Last Updated : 06 Nov, 2013 11:00 AM

 

Published : 06 Nov 2013 11:00 AM
Last Updated : 06 Nov 2013 11:00 AM

இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!

தாகூர் “இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை” என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் “கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றுதான் சொல்கிறார்.

அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். தனியார் பள்ளிகளின் குறைபாடுகளோ சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வி என்பது பண்டம். பொருளின் தரத்தை, சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தை விதிகளும்கூட கல்வி என்னும் பண்டத்துக்குப் பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியைத் தர முடியாது. ஆனால், அரசாங்கம் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது.

புதிய திட்டம்

பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளைக் களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்ட அரசு, இப்போது தன் பணத்தில் ஒரு தனியார்மயக் கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம். கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகள் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்தப் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம் என்கிறது அரசு.

இதில், 40% மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கும். 60% மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தன் விருப்பம்போல் சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியைப் பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே.

இப்போதைய நிலையில், மாநில அரசு களின் பணி, நிலம் ஒதுக்குதல் அல்லது ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைத்தல் மட்டுமே. பள்ளியின் முழுக் கட்டுப்பாடு, பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். நாடு முழுவதும் 3,162 பள்ளிகள் இப்படித் தொடங்கப்பட உள்ளன (தமிழ்நாட்டில் 355).

தனியார் தங்கள் இஷ்டம்போல் பள்ளிக்குப் பெயர் வைத்துக்கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதுவே அரசு-தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.

பாதிப்புகள் என்ன?

இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவை: 1. தனியார் துறை என்பது எல்லா விதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்கிறது. 2. அரசுப் பள்ளி முறையைவிட, தனியார் கல்விமுறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒப்புக்கொண்ட திட்டம் இது. 3. அனை வருக்கும் சமமான தரமான கல்வி தரப்படும் என்ற அரசியல் சாசனச் சட்ட விதி இதன் மூலம் அப்பட்டமாக மீறப்படுகிறது. 4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாகக் கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டிருக்கிறது. 5. உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அதிகமாக உள்ளது. அதே சமயம், எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது. 6. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது, இந்திய அரசின் அடிப்படைக் கல்விக் கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம், கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை. 7. இத்திட்டமே லாபம் ஈட்டும் துறைகளுக்கானது. லாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்ளது. 8. கல்வியுரிமைச் சட்டம், தேசிய கலைத் திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளன. 9. சமூகப் பங்கேற்பும் சமூகக் கண்காணிப்பும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. 10. தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது. 11. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில்கூட சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில், அரசுப் பணத்தையும் நிலத்தையும் கொடுத்துத் தனியாரை நிர்வகிக்கச் சொல்வது விதிமுறை மீறலே; நீதித் துறையில்கூட இவர்களது ஒழுங்குமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. 12. இத்திட்டம் கட்டற்ற லஞ்சலாவண்யத்தை ஊடுருவச் செய்து, மிக மோசமான விளைவுகளைச் சமூகத்தில் உருவாக்கும். 13. ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வித் துறையில் தனியார்மயத்துக்கு வித்திடுவது, அளவிட முடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். 30-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது.

அவசரநிலைக் காலக் கோலம்

இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம். மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் மத்திய அரசு நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய அரசு வேகமாக இயங்குகிறது. மத்திய அரசு பள்ளிக்கல்வி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது எல்லாம் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே.

அதேபோல், பன்முகத்தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என மத்திய அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கையை அள்ளித் தருகிற அரசு, கனிமவள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாகச் சட்டரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய்களை அதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் அரசு இப்போது கல்வித் துறையையும் முழுக்க தாரைவார்க்க நினைக்கிறது.

ஆப்பிரிக்காவுக்கும் பின்னே

உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட நம்மைவிட அதிகமாகக் கல்வியில் முதலீடு செய்கின்றன. 16 ஆப்பிரிக்க நாடுகளைப் பட்டியலிட்டு, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிடப் பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிடப் பன்மடங்கு அதிகம் என்று சென்னும் டிரீஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒரு அளவீட்டில்கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு அது ஆழமாக மூழ்கியுள்ளது!

- நா. மணி, பேராசிரியர் - தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x