Published : 21 May 2017 12:02 PM
Last Updated : 21 May 2017 12:02 PM
தனது இலங்கைப் பயணத்தின் இரண்டாவது நாளில் மலையகத் தமிழர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மோடியின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிகம் கூடுவது, உற்சாகக் குரல் எழுப்புவது போன்ற வழக்கமான அம்சங்களை வைத்துப் பார்த்தால் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமானதுதான்.
ஆனால், வரலாற்றுக் காலத்திலிருந்தே புறக்கணிக்கப் பட்டுவந்த அந்தச் சமூகத்தினருக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்களை ஒப்பிட்டால், அவரது இலங்கைப் பயணத்தின் மூலம் உண்மையாகவே கிடைக்கும் பலன்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும். சிறிய நகரமான நோர்வுடைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 35,000 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். குறுகலான பாதைகளில் பேருந்துகள் செல்ல முடியாததால் பலர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்தே வந்தனர். அம்மக்களின் மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதால், இந்தியா மீதான ஈர்ப்பின் வெளிப்பாடு என்றும் இதைக் கருதலாம். அதுமட்டுமல்லாமல், மலையகப் பகுதி அரசியல் தலைவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தனர்.
உதவிகள் போதாது
இந்தப் பகுதிக்கு முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது என்பது, மலையகப் பகுதி மக்களின் பொருளாதார, அரசியல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விஷயம். 2015-ல் நடந்த அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கே கூட்டணிக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர் மலையகத் தமிழர்கள்.
மோடியைச் சந்தித்த மலையகப் பகுதி அரசியல் தலைவர்கள், அப்பகுதி மக்களின் கல்விக்குப் பெரிய அளவில் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டு க்கொண்டனர். அப்பகுதியில் உள்ள பல பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது மாணவர்களின் உயர் கல்வி, வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது. புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மலையகப் பகுதிக்கு, இந்தியாவின் உதவி கிடைப்பது வரவேற்புக் குரியதுதான். ஆனால், மறக்கப்பட்ட அந்த மக்களுக்கு இலங்கை அரசு செய்ய வேண்டிய விஷயங்களுக்கு இந்தியா துணையாக இருந்தாலே போதும்.
அங்கீகாரம் இல்லை
மிகக் குறைந்த கூலிக்குக் கடும் உழைப்பைத் தந்து பெருமளவில் லாபத்தையும் ஏற்றுமதி வருவாயையும் பெருக்கித் தந்த மலையகத் தமிழர்கள், பல ஆண்டுகளாகத் தோட்ட நிறுவனங்களாலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்டுவந்ததால் தற்போது விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டங்களில் மலையகத் தமிழர்களின் தியாகம், வட மாகாணத் தமிழர்களால் பெரிய அளவில் பேசப்படவில்லை. 2009-ல் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் பெரும்பாலானோர் மலையகப் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் எனும் விஷயமும் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வட மாகாணத் தமிழர்கள் மீது பரிவு காட்டும் தமிழக அரசியல் தலைவர்கள், பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் பணிபுரிவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்த மக்களைப் பற்றிப் பேசுவதேயில்லை. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இம்மக்கள் குறித்து, இந்திய அரசும் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.
கூலி உயர்வு கோரி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்களைத் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் தங்களுக்கே உரிய பாணியில் நீர்த்துப்போகச் செய்துவிட்டன. மலையகத் தமிழர் சமூகத்திலிருந்து படித்து முன்னேறுபவர்கள் உண்டு. அதேசமயம், மேற்காசிய நாடுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காகப் பல பெண்கள் செல்கிறார்கள். மிகக் குறைந்த சம்பளத்துடன் கடும் சுரண்டலுக்கு ஆளாகும் அவர்களில் சிலர் பிணமாகத்தான் நாடு திரும்புகிறார்கள்.
2015 தேர்தலில் ராஜபக்சவுக்கு ஆதரவளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்ட மலையகத் தமிழர்கள், அந்தத் தேர்தலின்போது உருவான ‘தமிழ் முற்போக்குக் கூட்டணி’யைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்கு ஆதரவளித்தனர். அந்தக் கூட்டணியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தலைவர்கள், போருக்குப் பின்னதான சமரசப் பணிகள், தமிழர் பிரச்சினைகளுக் கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தாமதமாவது குறித்துக் குரல் எழுப்பிவருகிறார்கள்.
உழைப்பும் ஏமாற்றமும்
மலையகத் தமிழர்களுக்கும் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கான அரசியல் கடமை இலங்கை அரசுக்குத் தேவை. கடந்த டிசம்பரில், மலையக மக்களுக்குக் குறிப்பிட்ட அளவு நிலங்களை வழங்க அமைச்சரவை முடிவுசெய்தது. தாமதமான நடவடிக்கை என்றாலும், நிலமற்ற அம்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முக்கிய நடவடிக்கை இது. இந்தியாவும் 14,000 வீடுகள் கட்டித் தருவதாகக் கூறியிருக்கிறது. சுமார் 1,60,000 வீடுகள் தேவை எனும் நிலையில், இது மிகக் குறைவான எண்ணிக்கைதான். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கும் இலங்கை அரசு, தோட்டத் தொழிலாளர் சமூக வளர்ச்சிக்கான தேசியச் செயல் திட்டத்தைத்(2016-2020) தொடங்கிவைத்திருக்கிறது. எனினும், இதன் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அண்டை நாடு எனும் வகையில் இந்தியா வெளியிலிருந்து உதவுவதில் எல்லைகள் இருக்கும் சூழலில், மோடியின் வருகையை ஒட்டி எழுந்திருக்கும் உற்சாகம் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. அத்துடன் உரிமைகள் கொண்ட குடிமக்களாக அல்லாமல் இந்தியாவையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் மலையகத் தமிழர்களுக்கு ஏற்படலாம்.
நோர்வுட் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இலங்கையின் இன்றியமையாத முதுகெலும்பு என்று மலையகத் தமிழர்களைப் புகழ்ந்தார். ‘ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை’ எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், உறுதியான ஆற்றலும் முயற்சியும் கொண்ட மனிதனிடம் செல்வம் தானே சென்று சேரும் என்று குறிப்பிட்டார். ஆனால், தங்கள் உழைப்புக்கும் கண்ணீருக்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எந்த அங்கீகாரமும் பெற்றிராத ஒரு சமூகத்திடம் இதை அவர் சொன்னதுதான் நகைமுரண்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT