Published : 19 Sep 2013 12:47 PM
Last Updated : 19 Sep 2013 12:47 PM
ஒசாமா பின்லேடன் செத்துப் போனதற்கு அப்புறம் அல் காயிதாவைப் பற்றிப் பேச்சே கிடையாது. அண்டார்டிகா நீங்கலாக பூமிப் பந்தின் அத்தனை சந்து பொந்துகளிலும் பிராஞ்ச் வைத்துக்கொண்டு, வெடிக்கிற குண்டுகளுக்கெல்லாம் பொறுப் பேற்றுக்கொண்டு, அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டு, அமெரிக்காவைத் திட்டிக்கொண்டு, மிரட்டிக்கொண்டு என்ன ஒரு களேபரம் இருந்தது? அதெப்படி திடுதிப்பென்று ஒன்றுமே இல்லாமல் போகும்?
அட, அல் காயிதாவை விடுங்கள். இந்த அமெரிக்காவுக்கு என்ன வந்தது? ஒசாமாதான் அல் காயிதா; அவர் போய்விட்டால் ஒன்றுமில்லை என்று அப்படியே கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்களா? ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு வெளியேயும் பரவிக்கிடக்கும் அந்த எண்ப தாயிரத்தி சொச்சம் மிலிட்டரி வாலாக்களெல்லாம் விஆரெஸ்ஸில் போய் விட்டார்களா?
போன வருஷம் வரைக்கும் அவ்வப்போது இராக்கில் வெடிக்கும் கார் குண்டுவெடிப்புகளுக்கு போனால் போகிறதென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அல் காயிதா பொறுப்பேற்றுக்கொண்டிருந்தது. பிறகு படிப்படியாக அதுவும் குறைந்து நிசப்த சங்கீத ஒலிபரப்பில் இறங்கிவிட்டது. சரித்திரம் அறிந்தவர்கள், இந்த மாதிரியெல்லாம் இருக்காதே என்று சந்தேகப்படாமல் இருக்கமாட்டார்கள்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தைய அந்த செப்டம்பர் 11-ம், அதன் தொடர்ச்சியான ஆப்கன் யுத்தமும், அதற்கும் தொடர்ச்சியான ஒசாமா பின்லேடன் மரணமும் அல் காயிதாவை முற்றிலும் நிர்மூலமாக்கிவிட்டதென்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அல் காயிதா இருக்கிறது. ஆனால் என்னவாயிருக்கிறது என்பதில்தான் இரண்டு கட்சி வாதம் வருகிறது.
ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு சயீஃப் அல் அடெல் என்பவர் அல் காயிதாவின் கமாண்டராக அறிவிக்கப்பட்டார். கொஞ்ச நாள்தான். அவரை குல்சாரிலால் நந்தா அல்லது ஓ.பன்னீர்செல்வம் வழியில் போகவிட்டுவிட்டு ஐமன் அல் ஜவாஹிரி 2011 ஜூனில் கமாண்டரானார்.
ஜவாஹிரி, அடிப்படையில் ஒரு டாக்டர். ஒசாமா இருந்தவரைக்கும் அவர் உடம்பு சொஸ்தத்துக்கும் வைத்தியம் பார்த்துக்கொண்டு, மிலிட்டரி நடவடிக்கைகளுக்கும் ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின் இவர்தான் என்று அனைவருமே எதிர்பார்த்தபோது சம்மந்தமில்லாமல் இன்னொ ருத்தரை கமாண்டராக்கிவிட்டு, ஒரு இடைவேளைக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது.
அட இப்போ மட்டும் தெரியுமா என்ன? ஆனால் இத்தனை காலமாக இல்லாமல் இப்போது ஜவாஹிரியிடமிருந்து ஒரு லிகிதம் வந்திருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால் ஜவாஹிரி பெயரில் வெளியாகி யிருக்கும் முதல் அறிக்கை. இது ஜிஹாதிகளுக்கான அறிவிப்பு அல்லது அறைகூவல்.
மேலோட்டமாகப் பார்த்தால் விசேஷமாக ஒன்றும் தெரியாது. காஷ்மீரில் யுத்தம் செய், காகசஸில் யுத்தம் செய், அல்ஜீரியாவை காலி பண்ணு, சைனாவின் சின்சியாங்கைக் குறி வை என்று கட்டளைத் தம்பிரானாக நாலைந்து பேராகிராஃபுக்குப் பேசியிருக்கிறார்.
காஷ்மீர் நமக்குப் புரியும். காகசஸ் பிராந்தியத்தில் ரஷ்யர்கள். சின்சியாங் என்றால் கசக்ஸ்தானை ஒட்டி வரும் சீன ஏரியா. அப்புறம் வடக்கு ஆப்பிரிக்கா.
ஆனால் என்ன இது? அங்கே சிரியா பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா அடிக்காவிட்டால் நான் இருக்கேன் சப்ஸ்டிட்யூட்டுக்கு என்று லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு இஸ்ரேல் சோடாபாட்டிலுடன் போஸ் கொடுக்கிறது. ரத்தமாவது ஏதாவது கொதிக்க வேண்டாமா? நரம்புகிரம்பெல்லாம் முறுக்கிக்கொண்டுவிடாதா? எல்லையில் ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டதாகத் தகவல் தெரிந்தால் நம் கேப்டன் விஜயகாந்துக்குக் கண் சிவக்கிற அளவுக்குக் கூட ஐமன் அல் ஜவாஹிரிக்குக் கோபம் வராதது ஏன்? தலைவராகி, தன் பெயரில் வெளியாகும் முதல் அறிக்கையில் இஸ்ரேலைப் பற்றியோ அமெரிக்காவைப் பற்றியோ அலட்டிக்கொள்ளவே செய்யாமல் காஷ்மீருக்காகக் கவலைப்படும் கருணைக்கடலாக இவர் எப்போது மாறிப் போனார்?
ஒன்றும் புரியவில்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் அல் காயிதாவின் ஸ்பான்சராக இருந்த அமெரிக்கா முப்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஸ்லாட்டு வாங்கி ஸ்பான்சர்ஷிப் பிடித்துவிட்டதோ என்று சந்தேகம் எழுகிறது. மிச்சமிருக்கும் ஜிகாதிகளின் கவனத்தை ரஷ்யா, சைனா பக்கம் திருப்பிவிட்டு விட்டால், தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது யாரும் பாத்ரூம் கதவைத் தட்டமாட்டார்கள் பாருங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT