Published : 11 Mar 2017 12:27 PM
Last Updated : 11 Mar 2017 12:27 PM
தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறை, சென்னை, கோவை, மதுரை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய 9 மண்டலங்களாக செயல்படுகின்றன. இந்த மண்டலங்களில் மொத்தம் 532 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. மாநகரங்கள், தொழில் நகரங்கள், கோயில் நகரங்கள், சுற்றுலா நகரங்களில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 60 முதல் 150 பத்திரப்பதிவுகள் நடந்தன. மற்ற அலுவலகங்களில் 40 முதல் 80 பத்திரப்பதிவுகள் நடந்தன.
டாஸ்மாக் துறைக்கு அடுத்து, அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் துறையாக, பத்திரப்பதிவு துறை இருந்தது. தற்போது பத்திரப்பதிவு பிரச்சினையால் 85 சதவீதம் பத்திரப்பதிவுகள் குறைந்தன. அதனால், வருவாய் குறைந்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடின. கடந்த 8 மாதங்களுக்கு முன் வரை பத்திரப் பதிவுகள் தடையில்லாமல் நடந்தபோது, நாள் முழுவதும் நிற்கக் கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பத்திரப்பதிவு அதிகாரிகள், ஊழியர்கள் தற்போது வேலையில்லாமல் சோர்ந்துபோய் உள்ளனர்.
இந்நிலையில் வருவாய் இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகங்களும் கடனில் தத்தளிக்க தொடங்கி உள்ளன. இதுகுறித்து பத்திரப் பதிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் மின் சாரம், டெலிபோன், குடிநீர் கட்டணம், பேனா, பென்சில், சொத்துவரி மற்றும் அன்றாட பராமரிப்பு செலவினங்களுக்காக குறிப்பிட்ட நிதி ஒதுக்குவார்கள். ஆனால், பத்திரப்பதிவு குறைந்ததில் இருந்து இந்த நிதி ஒதுக்கப்படவில்லை. மின் கட்டணம் மட்டும் ஒவ்வொரு அலுவலகத்திலும் ரூ. 50 ஆயிரம் ரூ. 1 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர். டெலிபோன் பில் கட்டாமல் பாக்கி அதிகரித்து வருகிறது.
அதனால், பிஎஸ்என்எல் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பாக்கி தொகையை கட்டச் சொல்லி நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுக்கின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் பத்திரப்பதிவு தடைப்படக் கூடாது என்பதற்காக, எல்லா அலுவலகங்களுக்கும் ஜெனரேட்டர் கொடுத்துள்ளனர். ஆனால், அதனை இயக்க டீசல் வழங்கப்படுவதில்லை.
கணினி உபகரணங்களுக்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. காகிதம், கம்ப்யூட்டர் டோனர் வாங்குவதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.8 கோடி நிதி ஒதுக்குவார்கள். ஆனால், இதுவரை அந்த நிதி ஒதுக்கவில்லை.
மூன்று மாதத்துக்கு ரூ. 2 கோடி வீதம் ரூ. 8 கோடி ஒதுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்னும் வரவில்லை. பத்திரப் பதிவுகளை கண்காணிக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை இயக்க தனியார் நிறுவனம் மூலம் கேமரா ஆபரேட்டர்கள் அவுட் சோர்ஸிங் முறையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், கேமரா கண்காணிப்பு பணியும் முடங்கி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நிதி ஒதுக்கீடு தாமதம் இயல்பே
துணை பதிவுத்துறைத் தலைவர் ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை நிதி இருப்பை பொறுத்து அன்றாட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி செலவினங்களை அந்தந்த பத்திரப் பதிவாளர்கள், அரசுக்கு எழுதி அனுப்புவார்கள். சில நேரம் இந்த நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஆக வாய்ப்புள்ளது. நிதி வந்ததும் மின்கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்டவை செலுத்தப்படும். இதற்கும் பத்திரப்பதிவுகள் குறைந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT