்நகர மக்கள் தாக்கல் செய்த வழக்கில் கிருஷ்ணய்யர் வழங்கிய அந்தத் தீர்ப்புதான் ‘நீதி நல்குவதில் மக்கள் பங்களிப்பை’ உறுதிசெய்த முதன்மையான தீர்ப்பு என சட்ட அறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
1980-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஓய்வின்றி மக்கள் நலப்பணிகளிலேயே ஈடுபட்டு வாழ்ந்துவரும் தியாகச் செம்மலான கிருஷ்ணய்யர், தனது வாழ்நாள் முழுவதையும் மனித உரிமைகள் பாதுகாப்பு, மது-புகையிலை ஒழிப்பு, ஏழை மக்களுக்காகக் குரல் கொடுப்பது போன்ற பணிகளுக்காகத் தனது ‘சத்கமயா’ வீட்டின் கதவு களைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறார்.
இந்திய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் தனது ‘நினைவுகள் மறையுமுன்’ என்ற தன் வரலாற்றில் கூறியுள்ளதுபோல், உச்ச நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதி களில் ஒருவரான கிருஷ்ணய்யரின் பணிக்காலத்தை ‘கிருஷ்ணய்யர் காலம்’ என்றே அழைக்கலாம்.
- இல. சொ. சத்தியமூர்த்தி
நீதித் துறையின் சேலம் மாநகர முதுநிலை உரிமையியல் நடுவர், தொடர்புக்கு: sathiyamurthy2000@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT