Published : 01 Jun 2016 10:09 AM
Last Updated : 01 Jun 2016 10:09 AM
புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் என்பது நவீனத் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 90-களுக்கு முந்தைய கவிஞர்கள் பெரும்பாலும் மனவெளியில் உலவியவர்களாகவே தெரிந்தார்கள். ஆத்மாநாம் போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்காக இருந்தார்கள்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகுக்கு இந்தியா திறந்துவிடப்பட்டது 1990-களின் தொடக்கத்தில். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத் தாராளமயமாதல், உலகமயமாதல் போன்றவற்றின் கரங்கள் இந்தியாவை இறுகப்பற்ற ஆரம்பித்தன. இந்தப் போக்குக்கான எதிர்க்குரல்கள் தமிழ்க் கவிதைகளில் தீவிரமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான்.
2000-வது ஆண்டில் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ழாக் பிரெவெரின் ‘சொற்கள்’ கவிதைத் தொகுப்பு தமிழ்க் கவிஞர்களிடையே பெரும் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியது. அரசியல் பார்வையையும் அன்றாட வாழ்வின் தருணங் களையும் ஒருங்கே எழுதக் கூடிய குணாம்சத்தைப் பலரும் பிரெவெரிடமிருந்து ஆரத் தழுவிக்கொண்டார்கள்.
‘கவிதை அரசியல் பேசக்கூடாது’ என்ற எழுதப்படாத விதியைத் தூக்கி எறிந்து புதிய போக்கைத் தொடங்கு கிறார்கள் புத்தாயிரத்தின் தமிழ்க் கவிஞர்கள். இதன் விளைவாகத் தமிழ்க் கவிதை உலகமயமாகிறது.
விற்பனைப் பிரதிநிதிகள், மாதவிடாய், தன்பாலின உறவு, குடும்ப வன்முறை, சாதியம், வெண்புள்ளி கொண்டிருக்கும் பெண், ஜார்ஜ் புஷ், ஈழ விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் விதவிதமான பாடுபொருள்களைக் கொண்டிருந்தன புத்தாயிரத்தின் கவிதைகள். இரண்டாயிரமாண்டு காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இந்த அளவுக்குப் பன்மைக்குரல்கள் ஒருபோதும் எழுந்ததில்லை. இந்த அளவுக்குத் தமிழ்க் கவிதைக்குள் ஒருபோதும் ஜனநாயகம் நிகழ்ந்ததில்லை. ஒடுக்கப்பட்ட தரப்புகளிலிருந்து எழுத வந்த, அல்லது ஒடுக்கப்பட்ட தரப்புகளைப் பற்றி எழுதிய கவிஞர்களின் குரல்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக ஆதிக்கம் செலுத்தின என்பது தற்காலக் கவிதைப் போக்கில் சமூக நீதியின் நீட்சியை உணர்த்துகிறது.
தலித் கவிஞர்களின் வரவு தமிழ்க் கவிதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வாழ்க்கை, வலி, கோபம் எல்லாமே கவிதையாயின. பெண்களின் குரலும் கவிதைகளில் உரக்க ஒலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். தலித் பெண்கள், இலங்கைப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் என்று பெண்களின் கவிதைகளும் பன்மைத்தன்மை கொண்டவையாக இருந்தன. புத்தாயிரத்துக்குப் பிறகான ஆண்டுகள் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த ஆண்டுகள். அந்தப் போராட்டத்தின் இறுதியில் மனிதப் பேரவலமும் நிகழ்ந்தது. இயல்பாகவே, இவையெல்லாம் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் உக்கிரத்தை ஏற்றின.
இன்றைய கவிதைகள் மக்களுக்கான அரசியலைப் பேசினாலும், வெகுமக்களை இந்தக் கவிதைகள் பெரிதும் போய்ச்சேருவதே இல்லை. ஒரு பக்கம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வெகுமக்களின் ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம், கவிஞர்களும் மொழிரீதியாக வெகுமக் களை விட்டு விலகிவந்து, தங்களைச் சிறுபத்திரிகை களுக்குரியவர்களாக ஆக்கிக்கொண்டார்கள். ஆழமான கவிதைகள் வெகுமக்களையும் போய்ச்சேரும் என்பதை நிரூபித்தவர்கள் பாப்லோ நெருதாவும் ழாக் ப்ரெவெரும். அவர்களைப் போன்றதொரு கவி இயக்கம் தமிழில் நடைபெற்று கவிதை எல்லோருக்கும் போய்ச்சேர்ந்தால்தான் அது உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தப்படும். இந்த மாற்றம் வெறுமனே எளிய மொழியில் கவிதை எழுதுவதால் நிகழ்ந்து விடாது. கல்விமுறை, வாசிப்பு இயக்கங்கள், வெகுஜனப் பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் செய்ய வேண்டிய மாற்றம் இது. மொழியின் உன்னத வடிவமான கவிதை என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர. ஒருசிலருக்கானதாக மட்டும் ஆகிவிடக் கூடாது.
புத்தாயிரத்துக்குப் பிறகு வெளிவந்த முக்கியமான தொகுப்புகளைப் பட்டியலிடச் சொல்லி கவிஞர்கள் சுகுமாரன், சுகிர்தராணி, சே. பிருந்தா, சமயவேல், ராணிதிலக் ஆகியோரிடம் கேட்டோம். அவர்கள் தந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் இது.
1. உறுமீன்களற்ற நதி
இசை, காலச்சுவடு பதிப்பகம் (9677778863)
2. காயசண்டிகை
இளங்கோ கிருஷ்ணன் காலச்சுவடு பதிப்பகம்
3. திருச்சாழல்
கண்டராதித்தன் புது எழுத்து பதிப்பகம்- (9842647101)
4. களம் - காலம் - ஆட்டம்
- சபரிநாதன் புது எழுத்து பதிப்பகம் - (9842647101)
5. ஏரிக்கரையில் வசிப்பவன்
ஸ்ரீநேசன் - ஆழி பதிப்பகம்(98841 55289)
6. தீண்டப்படாத முத்தம்
சுகிர்தராணி காலச்சுவடு பதிப்பகம்
7. முலைகள்
குட்டி ரேவதி அடையாளம் பதிப்பகம் (94437 68004)
8. ஈதேனின் பாம்புகள்
- றஷ்மி காலச்சுவடு பதிப்பகம்
9. தலைமறைவுக் காலம்
- யவனிகா ராம் - நற்றிணை பதிப்பகம்(9486177208)
10.கல்விளக்குகள்
- என்.டி. ராஜ்குமார் காலச்சுவடு பதிப்பகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT